422. மற்றவர் சொன்ன மாற்றங் கேட்டலு மனத்தின்
                                    வந்த
 
  செற்றமுன் பொங்க“வுங் ளுடற்றுணி யெங்குஞ்
                                   சிந்தி
முற்றுநும் முயிரை யெல்லாம் முதல்விசும்
                         பேற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக விடுவ“னென் றெழுந்தார்
                                 நல்லோர்.
19

     (இ-ள்.) வெளிப்படை. மற்றவர்களாகிய சுற்றத்தார்கள்
இவ்வாறு சொல்லிய சொல்லைக் கேட்டவுடன் நல்லோராகிய
நாயனார் தமது மனத்திலே கோபம் முன்னே பொங்கியெழ,
அவர்களை நோக்கி, “உங்கள் உடல்களைத் துணித்து
அத்துண்டங்களை எங்கும் சிந்தி உங்களுயிரை யெல்லாம் முன்னே
விண்ணி லேற்றிக்கொண்டு அதன் பின்னர் இந்த நற்றவரைப்
போகவிடுவேன்“ என்று எழுந்தனர்.

     (வி-ரை.) மற்றவர் - நாயனாரது அடிமைத் திறத்தினை
மறுத்து எழுந்தவர் என்றது குறிப்பு. அருட்டிறனுக்கு அயலார்.
நாயனாரை இங்கு நல்லோர் என்ற ஆசிரியர், அவரை
மறுத்தெழுந்தாரைத் தீயோர் என்னாது மற்றவர் என்ற சொல்லமைதி
காண்க. “கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்; மற்
றல்லாதரர் யாரோ அறியேன்“ என்ற தாயுமானார் பாட்டி
னமைப்பினை இங்கு வைத்துக் காண்க.

     நல்லோர் - இங்கு நாயனார் கிளை ஞரைக்
கொல்லப்போகின்றனரேனும் கொலை செய்வது அவா கருத்தன்று;

     சிவபுண்ணியத்தைத் தடுக்கும் பாவத்தினின்றும் இவர்களை
விலக்கி இவர்களுயிரையும் நல்வழிச் செலுத்தி வேதியரை
வழிச்செலவிடுக்கும் சிவபுண்ணியமே கருதியதாம். ஆதலின் இவர்
நல்லோரே என்பது குறிப்பு. “பாதகமே சோறு பற்றினவா“ முதலிய
திருவாக்குக்களும், சண்டீச நாயனார் சரிதமும் இங்கு நினைவு கூர்க.
கொலை - இன்னின்ன இடத்துக் குற்றமாம் என்றும், இன்னின்ன
இடத்துக் குற்றமாகாது என்றும் தெளிவது சைவத்திறமாம். இதன்
தத்துவத்தை அறியாது பிறர் பலவுங் கூறுவர். அவை ஒன்றும்
பொருளன்றென்று விடுக்க.

     மனத்தின் வந்த செற்றம் முன் பொங்க - “முந்தைய
வுரையிற் கொண்ட பொறைமுத லவையும் விட்டுச், சிந்தையிற் செற்ற
முன்னாந் தீக்குணந் தலை நின்றார்கள்“ (திருஞா - புரா - 634)
என்றபடி, இஃது இராசதம் தாமத முதலிய மாயாகுண பேதங்களான்
வந்த செற்ற மன்றாதலின், சினத்திற்குரிய இழிபு இங்கு நாயனாரைப்
பற்றா தொழிந்தது. சிவபுண்ணியத்திற்கு நேர்ந்த இடையூற்றினை
ஒழித்து அப்புண்ணியத்தை முற்றுவிக்க எழுந்தது; ஆதலின்
வெகுளாமை பற்றிய நீதிநூல் விதிகள் இங்குப் பொருந்தாமை அறிக.
இப்புராணத்திலே இன்னும் வரும் தொண்டர் செயல்கள் பலவும்
இவ்வாறே காண்க. இங்கெழுந்த செற்றத்தின் விளைவாக இறுதியிற்
சுற்றத்தாரும் குற்றநீங்கப்பெற்று வானிடை யின்பம் பெற்றார்;
நாயனார் சிவலோகத்திற் கும்பிட்டுடனுறை பெருமை பெற்றார் (438)
என்பதும் காண்க.

     உடற்றுணி - உடல் துணிக்கப்படுதலாற் போந்த
துண்டங்களை; துணிக்கப் பெறுவன துணி எனப்பட்டன. எங்கும் -
இவ்விடத்தில் எதிர்ந்த அங்கங்கேயும்.

     முற்று நும் உயிரை எல்லாம் - இங்குத் தடுத்து வளைக்கும்
உங்கள் எல்லாருடைய உயிர்களையும். முற்றும் முற்றுகை செய்யும்;
முழுதும் என்பாரு முண்டு. முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு - முதல்
- முதலில்; 

     விசும்பு - வான உலகம். இங்கு வீர சுவர்க்கம் - குறித்தது.
வானிடை யின்பம் (438) என்றது காண்க.      விசும்பேற்றுதல் -
கொல்லுதல் குறித்த மங்கல வழக்கு என்பதும் ஆம். எனது
செயலால் நீங்கள் உயிரிழக்கநேரினும் அதுவும் உங்களுக்கு
நன்மையே என்றதாம்.

     நற்றவர் தம்மை - சுற்றத்தவர் எண்ணுகின்றபடி இவர்
தூர்த்த வேடமும், பிறன்மனை நயக்கும் அவச்செயலும் உடையார்
அல்லர் என்றது குறிப்பு. நற்றவர் நல்லோர் - வேதியரும் நாயனாரும்
இருவரிடத்தும் உண்மையில் படிற்றொழுக்கமும் அநீதமுமில்லை
என்றதாம்.

     போகவிடுவன - எனது கொடைப் பொருளாகிய
இப்பெண்ணுடன் என்றது தொக்கி நின்றது. “கொடுக்க யாம்
ஒட்டோம்“ என்ற மறுதலை மொழிக்கு மாறாய்,உங்கள்
நீக்கிக்கொண்டு,அவரைப் போகவிடுவன் என்றதுணிபு குறித்தது.

     எழுந்தார் - இதுவரை நின்று பேசியவர் மேலெழுந்து
போர்தொடங்கினார். 19