412. “இன்று நீரென்னை யருள்செய்த திதுவே
 
       லென்னு யிர்க்கொரு நாதர்நீ ருரைத்த
தொன்றை நான்செயு மத்தனை யல்லா
     லுரிமை வேறுள தோவெனக்“ கென்று
தன்ற னிப்பெருங் கணவரை வணங்கத்,
     தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச்,
சென்று மாதவன் சேவடி பணிந்து
     திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
9

     (இ-ள்.) இன்று...கணவரை வணங்க - “நீர் இன்றைக்கு
எனக்கு அருளிச் செய்த கட்டளை இதுவேயானால், எனது உயிர்
நாதராகிய நீர் அருளிச் செய்ததெதுவேயாகிலும் அஃதொன்றை
அவ்வாறே செய்வதைத் தவிர எனக்கு வேறு உரிமை யுண்டோ?“
என்று சொல்லித் தமது ஒப்பற்ற பெரியராகிய கணவரை வணங்க;
தாழ்ந்து..எதிர் வணங்க
- அவ்வாறு வணங்கிய மனைவியாரைப்
பணிந்து நாயனார் தாமும் எதிர் வணங்க; சென்று....பெரியாள -
போய் மாதவருடைய திருவடியைப் பணிந்து திகைப்புடன் நின்றார்
திருவினும் பெரியாராகிய அவ்வம்மையார்.

     (வி-ரை.) இன்று - இத்தனை காலமும் பணிக்கப்பெற்ற
எத்தனையோ பணிகட்கெல்லாம் தேவரீரது சொல்வழி அமைந்து
நின்றதுபோலவே இன்றைக்கு நிகழ்ந்த இந்தக் கட்டளை என்றதாம்.
அருள் செய்தது - அடியேன் உய்யும்படித் தேடித் தந்த
திருவருளுருவமாகிய செயல்.

     உயிர்க்கொரு நாதர் - உலகிலே ஏனைக் கணவர்கள் உடம்பு
நாயகர்களாக மட்டும் நின்றொழிவர்; தேவரீர் அவ்வாறல்லாது என்
உடம்பிற்கேயன்றி உயிருக்கும் ஒப்பற்ற நாதராய் உயிர்க்குறுதி
செய்தீர்; உயிர் உடம்பினும் சிறந்தது; ஆதலின் உடல் பற்றிய
இக்கட்டளையை மறுக்ககில்லேன். உரைந்த தொன்றை நான் செயும்
அத்தனை யல்லால் உரிமை வேறுளதோ எனக்கு- “கற்பெனப்படுவது
சொற்றிறம்பாமை“ என்பது விதி. ஈண்டுச் சொல் என்பது இறைவன்,
பெரியோர் முதலியோரது சொற்களைப் பொதுவகையானும்,கணவனது
சொல்லைச் சிறப்புவகையானும் குறிக்கும். “தெய்வந் தொழாஅள்
கொழுநற் றொழு தெழுவாள்“ என இக்கற்பிலக்கணத்தை மேம்பட
விரித்துரைத்தார் நாயனார். மேற்பாட்டிலே தெளிந்த வகை
இதுவெனக் குறித்தவாறு.
இந்நாட் பெருவாரியாகப் பெண்ணுரிமை
பற்றிப் பேசுவோர் இதனைக் குறிப்பாராக.

