427. மாடலை குருதி பொங்க மடிந்தசெங் களத்தி
                                 னின்று
 
  மாடுறு செயலின் வந்த கிளைஞரோ டணைந்தார்
                                 தம்மில்
ஓடினா ருள்ளா ருய்ந்தா ரொழிந்தவ ரொழிந்தே
                               மாண்டார்;
நீடிய வாளுந் தாமு நின்றவர் தாமே நின்றார்.
24

     (இ-ள்.) வெளிப்படை. (அறுபட்ட உடற்றுண்டங்களின்)
பக்கத்திலே அலைபோல விட்டுவிட்டு இரத்தப் பெருக்கானது
மேன்மேற் பொங்க, இவ்வாறு மடிந்த சிவந்த போர்க்களத்தினின்று,
எதிர்த்தழிக்கும் செயல் மேற்கொண்டுவந்த சுற்றத்தாருடனே,
அணைந்தவர்கள் எல்லாருள்ளும், ஓடிப்போய்த் தப்பிப் பிழைக்க
ஓடிப்போகாமல் அங்கு நின்றவர் மட்டும் உயிர் தப்பினார்கள்;
இவர்களொழிய ஓடிப்போகாமல் அங்கு நின்ற பிறர் எல்லாரும்
மடிந்தே போயினர்; தமக்கு ஒரே துணையாக நிலைபெற்ற
அவ்வாளினை யேந்தி நின்ற நாயனார் தாமே தனியாக எஞ்சி
நின்றார்.

     (வி-ரை.) மாடலை குருதி பொங்க - உடல்களின்
துண்டங்களிலிருந்து இரத்தம் இடையிட்டுப் பொங்கி வழிந்து
கொண்டிருந்தது என்க.

     பொங்குதல் - இரத்தாசயம் - இரத்தக்குழாய்கள் முதலிய உள்
அமைப்புக்கள் சுருங்கி, உள்ளே ஓடிக்கொண்டிருந்த இரத்தத்தை
வெளிப்படுத்தும் செய்கையாம். ஒரே தொடர்பாய் வராது
இடையீடுபட்டு வருதலின் அலை போல் என்றார். அலைபோல
இடையிட்டுவரினும் அளவிற் பெறுகிற்று என்பார் பொங்க என்றார்.
அலையுடைய வெள்ளம்போல இரத்தவெள்ளம் பெருகி ஓடிற்று
என்று கூறுவாருமுளர்.

     செங்களம - எங்கும் இரத்தம் சிந்துதலினாற் சிவந்த களம்.

     ஆடுறு செயல் அடு - பகுதி. அடுதல் - நாசமாக்குதல்.
பகுதி முதல் நீண்டது. அடுதல் உற்ற (பொருந்திய) செயல். உறு -
துணை வினை.

     கிளைஞரோ டணைந்தார் தம்மில் - கிளைஞர் தம்மில்,
அவரோடணைந்தார் தம்மில் என்று தனித்தனிக் கூட்டுக. “காதன்
மேவிய சுற்றமும் பதியும் கடக்க“ (413), “நாடுறு பழியும்“ (421) என
முன்னர்க் கூறினமையாற், கிளைஞரிடத்தும் இவர்களிடத்தும் பரிவு
கொண்டும், நாட்டுக்கு வரும் பழிக்கு அஞ்சியும் சுற்றத்தோடு உடன்
வந்தார்வேறு பலருமாவர்.

     இவ்வாறு தம்மில் என்றதனைப் பிரித்துக் கூட்டாது
கிளைஞரோ டணைந்தவர்களில் எனக் கொணடு, “மயிர்நீப்பின்
வாழாக் கவரிமா வன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்“; “மான
மழிந்தபின் வாழாமை முன்னினிது“ என்றபடி உயிரினும் மானமே
பெரிதென வந்த கிளைஞர் (421) ஒருவரும் ஓடிற்றிலராக,
அவர்களோ டணைந்தவாக்ளிற் சிலரே உயிர்தப்பி ஓடினர்
என்றுரைத்தலுமாம்.

     ஓடினார் உள்ளார் உய்ந்தார் - உயிரிழத்தற்கு அஞ்சித்
தப்பி ஓடினவர்களே உள்ளாராகி உய்ந்தவர்கள், உள்ளார் -
முற்றெச்சம்.

     ஒழிந்தவர் - ஒடாது ஒழிந்தவர். ஒழிந்தவர் ஒழிந்தே -
சொற்பின் வருநிலை. ஒழிந்தே மண்டார் - தீர்க்கப்பட்டே உயிர்
நீத்தார். ஏகாரம் - தேற்றம்.

     நீடிய வாள் - வலிமையாலும் புகழினாலும் நீடிய வாள்;
“எரிசுடர்வாள்“ (420). வாளும் தாமும் நின்றவர் - தொடக்கத்தில்
வன்றுணைவாளேயாக எந்தித்தாமே தனியாய்ப் பிறர் ஒருவரும்
துணையின்றி நின்ற நாயனார். நீடியதாமும் என்று நாயனார்க்குங்
கூட்டியுரைத்தலுமாம்.

     தாமே நின்றார் - எகாரம் தேற்றம். முன்னே தனியாய் நின்ற
அவரே முடிவிலும் தனியாய் நின்றார் . ஏகாரம் பிரிநிலையுமாம். 24