43.
|
பூதமி
யாவையி னுள்ளலர் போதென
|
|
|
வேத மூலம்
வெளிப்படு மேதினிக்
காதன் மங்கை யிதய கமலமா
மாதொர் பாகனா ராரூர் மலர்ந்ததால். |
33 |
(இ-ள்.)
பூதம் ... போதென - எல்லா உயிர்களிலும்
உள்ளே
இருந்து மலரும் இருதய கமலம்போல; வேதமூலம் ... கமலமாம் -
உலகமாகிய காதல் மங்கையினுடைய இறைவன் வெளிப்படும்
இடமாகிய இருதய கமலமாக; மாதொர் ... மலர்ந்ததால் - தியாகேசர்
எழுந்தருளிய திருவாரூர் தென்றிசையிலே மலர்ந்து விளங்குவதாம்.
(வி-ரை.)
பூதம் - இங்கு ஆன்மாக்களைக் குறித்தது.
போது
- தாமரை மொட்டு, இங்கு இதய தாமரையைக்
குறித்தது.
இரத்தாசயம் (Heart) கீழ்நோக்கிய தாமரை மொட்டுப் போன்ற
உருவமுடையது என்பர். இதுவே இருதயமெனவும், உள்ளத் தாமரை
எனவும் பேசப்பெறுவதாம். உயிர்களது உள்ளக் கமலத்தினிடத்தே
வெளிப்படுவதுபோல இறைவன் பூமிக்கு இதயகமலமாகிய திருவாரூர்ப்
புற்றிலே விளங்குவன் என்பது கருதுத்து.
வேதமூலம்
வெளிப்படும் - வேதமூலம் - இறைவர்.
வெளிப்படுதல் - தோன்றுதல். இதனை உவமான உவமேயம்
இரண்டிலும் கூட்டுக. வேதமூலம் வெளிப்படும் போதென, அது
வெளிப்படும் கமலமாம் ஆரூர் என்க.வேதமூலம்
- என்பது
பிரணவம், குடிலை, ஓங்காரம் முதலிய பெயர்களாற் பேசப்பெறுவது.
சுத்த மாயையின் காரியமாகிய நாதமே இதன் உருவம். இதை
இயக்குபவன் இறைவன். நாதம் முதற்காரணமும், இறைவன் நிமித்த
காரணமும், வேதம் காரியமுமாம். ஓமென்னும் பதமதனில் வேதமாதி
உற்பவிக்கும் ஆலவித்தி னுதிக்கு மாபோல் - சிவதருமோத்தரம்.
குடிலை என்னும் தடவயனாப்பண், அருள் வித்திட்டுக் கருணைநீர்
பாய்ச்சி, வேத மென்னும் பாதவம் வளர்த்தனை ... - குமரகுருபர
சுவாமிகள். இது ஓம் என்ற சமட்டிநிலை - கூடியநிலை; அகார
உகார மகாரமாகிய வியட்டி நிலை - பிரிந்த நிலை என்ற
இருநிலைகளையுடையது. அகாரம் வாய் அங்காத்தல் -இதழ்கள்
திறத்தலாலே பிறப்பது; உகாரம் திறந்த இதழ்கள் குவித்தலால்
பிறப்பது; மகாரம் - அந்த இதழ்கள் மூடுவதாற் பிறப்பது - என்பர்
இலக்கண நூலோர். எனவே, முன் மூடியிருந்த இதழ்கள் திறந்து
குவிந்து பின் மூடுவதால் வரும் பிரணவம் என்க. இதுவே
பிரளயத்தில் இறைவனிடத்து ஒடுங்கியிருந்த உலகம் மீளவும்
சிருட்டியில் தோன்றி - நின்று - பின்னரும் ஒடுங்குதலுமாம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு; அண்டமாகியது
உலகம்; பிண்டமாகியது உயிர்கள்; அண்டத்தின் உடம்பு பூமி;
பிண்டத்தின் உடம்பு உயிர்கள் தங்கும் உடற்கூடு; பூமியின் இதயம்
திருவாரூர்; உயிர்களின் இதயம்போல் பூமிக்குத் திருவாரூர்
இதயகமலம், உயிர்களின் இதயத்தில் விளங்குவதுபோல் இறைவன்
திருவாரூர்ப் பூங்கோயிலிலே புற்றிடம் கொண்டும் தியாகேசனாகவும்
வெளிப்படுவன் என்க. உயிர்களுக்கு இதயகமலம்போல் பூமியாகிய
மங்கைக்கு இதயகமலமாக விளங்குவது திருவாரூர் என்பது.
கமலம்
- பூவுலகம் ஒரு மங்கை எனவே கொண்டு பூதேவி
என்றழைப்பர். திருவாரூருக்கும் அங்கிருக்கும் குளத்துக்கும்
கமலாலயம் என்றபெயரும் உண்டு. இதன் கோயிலுக்குப் பூங்கோயில்
என்று பெயர்.
தாங்கோல
வெள்ளெலும்பு பூண்டுதம் மேறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே. |
எனவரும்
அப்பர் சுவாமிகள் தேவராத்தில் பூங்கோயிலெனக்
குறித்தது அறிக.
பூவெனப்படுவது பொறிவாழ் பூவே என்றபடி
பூங்கோயில் =
(இதயம்);கமலம் + ஆலயம் = கமலமாகி அமைந்த ஆலயம்
என்பதாம்.
