420. பெருவிற லாளி யென்னப் பிறங்கெரி சிதற
                               நோக்கிப்
 
  பரிபவப் பட்டு வந்த படர்பெருஞ் சுற்றத் தாரை
யொருவரு மெதிர்நில் லாமே யோடிப்போய்ப்
                          பிழையு; மன்றே
லெரிசுடர் வாளிற் கூறாய்த் துடிக்கின்றீ“ ரென்று
                               நேர்ந்தார்.
17

     (இ-ள்.) வெளிப்படை. பெரிய வலிய ஆண்சிங்கம் போலக்
கண்களிலே கோபத்தீப் பொறி பறக்கும்படிப் பார்வைசெய்து, தமது
குலம் அவமான மடைந்தமை காரணமாக வந்த பரந்த பெரிய
சுற்றத்தார்களை நோக்கி, “நீங்கள் ஒருவரும் இங்கு என் எதிரில்
நில்லாமல் ஓடிப்போய் உயிர் தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள்;
அப்படிச் செய்யாவிட்டால் தீப் போல எரிகின்ற எனது வாளினாலே
துண்டாக வெட்டப்பட்டுத் துடிக்கப் போகின்றீர்“ என்று சொல்லிக்
கொண்டு அவர்கள் முன்னாகப் போர் முகத்தராய்ச் சேர்ந்தார்.

     (வி-ரை.) பெருவிறல் ஆளி - மேலே அறைகழலண்ணல்
(419) என்றதற்கேற்ற உவமானங் கூறியவாறு. முன்னரும் ஆளரி
யேறு போல்வார் (415) என்றமை காண்க. பிராணிகளிற் றலமைபெற்ற
சிங்கம் ஒன்றே வீரத்தினும் பெருமையினும் ஒருங்கே சிறந்ததாம்.
தமது வீரமே பெரிதாக் கருதி இளிவந்த செயல்கள் செய்யாமையே
பெருமையாம். பின்னர் “ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கு
மனைவராகி“ (425) என்பதுங் காண்க.

     பிறங்கு எரி சிதற நோக்கி - கோபங்கொண்டபோது கண
சிவக்கும்- மிகச் சிவக்கவே அது பொறி பறக்கும் நெருப்புப்போலும்
என்பது வழக்கு.

     பிறங்கு - விளங்கிய. யார்க்கும் தேற்றமாக. எரிசிதற - பொறி
பறக்கின்றதோ என்னும்படி.

     பரிபவப்பட்டுவந்த - பரிபவம் - அவமானம்; இழிவு.தமக்கும்
தம் குலத்துக்கும் இதனால் இழிவ வந்ததென்று கருதி,
அவமானத்திற்குள்ளாகி. “நின்சீர்பங்கப் படுத்தவன் போகப் பரிபவந்
தீரு முனக்கு“ (திருநாவு - புராணம் - 121)

     படர்பெரும் சுற்றம் - பல பக்கமுஞ் சூழ்ந்து வந்தாராதலின்
படர் என்றார்.

     ஒருவரும - வந்த அனைவரும்; ஒருவரும் ஒழியாமே.
பிழையும் - உயிர்தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள். அன்றேல் -
அப்படி ஓடிப்போகாவிடில்.

     எரிசுடர்வாள - சுடர் எரிகின்றதுபோல் விளக்கமாகிய வாள்.
இஃது வாளின் ஒளி குறித்தது. உடையவனது சினத்தைப் படையின்
மேல் ஏற்றிக் கோபம் மிக்கெழும் வாள் என்று கூறலுமொன்று. 

     கூறாய்த் துடிக்கின்றீர் - பல கூறாகத் துண்டிக்கப்பட்டு
வருந்துவீர். கூறு - பகுதி. ஒன்றாயிருந்த உடலும் அங்கங்களும்
பலவாக கூறுபடுத்தப் பெறுதல். துடிக்கின்றிர் - வருத்த மிகுதி
துடிப்பினைத் தருவதாம். எதிர்காலப் பொருளில் வந்த நிகழ் கால
வினைமுற்று; துண்டமான அங்கங்கள் பின்னர்ச் சிலநேரம்
துடித்தலும் காண்க. நேர்ந்தார் போர் முனைபவராக எதிர்த்து
நின்றார்.போர் தொடங்குவோர் அதன்முன்னே பகைவருக்கு இறுதி
முறையாக எச்சரிக்கை சொல்லும் போர் நீதியினைப் பற்றியது
இப்பாட்டின் கருத்து. போர் செய்யுமுன் சாம பேதங்களை எடுத்துச்
சொல்வதும் அறமாம்.

     துணிகின்றீர் - நொந்தார் - என்பனவவும் பாடங்கள். 17