413. மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தா
 
       மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே,
“யாது நானினிச் செய்பணி?“ யென்றே
     யிறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
     “தைய றன்னையான் றனிக்கொடு போகக்
காதன் மேவிய சுற்றமும் பதியுங்
     கடக்க நீதுணை போதுக!“ வென்றார்.
10

     (இ-ள்.) வெளிப்படை. மனைவியாரை முன்னர்க் கொடுத்த
மாதவராகிய நாயனார் முன்னையினும் மனமகிழ்ச்சியுடன்
பேருவகையிற் சிறந்து, அவரை நோக்கி, “இனிமேல் நான்செய்
பணியாது?“ என்று கூறிப் பணிந்து நிற்க, அவரை எதிர்நோக்கி
இயல்பிலே வேதியராகிய தலைவனார் “இத்தையலை நான் தனியாகக்
கொண்டு செல்லும்போது (இவள்பாலும் உன்பாலும்) ஆசையுடைய
சுற்றத்தாரையும் இப்பதியவர்களையும் நான் கடந்து செல்ல நீ
துணையாகப் போதுவாயாக!“ என்று கூறினார்.  

     (வி-ரை.) மாதவர் - “செய்தனவே தவமாக்கும்“ அத்தனே
மெய்த்தவ ராகி வந்து ஏற்றாதலின் அவர்க்கு மாதினைக்
கொடுத்ததே மாதவமாயிற்று. “பரனுணர்வினா லுணரும் மெய்த்தவரை
மேவா வினை“ - என்புழிப்போலக் கொடுத்த என்ற பெயரெச்சம்
தொழிலெஞ்சி நின்றது. இஃது ஒரு பெரியா ருரைக்குறிப்பு. வந்த
மாதவரைப் போலவே நாயனாரும் மாதவரேயாம் என்பது குறிப்பு.
அவர் இரு மாதரை யுடையராயும் தம்மாதரை மறைத்து வேடத்தால்
மாதவராய் வேறு மாதினை விரும்பியவர்; இவர் ஒரு
மாதினையுடையராயும் அவர்பால் வேட்கை விடுத்த மாதவர் என்று
குறிப்புக் கொள்வாருமுண்டு.

     மனமகிழ்ந்து பேருவகையின் மலர்ந்தே - முன்னரே
முன்னையின் மகிழ்ந்த - (410) நாயனார் தாம் கொடுத்த கொடை,
அம்மையார் செயலின் நிறைவெய்தியது கண்டபோது அதனினும்
பெரியதோர் அளவிடற்கரிய மகிழ்ச்சி பெற்று உவகையிற் சிறந்தார்
என்பதாம். “ஈத்துவக்கும் இன்பம்“ என்றார் நாயனாரும்.

     மலர்தல் - எல்லாக் கரணங்களும் உவகையிற் சிறத்தல்.
“மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தரர்“ (252) என்ற் இடத்துக் காண்க.

     இனிச் செய்பணி - இப்போது செய்தது முன் பணித்த பணி.
இனிமேற் செய்யும் பணி யாது? என்பதாம்.

     மாதவராய் நின்றவர் தம்மை - என்று கூட்டிக்கொள்க.
நின்றவர் தம் - நின்ற அவர்தம். எதிர் நோக்கி - “எதிரே சொன்ன
போதிலும்“ (410) என்ற இடத்திற் போலவே இங்கும் அவரை நேரிற்
பார்த்து என்க. புறத்தினும் கூறத்தகாத மொழி என்பது குறிப்பாம்.

     சாதிவேதியர் - இங்குச் சாதி என்றது இயல்பு என்ற
பொருளில் வந்தது. சாதிமுத்து, சாதி மாம்பழம் முதலிய வழக்குகள்
காண்க. “சாதியார் பளிங்கின்னொடு“ (காந்தாரபஞ்சமம் - கோயில்
- 7) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் முதலிய ஆட்சி
வழக்கும் காண்க. சாதி - உயர்வு என்று கொண்டு,
திருமாலாதியர்க்கு வேதியர் என்றலுமாம். “வானோரந்தணனார்“
என்ற திருவாக்கும் காண்க.

     இங்கு வந்தவர், வேதியராகிய கோலத்தால் மட்டு மன்றி
இயல்பாலே வேதியர் என்க. பிறப்பு வேதியர் - சிறப்பு வேதியர் -
என்று பகுத்தும், பிறப்பு வேதியர் பின்னரே தோன்றினர் என்றும்,
இன்னபிறவும் இங்கு ஆராயப்புகும் உரைகள் ஈண்டைக்குப்
பொருந்தா என்க.

     “பசுபோதக் கவளமிடக் களித்துண்டு“ என்றபடி உயிர்கள்
தமது ஆன்ம போதங்களையெல்லாம் தரவாங்கும் இயல்பாகிய
ஏற்றல் என்கிற வேதியர் குணம் இயல்பிற் பொருந்துவது
சிவபிரானுக்கேயாம்.

     உபநயனம், பஞ்சசிகை, தோல், நூல் முதலிய வேதியர்
கோலங்களும் சிவபெருமானுக்கே இயல்பிற் பொருந்துவன. 15-ம்
பாட்டினுரை காண்க. நீ ஒருவனே பிராமணன் - என்று
சிவபெருமானை வேதங்கள் பேசும். ஏனைய விட்டுணு முதலிய
தேவர்களுக்கு வெவ்வேறு வருணங்கள் கூறப்பெற்றன.

     ஆயின் இரத்தலின் இழிபு இவ்வேதியராகிய இறைவனைச்
சாராதோ? எனின் - சாராது; இவர் வாங்குவது, தன் பொருட்டன்றி
உயிர்களாகிய நமக்குத் தரும் பொருட்டே செய்யப் பெறுதலின்
என்க.

“பரந்துல கேழும் படைத்த பிரானை, யிரந்துணி யென்பர்க;
                                ளெற்றுக்கிரக்கும்?,
நிரந்தர மாக நினையு மடியார், இரந்துண்டு தன்கழ
                             லெட்டச்செய் தானே,“

     என்பது திருமூலர் திருமந்திரம். (ஏழாந் தந்திரம் - 185.)

     தலைவர் - எல்லா உயிர்களையும் தம்மடிமையாக உடையவர்.
முதல்வராதலின் கொண்டு போதற்குரியர் என்பது குறிப்பு.

     தனிக்கொடு போக - சிவபெருமான் எல்லா வுயிர்களிடத்தும்
கலந்து நிற்பவர்; ஆதலின் வேறு எவரும் தனியாயுள்ளாரிலர்.
இவரோ அவ்வாறு கலந்தும் தான் தனியாயு மிருப்பவர். ஆதலின்
தனிக்கொடு என்றார். போக - போகும் பொருட்டு என்றலுமாம்.

     காதல - இங்கு இவர்கள் மேல் சுற்றத்தாரும் பதியவரும்
வைத்த பற்றினைக் குறித்தது. பதி - பதியிலுள்ளார்க்கு ஆகுபெயர்.
கடக்க - அவர்கள் செய்யக்கூடிய தடைகளை யெல்லாம் கடந்து
செல்ல.

     துணை போதுக - பின்னர் “நண்ணிய மனைவியோடு
நம்முடன் போது கென்று“ (436) நாயனாரையும் உடன் கொண்டு
போகின்றார் என்னும் நிகழ்ச்சிக் குறிப்பு.

     கடக்க - சுற்றம், பதி - என்ற இப்பற்றுக்களையும் நீ
விட்டொழிய என்ற உட் குறிப்பும் காண்க. 10