423. நேர்ந்தவ ரெதிர்ந்த போது நிறைந்தவச் சுற்றத்
                                  தாருஞ்
 
  சார்ந்தவர் முன்பு செல்லார் தையலைக் கொண்டு
                                  பெற்ற
மூர்ந்தவர் படிமேற் செல்ல வுற்றெதி ருடன்று
                                 பொங்கி
யார்ந்தவெஞ் சினத்தான் மேற்சென் றடர்ந்தெதிர்
                            தடுத்தாரன்றே.

     (இ-ள்.) வெளிப்படை. போர்க்கு நேர்ந்து நாயனார்
எதிர்த்தபோது, கூடி நிறைந்த அந்தச் சுற்றத்தார்களும், இவ்வாறு
சார்ந்த அவர் முன்பு செல்லாமல், எப்போதும் எருதினை ஊர்ந்து
வருபவராகிய வேதியர், இங்கு அம்மையாரை
உடன் கொண்டு
நிலத்தில் நடந்து செல்ல, அவரை அப்பொழுதே எதிர்த்துப்
பொங்கிய பெருங் கோபத்தாலே மேற்பாய்ந்து எதிரிலே போய்த்
தடுத்தார்கள்.

     (வி-ரை.) நேர்ந்தவர் - மேலே சொல்லியபடி எழுந்து
போரினை நேர்ந்த அவர். சார்ந்தவர் - தம்மை வெட்டி வீழ்த்தி
விலக்குதலைத் துணிந்து தம்பாற் சார்ந்தவர்.

     தம்முன் செல்லார் - இவனோடு போர் செய்யின், அதற்குள்,
அவர் தமது பெண்ணைக் கொண்டுபோய்விடுவர்; ஆதலின் முதலில்
அவரைத் தடுத்துப் பெண்ணை மீட்டுக்கொண்டு, பின்னர்
வேண்டுமாயின் இவனுக்குரியன செய்வோம் என்று அவர்கள் கருதி,
நாயனார் தங்கள்மேல் எழுந்தபோதும் அவர் மேலே தாமும்
அடராது விட்டு, வேதியார் மேற் சென்று தடுத்தார்கள். அன்றியும்
'இயற்பகை பித்தனானால்' (416) என்று முன்னரே நாயனாரைப்
பித்துப் பிடித்தவர் எனத் துணிந்துவிட்டார்களாதலின் பித்தனுடன்
போர்செய்தல் அறிவோர்செயலன்றென்று கொண்டு தங்கருமமே
கருதினார்கள் என்பதுமாம்.

     பெற்றம் ஊர்ந்தவர் - இப்போது அதனை ஊர்ந்துவராமல்
படிமேற் செல்ல.

     தையலைக் கொண்டு - அம்மையாரையும் உடன்கொண்டு,
“கழிபெருங் காதல் காட்டிக் காரிகை உடன்போம் போதில்“ (418)
என்றது காண்க. தையல - உமையம்மையாரை ஒரு பாகத்துக்
கொண்டு எப்போதும் இடபவாகனத்து வருபவர் என்றுரைத்தலுமாம்.
ஊர்ந்தவர் என்றதனால் இப்போதவ்வாறில்லாது வந்தவர் என்றதாம்.
“தன்றுணை யுடனே வானிற் றலைவனை விடைமேற் கண்டார்“ (434)
எனப் பின்னர் இறுதியில் இக்கோலத்தைக் காட்டுதல் காண்க.

     உடன்று - பகைத்து - எதிர்த்து. பொங்கி ஆர்ந்த -
உள்ளே பொங்கி நிறைந்த. அடர்ந்து - நெருங்கிக் கிடைத்து.
அன்றே
- நாயனார் எதிர்த்த அப்பொழுதே. விரைவு குறித்தது.
இதனை அசையெனறொதுவாரு முளர்

     நிறைதவச் சுற்றத்தாரும் - என்பதும் பாடம். 20