429. இருவரா லறிய வொண்ணா வொருவர்பின் செல்லு
                                  மேழை
 
  பொருதிறல் வீரர் பின்பு போதமுன் போகும்
                                  போதி
லருமறை முனிவர் சாய்க்கா டதன்மருங் கணைய
                                 மேவித்
திருமலி தோளி னானை “மீள்“எனச் செப்பி
                                 னானே.
26

     (இ-ள்.) வெளிப்படை. இருவரால் அறியப்படாத ஒருவராகிய
மறை முனிவரின் பின்னே செல்லும் அம்மையார், எதிர்த்தாரைப்
பொருது வெல்லும் வலிய வீரராகிய நாயனார் தம்பின் போக,
முன்னே போகும் போதில், அருமறை முனிவராகிய வேதியர்,
திருச்சாய்க்காட்டின் பக்கத்திலே சாரச் சேர்ந்ததும் வீரம் பொருந்திய
தோள்களையுடைய நாயனாரை “நீஇனித் திரும்பிப்போ“ என்று
சொல்லி விடை கொடுத்தார்.

     (வி-ரை.) கான நீங்கும் வழியிடை மூவரும் போயின
வரிசையை இப்பாட்டுக் கூறிற்று. ஒருவர்க்குப் பின் செல்லும் ஏழை,
வீரர் தமது பின்புவரத், தாம் அவர்க்கு முன் போகும்போது என்க.
பின் செல்லும் ஏழை முன் போகும்போது எனக் கூட்டுக.
நாயனார்க்கும் பின்னே வரவேண்டியவரான மனைவியார், அவரைப்
பின்பற்றியதனாலே (சொல்வழி நடந்தமையால்) அவர்க்கு முன்
போகப்பெற்றார் என்பதும், அவர்க்கு முன்பே இறைவரைக்
கூடப்பெற்றனர் என்பதும் குறிப்பு. இருவரால் அறியவொண்ணா -
பிரம விட்டுணுக்கள் அறியமாட்டாத ஒப்பற்றவர். இருவர் கூடியும்
அறியாத ஒருவர் என்ற நயமும் காண்க. இருவர் - நாயனாருந்
தேவியாரும் என்பாரு முண்டு.

     ஏழை - பணம் - வலிமை - துணை - அறிவு முதலியவற்றாற்
குறைபாடுடையார்க்கு வழங்குவது. “ஏழை யடியாரவர்கள் யாவை
சொன சொன்மகிழு மீசனிடமாம்“ - (சம்பந்தர் - சாதாரி -
திருவைகாவூர் - 1) “ஏழையடியோமையாண்டு கொண்ட நயம்“ -
(திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் - 18) எனும் அருட்பாக்களைக்
காண்க. இங்கு அம்மையாரைக் குறித்தது. “ஏழை பங்காளனையே
பாடேலோ ரெம்பாவாய்“ - (திருவெம்பாவை - 2). அபலைகள்
என்று பெண்களைக் கூறும் வழக்கும் காண்க. முன்னே இறைவரும்
பின்னே நாயனாரும் ஆக இருபுறமும் (இகபர மிரண்டினிலும்)
காக்கப்பெற்றனர் அம்மையார் என்பதும் குறிப்பு.      

     பொருதிறல் வீரர் - “ஆண்டகை வீரர்“ (425), “சிவன்
கழல் புனைந்த வீரர்“ (426) என்றமைக்கேற்ப ஈண்டும்
வீரத்தன்மைபற்றியே இவ்வாறு குறித்தார். மனைவி - சுற்றம் - பதி
முதலிய பற்றுக்கள் அத்தனையும் துறந்தொழிந்தது மன்றி, அவை
பின்னரும் பற்றவந்தபோது ஒருவராகவே துணித்தெறிந்த ஆண்மை
பற்றி வீரம் புகழப்பெற்றதென்க. பற்றுதலே பெருவீரமாம்.இதுபற்றியே
“வீரமென்னால் விளம்புந் தயைதோ“ (144) என்று அடியார்களது
பொது விலக்கணங் கூறியது காண்க. விரிவு ஆண்டுக் காண்க.
பின்னரும் வந்த வந்த இடங்களிலும் இவ்வாறே கண்டுகொள்க.

     திருமலி தோளினான - இதுவும் வீரம் பற்றியதேயாம். திரு
- வீர இலக்குமி. எல்லாத் திருவுக்கும் மேலாகிய அருட்டிரு
என்றலுமாம். மீள் - பெருங்கொடையும் பெருஞ் செயலும் செய்த
நாயனாரை வேறொன்றும் கூறாது வாளா மீ்ள் எனக்
கட்டளையிட்டதும், அவர் அதன்படி மீண்டவகையும் (430),
நாயனாரது வண்ணம் உலகறியக்காட்டிய கரு ணைத்திறமே என்பது
இங்குக் குறித்துணர்ந்து கொள்ளத்தக்கது. 26