428. திருவுடை மனைவியாரைக் கொடுத்திடைச் செறுத்து
                                    முன்பு
வருபெறுஞ் சுற்ற மெல்லாம் வாளினாற் றுணித்து
                                    மாட்டி
அருமறை முனியை நோக்கி “அடிகணீர் அஞ்சர
                               வண்ணம்
பொருவருங் கான நீங்க விடுவ“ னென் றுடனே
                               போந்தார்.
25

     (இ-ள்.) வெளிப்படை. (நின்றாராகிய நாயனார்)
திருவினையுடைய மனைவியாரைச் சிவவேட வேதியர்க்குக் கொடுத்து,
அக்கொடை நிறைவேறுதற்கு இடையூறாக முற்பட்டு வந்த பெருஞ்
சுற்றத்தாரை யெல்லாம் வாளினாலே துணித்து மாள்வித்து, அதன்பின்
நாயனார் அருமறை முனிவரைப் பார்த்து அடிகளே! நீர்
பயப்படாதபடி ஒப்பற்ற இந்தச் சோலையினைக் கடந்து செல்லுமாறு
நான்துணையாய் வந்து வழிவிட்டனுப்புவேன்' என்று சொல்லி
அவருடன் போயினார்.

     (வி-ரை.) நின்றாராகிய நாயனார் - எழுவாய் வருவிக்க.
(நின்றார்) - கொடுத்து - மாட்டி - நோக்கி - என்று - போந்தார் -
என முடிக்க.

     திருவுடை - திரு - அருட்டிரு. “திருவினும் பெரியாள்“ (412)
என்ற விடத்துக் காண்க. கொடுப்பதற்கு முன் இருந்த நிலை
குறித்ததாதலின் மனைவியார் என்றார். தமக்குத் திருநிறைந்த
மனைவியாரா யிருந்தவரை.

     இடைச் செறுத்து - இடையிலே கோபித்து என்றுரைப்பதுமாம்.
முன்பு வரு முன்பு - எதிராக. இடங்குறித்தது. “எதிர் வளைத்துக்
கொண்டார்“ (417), “எதிர் நிரந்து வந்தார்“ (418), “அடர்ந்தெதிர்
தடுத்தார்“ (423) என முன்னர்க் கூறியன காண்க. முன்பு -
காலங்குறித்ததாகக் கொண்டு முன்னே என உரைத்தலுமாம். பெருஞ்
சுற்றம
- வலிமையாலும், தொகையாலும் பெரிய.

     அருமறைமுனி- “மறை முனி“ (419) என்ற விடத்துக் காண்க.

     அடிகள்! - அண்மை விளி - அடிகள் - உலகப் பற்றினை
விட்டு இறைவனைப்பற்றிய தகுதியாற் பெரிய முனிவர்க் கமைவதோர்
மரபுப் பெயர். “வாகீசத் திருவடியாங் காபாலி யடியவர்“ (திருநாவு -
புரா - 109), திருவாதவூரடிகள் என்பனவாதி வழக்குக்கள் காண்க.
இது, எந்த வரம்பும் மரபும் தகுதியும் பற்றாது மனம் போனவாறு
இந்நாளில் வழங்குவதோர் சொல்லா யொழிந்தது.

     பொருவருங் கானம - கானம் என்பதைக் காடு என்றும்,
ஆரணியம் என்றும், பொருள் கொண்டனர் முன்னுரைகாரர்.
காவிரிப்பூம்பட்டினம் அந்நாளிற் சிறந்து விளங்கிய பெரிய
துறைமுகப் பட்டினம். கான நீங்கி அணைந்த (429) சாய்க்காடும்
பெரிய ஊர்.இரண்டும் மிக நெரிங்கியுள்ளன.
“காவிரிப்பூம்பட்டினத்தில்சாய்க்காடு“ “பூம்புகார்ச் சாய்க்காடு“ என்று
இவ்விரண்டையும் ஒன்று சேர்த்துரைக்கும் தேவாரங்கள் காண்க.
இவ்விரண்டுக்கு மிடையில் பெருங்காடு இருத்தல் கூடாமையின்
அவ்வுரைகளின் பொருத்தம் ஆராயத்தக்கது. பெருநகர்களின்
புறத்துச் சோலைகளிருப்பதும் காண்க.

     கான நீங்க விடுவன் - எதிர்த்துவந்தார் சிலர் களத்தினின்று
தப்பி ஓடினார். அவர்களும், அவர்களன்றி வேறுபாரேனும் கானத்தில்
ஒளித்திருந தும் இடையூறு விளைக்கவுங் கூடும் என இவ்வாறு
அஞ்சாதபடி இக்கானங் கடக்கத் துணை போந்து வழிச்செலவிடுவன்
என்றபடியாம். “கடக்க நீ துணை போதுக“ (413) எனவேதியர்
கூறியதைப் பின்னும மேற்கொண்டு முன் எச்சரிக்கையாக நாயனார்
கூறியதாம். “யானே முன்செய் குற்றேவல்“ என முன்னர்க் கூறியதுங்
காண்க.

     கொடுத்திட - மாற்றி - என்பனவும் பாடங்கள். 25