414. என்றவ ரருளிச் செய்ய “யானேமுன் செய்குற்
                                   றேவ
 
  லொன்றிது தன்னை யென்னை யுடையவ ரருளிச்
                                  செய்ய
நின்றது பிழையா“ மென்று நினந்துவே றிடத்துப்
                                  புக்குப்
பொன்றிக ழறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய
                                   வீக்கி,
11

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வேதியர் அவ்வாறு
அருளிச்செய்தாராக “இவர் எடுத்துரைக்கு முன்னரே உணர்ந்து
நானே செய்யக் கடவதொன்றாம் குற்றேவல் இது; இதனை என்னை
உடையவராகிய இம்மாதவர் எடுத்துச் சொல்லுமளவும் செய்யாது
தாமதித்து நின்றது என்மேற் பிழையாம்“ என்று தமக்குள்
நினைந்தவராய் மனையினுள்ளே வேறிடத்திலே சென்று, பொன்
திகழும் நல்ல ஆடையை அணிந்துகொண்டு, அதன் மேல் அழகிய
கச்சினையும் வீக்கிக் கட்டிக் கொண்டு.


     (வி-ரை.) முன - இவர் எடுத்துக் காட்டி ஏவும் முன்னரே.
இச்செயலால் இது விளையும் என உணர்ந்து முன்னமே.செய்
குற்றேவல் - தம்மையும் தம்பக்கல் உள்ளவைகளையும் அரனுக்கும்,
அடியவர்க்கும் உடைமையாகக் கொண்டு ஒழுகுபவர் நாயனார்.
“அன்ன தெம்பிரானடியவ ருடைமை“ (410) என்றமை காண்க.
“அன்றே என்ற னாவியும் உடலும் உடைமை யெல்லாமும், குன்றே
யனையா யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ? என்ற
திருவாசகமும் காண்க.

     உடையவர் - ஆளாக உடையவர். ஆளாயினவன் தன்
தலைவனுக்கான பணிகளை யெல்லாம் அவன் ஏவா முன்னமே
அறிந்து செய்யக் கடவன்; ஆதலின் அவர் சொல்லுமளவும் செய்யாது
நின்றது பிழை என்பது குறிப்பு.

     நினைந்து - தமக்குள்ளே கொண்டு. மனநிகழ்ச்சி.

     வேறிடத்து - மனையினிடத்து ஆடை முதலிய
அணிதற்குரியதான தனியிடம். Dressing Room என்பர் நவீனர்.
நாயனார் “அளவில் செல்வத்து வளமையினமைந்தார்“ (405).
ஆதலின் இவரது மனையிலே உரிய ஒவ்வோர் செயலுக்கும்
ஒவ்வோர் தனியிடங்கள் அமையப் பெற்றன என்க.

     வேறிடம் - போர்க்கோலங் கொள்ளுதற்குரிய பொருள்கள்
வைத்திருக்குமிடம் என்றும் ஆயுதசாலை என்றும் கூறுவாறு முண்டு.
ஒருவகையாற் கொள்ளப்படுவதல்லது பொது வகையாற்
படைத்தொழில் வணிகர்க்குரிய மரபுத் தொழிலன்று

     பொன்திகழ் அறுவை - பொன்னூலினாலமைந்து விளங்கிய
உடை (பொற்சரிகை என்பது இந்நாள் வழக்கு). அறுவை - நெய்யுந்
தறியினின்றும் அறுத் தெடுத்தலின் அறுவை என்பர்;
துணித்தெடுத்தலின் துணி என்பது போல.

     கச்சு - இடையிலே துணி அவிழ்ந்து நழுவாமல்
வலுப்படுத்தவும், உடையசைவினாற் போரில் இடையூறு நேர்படா
வண்ணம் உடையை  அமைவுபடுத்தி நிறுத்தவும், இறுக்கிக்
கட்டுவதோர் உடை வகை. அறுவை சாத்தி எனவும், கச்சு வீக்கி
எனவும் வேறுபடக் கூறிய வகை காண்க.

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. என்று
அவர் அருளிச் செய்ய - யானே முன் செய் ஏவல் - இது தன்னை
அருளிச் செய்ய நின்றது பிழை - என்று -நினைந்து - புக்குச் - சாத்
- வீக்கி - ஏந்தி - வந்து - எதிர் வணங்கி - அவரை முன்போக்கிப்
- பின்னே - அரியேறு போல்வார் - துன்னினாரை முன் கூடி
வீழ்த்த நேர்வார் - துணையேயாகப் - போயினார் - என்று கூட்டி
முடிக்க. 11