     இவ்விடத்து, நாயனார் பெருமையினும் மனைவியார்
பெருமையே சாலச் சிறந்தது என்றும், அந்நாளில் காமநூல்கள்
பரவியிருந்தன என்றும்,பெண்களை வெறுங் காமப் பொருளாகக்
கருதியது அந்நாள் உலகம் என்றும், அவர்கள் வெறுங் காமப்பொரு
ளல்லாது அவர்களிடத்து அதற்கு மேலாகிய இறைமை தாய்மைத்
தன்மை விளங்கக் காண்பதை நாயனார் மூலம் உலகிற்கு
அறிவுறுத்தலே கடவுளது அருணோக்கம் என்றும், இன்ன பிறவும்
ஆராய்ச்சிகள் செய்வாருமுண்டு. அவை ஒன்றும் ஈண்டைக்குப்
பொருந்தாமை யறிந்து கொள்க. அடியார் வேட்டதளித்தலே சிறந்தது;
பெறற்கருங் கற்பிற் காதலிதானும் அவ்வாறளிக்கப் பெறும்
சிறப்பினை நோக்கத் தாழ்ந்தவள்; இக்காதற் பொருளையும்
மற்றெதனையும் கொடுத்து அதனைப் பெறுதல் தகும்; இதுவே
உயிர்களுக்கு வீடுபேறு தரும் உறுதிப் பொருள் என்று கொண்டு
ஒழுகுதல் நாயனாரது வாழ்க்கைத்திறம் கணவனார் கருத்தமைந்து
நிற்றல் கற்பிலக்கணமாம் என்பது நாயகியாரது வாழ்க்கைத்திறம்.
இவையே இந்நிகழ்ச்சியில் உலகிற்கு அறிவுறுத்தல் ஈண்டுத் திருவருட்
செயல் எனபதாம். “தம்தொண்டர் மறாத வண்ணமுங் காட்டுவான்
வந்தார்“ (407) என்று முன்னரே இச்சரித தத்துவத்தை ஆசிரியர்
குறித்தமை காண்க. இங்குத் தொண்டர் மறாத - என்பது
மனைவியாரையும் உள்ளிட்ட குறிப்பும் காண்க.

     அந்நாளில் காம நூல்கள் பற்றி யிருந்தன என்பதும்
பொருந்துவதன்றாம். முன்னாளில் காம நூல் முறைப்பட வகுத்தனர்;
அதனில் விதி விலக்குகளும் பிறவும் வகுத்தனர். ஆனால்
இந்நாளிலோ எவ்வித வரையறையும், விதிவிலக்குகளும்,
முறையுமின்றிக் காமப்பேச்சும், காமம் பெருக்கும் எண்ணங்களும்,
அவ்வகைக் கதைகளும், காட்சிகளும், செயல்களும் எங்கும்
தங்குதடையின்றி பெருகித் தலை விரி கோலமாய் மக்களைத்
தடுமாறச் செய்வது அறிந்தோர் யாவர்க்கும் நன்கு புலனாகும்.

     வணங்க - இதுவரைத் தம்மை ஆட்கொண்டு காத்தமைபோல
இங்குக் கடை போகக் காத்து உயிர்க்குறுதியாகிய செயலிற்
பணித்தமை பற்றிக் கணவனாரை வணங்கினார் அவர்பணியி
னின்றமைக் கடையாளமாக வணங்கினார் என்பதுமாம். தன்
தனிப்பெருங் கணவரை
- கற்பிலக்கணங் காத்த மனைவியார்
நாயனாரை ஒப்புயர்வற்ற கணவராகவே கொண்டு அந்நிலையிலே
வணங்கினார் என்பார் பெருங்கணவரை என்று குறித்தார்.

     எதிர் வணங்க - “இல்லையே யென்னாத“ தமது
திருத்தொண்டின் இயல்பை இந்நிலையிலே தமது சொல் மறாது
காத்தமை பற்றியும், அவ்வாறிசைந்தமையினாலே அவர்
மாதவர்க்குரிமையான பொருளாயினமை பற்றியும் நாயனாரும்
அவரை எதிர் வணக்கஞ் செய்தனர் என்க.

     மாதவன் - “இம் மெய்த்தவர்க்குக் கொடுத்தனன்“ என்று
கணவனார் அறிவித்தனராதலின் அவர் அறிவிக்க அறிந்த
மனைவியார் அவ்வாறே கொண்டனர் என்பார் மாதவன் என்றார்.

     திகைத்து - இஃது பெண்மையின் இயல்புக் குணங்களில்
ஒன்றாகிய பயிர்ப்புப் பற்றியாம். கற்புடையார்க்குப் பயிலாதவற்றி
லருவருப்புண்மைபற்றி இஃதாம் என்பர். நூல்களில் விதித்த
பெண்மைக்குரிய நாற்பெருங் குணங்களும் பெண்களினின்றும் நீங்கி
வருவதே இயல்பு எனக் கொண்டொழுகும் இக்காலத்தே இதற்குப்
பொருள் விளங்காததாம் முன்னர்க் கலங்கித் தெளிந்து (411) என்ற
இடத்திற்போலவே இங்கு வேறு பலவாறும் பொருள் கூறுவாரு
முண்டு. திகைத்தலாவது சிவபத்தராய் இருக்கிறவர்கள் ஆகம
சாஸ்திரத்திற்கு விரோதமாகப் பிறருடைய மனைவியைக் கேட்க
மாட்டார்கள்; ஆனால் பத்தியைப் பரிசோதிப்பதற்காக இங்ஙனம்
வந்திருக்கலாமெனவும், வேறு மதஸ்தர்கள் கபட வேஷங்கொண்டு
கவர்ந்து கொள்வதற்கு வந்தார்களோ எனவும் சந்தேகப்படுதலாம்
என்பர் மகாலிங்கையர். பணிந்தபோது தம்மை நோக்கி ஏற்காது
நாயனாரையே நோக்கினார் தவசியார்; ஆதலின் தம்மிடம்
குற்றமெதுவோ உளதென்று திகைத்தனர் என்பர் ஆலாலசுந்தரம்
பிள்ளை. இவற்றின் பொருத்தங்களை ஆய்ந்துணர்ந்து கொள்க.

