426. சொரிந்தன குடல்க ளெங்குந்; துணிந்தன உடல்க
                                ளெங்கும்;
 
  விரிந்தன தலைக ளெங்கும்; மிடைந்தன கழுகு
                                மெங்கும்;
எரிந்தன விழிக ளெங்கும் ; எதிர்ப்பவ ரொருவ
                                  ரின்றித்
திரிந்தனர் களனி லெங்குஞ் சிவன்கழல் புனைந்த
                                    வீரர்.
23

     (இ-ள்.) வெளிப்படை. அந்தப் போர்க்களத்தினிலெங்கெங்கும்,
எதிர்த்த சுற்றத்தார், பிறர், இவர்களின் குடல்கள் சொரிந்து கிடந்தன;
உடல்கள் துணிபட்டுக் கிடந்தன; தலைகள் விரிந்து கிடந்தன;
கழுகுகள் கூடின; கண்கள் எரிந்தன; சிவபெருமான் திருவடிகளையே
தரித்த வீரராகிய நாயனார் ஒருவரே தம்மை மேல் எதிர்ப்பார்கள்
ஒருவருமில்லாமல் தாம் தனியாகத் திரிந்து வந்தனர்.

     (வி-ரை.)போரின் முடிபினையும் அதன் பின் போர்க்களத்தின்
நிலையினையும் நேரிற் காண்பது போல நமக்குக் காட்டுவது
இத்திருப்பாட்டு தன்மையணியிலே மிக அழகுபெற அமைந்த இதன்
அழகினைக் கண்டுகளிக்க.

     சொரிந்தன முதலிய வினைமுற்றுக்கள் வாங்கிய அமைப்பிலே
பின்னே வரவேண்டியவை தத்தம் எழுவாய்களின் முன்னே வந்தன,
காண்பர் முதலிற் கண்டன சொரிதல் - துணிதல் - முதலிய
முற்றியவினைகளையே.சொரிந்தன- துணிந்தன - கண்டார் பின்னரே
அவ்வவ்வினைப்பட்டன யாவை எனப் பார்த்த போது அவை
குடல்கள் முதலியனவாகக் கண்டார் என அப்போரின்
விசையினையும் முடிவினையும் குறித்தபடி.

     எங்கும் - என்ற சொல் இப்பாட்டிற் பலமுறை வந்து களத்திற்
பல விடத்தும் வேறு வேறு நிகழ்ந்த பல செயல்களையும் பிரித்துக்
காட்டி நிற்கும் அழகு காண்க. இவ்வாறு ஒரு சொல்லைச் செய்யுள்
அழகு பொருந்தப் பலமுறை அடுக்கிப் பல பொருள்களையும்
தேற்றப்பட வைத்துக் காட்டுவது ஆசிரியரின் சிறப்பியல்புகளில்
ஒன்று. முன்னர் நாட்டுப்படலம் முதலியவற்றிற் காண்க.

     சூடல்கள - குழாய்போன்று நீண்டு தொங்கும் இயல்புடையன
ஆதலின் சொரிந்தன என்றார். அன்றியும் இவை வயிற்றுடன்
இணைத்த பகுதியன; ஆதலின் துண்டிக்கப்பட்டபோது உள்ளிருந்த
உணவுப் பகுதிகளை வெளி சொரிந்தன என்றலுமாம்.

     தலைகள - அவற்றிற் கட்டி நின்ற தலைக்கட்டுகள் விலக
விரிந்து கிடந்தன. மயிர் முடிகள் அவிழ விரிந்தனவுமாம்.

     கழுகும- அறுபட்ட துண்டங்களின் நிணங்களைத்
தின்னக்கூடின. கழுகுக் கூட்டங்கள் கூடும் அளவுக்குப் பிணங்கள்
நிறைந்தன என்ற குறிப்பு. உம்மை - சிறப்பும்மை. உம் - அசை
என்றொதுக்குவாரு முண்டு.

     எரிந்தன விழிகள் - முன்னர் “உடன்று பொங்கி ஆர்ந்த
வெஞ்சினத்தால் மேற் சென்றடர்ந்தார்“ (423) ஆதலின் அவர்களது
கண்கள் கோபத் தீச் சிந்தின. அந்நிலையிலே தலைகள்
துண்டமாயின; ஆகவே பின்னரும் விழிகள் அவ்வாறே எரிந்து
நின்றன என்றபடியாம். கழுகு மிடைதலுக்குப் பின்னர் விழிகள்
எரிதலைப் பற்றிக் கூறுவதனாலே, கழுகும் என்ற உம்மையால்,
அவற்றிற் கினமாகிய காகம - நரி - பேய் முதலிவற்றையுங்
கொண்டு, அற்றுவீழ்ந்த தலைகனின்றும் அவை கண்களைத்
தோண்டித் தின்னப் போயினபோதும் அக்கண்கள்எரிந்து
கொண்டிருந்த காட்சியை இங்குக் குறித்தனர் என்றுரைத்தலுமாம்.
“கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை“ என்ற
திருமுருகாற்றுப்படை காண்க.

“அடன்முனை மறவர் மடிந்தவ ரலர்முக முயிருள வென்றுறு
படர்சிறை சுலவுக ருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய் வினைஞர்த முலையின்
                                      முகம்பொதி
புடைமிடை கரியிடை தங்கிய புகைவிடு தழலை நிகர்ந்தன“
- ஏனாதி நாயனார் - புரா- 23

என்ற இடத்து இக்கருத்தை விளங்கக் காண்க.

     எதிர்ப்பவர் ஒருவருமின்றி - எதிர்த்தவர் யாவரும் இவ்வாறு
விலக்கித் தொலைக்கப்பட்டார் என்பதாம். யாரும் எதிர்ப்பவரில்லாது
செய்யும் வல்லமையின் காரணம் இவர் சிவன்கழல் புனைத்தமையே
என்பார் அதனை எடுத்துக் கூறினார். ஒருவரும் இன்றி என்க.
முற்றும்மை விகாரத்தாற் றொக்கது.

     திரிந்தனர் களனில் - காண்டகு விசையிற் பாய்ந்துவந்த
வேகமடங்கவும், இன்னும் யாவராயினும் வருவாருளரோ என்று
காணவும் ஆக, எதிர்ப்பவரின்றியும் பின்னரும் சில போது
திரிந்தனர். தொடக்கத்திலே சாரிகை மாறி வந்து என்றும், பின்னர்
விசையிற் பாய்ந்து என்றும், முடிவில் திரிந்தனர் என்றும் அவ்வவ்
வேகத்திற்கேற்றவாறு குறித்த அழகும் காண்க. எங்கும் சிவன்கழல்
புனைத்த
- எவ்விடத்தும் சிவனையே எண்ணிய என்று வேறுமோர்
பொருள்கொள்ள வைத்ததும் ஓர் அழகாம்.

     எதிர்ந்தவர் - என்பதும் பாடம். 23