415.
|
வாளொடு
பலகை யேந்தி வந்தெதிர் வணங்கி
மிக்க
|
|
|
ஆளரி
யேறு போல்வா ரவரைமுன் போக்கிப்
பின்னே
தோளிணை துணையே யாகப் போயினார் துன்னி
னாரை
நீளிடைப் படமுன் கூடி நிலத்திடை வீழ்த்த
நேர்வார்.
|
12
|
(இ-ள்.)
வெளிப்படை.வாளும் பலகையும் ஏந்தியவராய் மீண்டு
எதிரே வந்து வணங்கி வீரம் மிக்க ஆண் சிங்கம் போன்ற
நாயனார், தம்மை மறுத்து எதிர்ந்து வந்தவர்களை யெல்லாம்
நெருங்கி அடர்த்து நிலத்தில் வீழ்த்த நேர்ந்தவராய், மாதவர் -
அம்மையார் எனும் அவ்விருவரையும் தமக்கு முன்னே போகச்
செய்து தாம் பின்னே போயினார்
(வி-ரை.)
வாளொடு பலகை ஏந்தி - வாளும்
பலகையும்
போர்க்கருவிகள். வாள் - எதிர்த்தாரை ஒறுக்கவும்,
பலகை -
அவரினின்று தம்மைக் காத்துக் கொள்ளவும்
பயன்படுவன.
Offensive and defensive weapons என்பர் நவீனர். பலகையி
னியல்பும் பயன்படும் வகையும் ஏனாதி நாயனார் புராணத்திலும்,
பிறாண்டும் காண்க. பரப்புடைய வட்டமாய் வெளியிற் குவிந்த
வடிவுடன் உட்புறம் கைப்பிடிக்கும் அமைப்புடன் கூடியது.
வெளிக்குவிந்த சதுரமாய் அமைவதுமுண்டு.
வாள் வலக்கையிலும், பலகை இடக்கையிலும் ஏந்தி என்க.
வந்து -
வேறிடத்துப் புக்கவர் முன்னையிடத்திற்கு மீண்டும்
வந்து.
ஆள் அரியேறு
- ஆள் - பிற எல்லாப் பிராணிகளையும்
ஆள்கின்ற - ஆளுந்தன்மையுடைய. ஆண்மையும் வீரமும்
குறித்த
உவமை. ஏறு - ஆண்.
முன்போக்கி - காவல் செய்வதற்காகத்
தாம் பின்னே
போயினர் என்க.
துன்னினாரை-
இச்செயலைத் தடுக்க என வருவித்துக்கொள்க.
துன்னினாரை - துன்னுவாரை என எதிர்காலங் குறித்தது.
நீளிடைப் படமுன் கூடி
- நெடுந் தூரத்திற் காணினும்
முன்சென்றுகிடைத்து.
நிலத்திடை வீழ்த்த
- இச் செயலுக்கு இடையூறாக
மேற்போந்து வராமல் தங்குமாறு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும்படிச்
செய்து ஒதுக்குவதே கருத்தல்லாமற் கொல்வது கருத்தன்று என்பது
குறிப்பு.
நேர்வார்
- இறந்த காலப் பொருளில் வந்த முற்றெச்சம்.
நேர்ந்தாராகி. ஒருப்பட்டாராகிய - ஆயத்தமுடையாராகி.
நேர்ந்தாராய்ப் போயினார் என்று முடிக்க.
தோளிணை துணையேயாக
- வேறொருவரும் தமக்குத்
துணையாக வேண்டாதவராகி. அரியேறு போல்வாராதலின் தமது
தோளேயன்றித் துணை வேறு வேண்டாராயினர். அரி தன் கையே
துணையாக யானையையும் அறைந்து வெல்வதாதலின் அரியேறு
போன்றாரிவரும் தோளிணையே துணையாகக் கொண்டார் என்க.
தோளிணையே துணையாக என்று ஏகாரம் பிரித்துக் கூட்டுக.
வேதியர் ‘தம்மைத் துணைபோதுக` (413) என்றழைக்கவே, அவர்க்குத்
துணை தாமும் தமக்குத் துணை தமது தோளிணையும் ஆக என்ற
நயமும் காண்க.
வாளொடு பலகை யேந்தி
- என்றதனால் அந்நாளிற் பலரும்
பொதுவாக ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தனர் எனவும் இந்நாளிற்
போலன்றி மக்கள் ஆயுதங்களை யாவருடைய அனுமதியுமின்றிக்
குற்றந் தவிர்க்கவும்
தன்னைக் காக்கவும் உபயோகித்து வரக்கூடியவர்களா
யிருந்தனர் எனவும்,வணிகர்களும் படைத்தொழில் போர்த்தொழில்
பயின்றிருந்தனர் எனவும் அறிகின்றோம். எனவே, முன்னாள்
நாகரிகத்தில் உயர்ந்து வருகின்றோம் என்றெண்ணிக்கொண்டே
அத்துணையும் நாகரிக நிலையினின்றும், ஆண்மை நிலையினின்றும்
இந்நாள் மக்களாகிய நாம் கீழே இறங்கி வருகின்றோம்
என்பதறிவாளிகள் கருத்து. 12
|
|
|
|