     திருவினும் பெரியாள - திரு - இலக்குமி; அவர்
தம்மைவேண்டித் தவஞ்செய்வார் எத்தன்மையராயினும்
அவர்பாலெல்லாம் அடைகுவர்; சிறந்தாரிடத்து விசேட விதியாகச்
சிறப்பு வகையாலே காணப்படுவதன்றிப் பொதுவகையாலே
பெரும்பான்மைத் தாழ்ந்தாரிடத்தே பட்டுப் பெரும்பான்மை
இழிதொழிற்படுவர். அம்மையார திலக்கணம் அவ்வாறன்றி
அத்திருவினும் மேம்பட்டு, அரன்பாலும் அடியார்பாலும் சார்ந்து
சிறப்புற்றது என்பது கருத்து. இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு.
எல்லைப் பொருளில் வந்தது.

     திருவினும் - திருவினாலும் - என ஐந்தாம் வேற்றுமை
ஏதுப்பொருளில் வந்ததாகக் கொண்டு, திரு - வீடுபேற்றுக்குக்
காரணமாகிய ஐசுவரியத்தன்மையானும் பெரிதுஞ் சிறந்தவர் என
உரைத்தலுமாம். உம்மை கணவனார் கருத்தமைதலாகிய உலகச்
சார்பின் கற்பு நிலையிலே பெரியரா யிருந்து தமக்கும் கணவர்க்கும்
உறுதி தந்ததேயன்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை. “திருவுடை
மனைவியாரை“ (428) என்றதும் காண்க. “உருவிலான் பெருமையை
யுளங்கொளாதவத் திருவிலார்“ (காந்தாரபஞ்சமம் - திருப்பைஞ்ஞீலி
- 2 ) என்று ஆளுடைய பிள்ளையார் திரு என்பதனை விளக்கி
யருளியதும் காண்க.

     இங்கு நாயனார் மனைவியாரைத் தந்ததும், மனைவியார்
அதனை ஏற்று நின்றதும் உலகியலுக்கொவ்வாத தெனவும், இச்சரிதம்
உலக வாழ்க்கைக்குதவாத தொன்றெனவும் பலவாறு பிதற்றுவாரு
முளர். நாயனார்க்கு இயற்பகையார் என்ற பேர் வழங்குவதையும்
இவர்கள் மறந்து பேசுவர். இச்சரிதம் உயர்ந்ததோர் குறிக்கோளை
உட்கொண்டு விளங்குவதென்பதை அவர் அறியார். “....இல்லாளை,
யன்னியர் தோள்சேர்த்தி யரும்பொருளை யீட்டியிழி, கன்னியர்
தோள் சேருங் கலிகாலம்“ என்றது முதலாக இக்காலக்
கொடுமையைப்பற்றி ஒரு பெரியார் கூறி வருந்திய உண்மைகள்
இங்கு நினைவு கூர்தற்பாலன. மணம், இருவர் உயிருள்ள வரையும்
நிகழவதோர் உறுதிச் செயல் என்பதொழிந்து, மனமுள்ளவரை
நிகழ்த்தக்கதும் தவறி நிகழத்தக்கதும் ஆவதாம் என்ற எண்ணம்
தம்முட் பரவிவரும் இந்நாள் மாக்கள் தமது ஊனக் கண்கொண்டு
இச்சரிதத்தை ஆய்ந்து தெளிய வல்லரல்லரென விடுக்க.

     நீரெனக்கருள் - ஒன்றை நான்செய்வ தலதுமை யல்லால் -
என்பனவும் பாடங்கள்.  9