பிரமதேவரிடத்திலே நீண்ட ஆயுள் பெற்ற குதிரை
முகமுடைய அயக்கிரீவன் என்ற அசுரனைக் கொன்றபின்
சார்ங்கமென்னும் தமது வில்லின் ஒரு நுனியிலே சார்ந்து உறங்கிய
விட்டுணுமூர்த்தி அவ்வில்லின் நாண் அற்றபடியால் அது கிளம்பவே
தலையிழந்தார் எனவும், அதற்காக இங்குத் தவஞ் செய்து இலக்குமி
மங்கலம் பெற்றாள் எனவும் தேவீபாகவதம் கூறுமென்பர்.
மேதினி - பூமி.
மது என்னும் அசுரன் விட்டுணு
மூர்த்தியினால் சங்கரிக்கப் பட்டு அவனுடைய தசைகள்சேர்ந்து
உண்டாகிய காரணம் பற்றி மேதினி என்ற
பேர் கொண்டதென்பர்.
மேதினிக்காதன் மங்கை
- மேதினியாகிய காதலிக்கப்படும்
மங்கை.சிதம்பரம் ஆகாயத்தலம். திருவாரூர் பிருதிவித்தலம்.
ஆகாயம் முதலாகவும் பிருதிவி இறுதியாகவும் விளங்குதலால் முன்
பாட்டிலே சிதம்பரத்தையும் இப்பாட்டிலே திருவாரூரையும் குறித்தார்
என்பது. இது தோற்றத்தின் முறை.
மாடமொடு
மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புருவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே |
என்ற
தேவாரமும் காண்க. முன்னோ என்பது ஒடுக்க முறையையும்,
பின்னோ என்பது தோற்றத்தின் முறையையும் குறிக்கும் என்பர்.
இவ்விரண்டும் கூறவே, இடைப்பட்ட எல்லாத் தலங்களும் இவற்றுள்
அடங்கும் என்பதாம். பிருதிவியாகிய சம்பந்தம் பற்றிக் காஞ்சியையும்
சேர்த்து வரும் பாட்டிற் கூறுவது காண்க. ஆகாயத்திற்கு ஒரு தலம்
கூறிய முனிவர், பிருதிவிக்கு இரண்டு தலம் கூறுவானேன்? எனின்,
இரண்டு கண்களும் சேர்ந்து ஒன்றாகிய முழுக்காட்சி தருவதுபோலத்
திருவாரூரும் காஞ்சீபுரமும் ஆகிய இரண்டும் கூடிய வழியே
பிருதிவியின் முழுத்தன்மையைச் செய்கின்றன. இதனைச்
சுந்தரமூர்த்திகள் சரித நிகழ்ச்சியின் துணைகொண்டு பின்வரும்
பாட்டின் கீழ் உரைக்கப் பெறுகின்றதும் காண்க. இவ்வாறு இரண்டு
பொருள்கள் ஒன்றற்கொன்று சார்பு பெற்று ஒரு முழுப் பொருளை
உண்டாக்குவனவாயின் ஆங்கில மொழியில் அவற்றை -
Complimentary - சார்ந்து முழுமையாக்குவன - என்பர்.
இவற்றுள்
திருவாரூர் சிவத்தன்மை மிகுந்த பிருதிவித் தலம்
என்றும், காஞ்சீபுரம் சத்தித்தன்மை மிகுந்த பிருதிவித்தலம் என்றும்
கூறுவர். மேலே ஆகாய தத்துவ நிலயமாகிய சிதம்பரத்துக்கு இரண்டு
பாட்டுக்கள் கூறினர். ஆகாய தத்துவத்துக்கு இரண்டு தன்மைகள்
உண்டு. அவையாவன : ஒடுக்கக் கிரமத்திலே உலகத்தைத்
தன்னுள்ளே ஒடுக்கிக்கொள்ளும் சிவத்தன்மை ஒன்று.
சிருட்டிக்கிரமத்திலே உலகத்தைத் தன்னிடத்திலிருந்து
தோற்றுவிக்கும் சத்தித் தன்மை மற்றொன்று. இவற்றை முறையே
சிதம்பரத்துக்குக் கூறிய இரண்டு பாட்டுக்களில் பெரும்பற்றப்
புலியூர் என்ற முதற் பாட்டில் சிவத்தன்மையையையும்,
மெய்த்தவக்கொடி காண என்ற இரண்டாம் பாட்டில் சத்தித்
தன்மையையும் அறிவித்தார். இவ்விரண்டு தன்மைகளும்
பிருதிவியிலும் உள்ளன. இதுவே ஒடுங்கும்போது சிவத்தன்மையும்,
தோற்றிவரும் போது சத்தித்தன்மையும் மேற்கொள்ளும். இவற்றிலே
அந்த பிருதிவிச் சிவத்தன்மையைத் திருவாரூரிலும், பிருதிவிச்
சத்தித்தன்மையைக் காஞ்சீபுரத்திலும் காட்டுவார் பிருதிவிக்கு
இவ்விரண்டு தலங்களையும் கூறினார். இவ் வரலாற்றைச் சொல்லும்
உபமன்னிய முனிவராதிய துறந்த முனிவர் தொழும் பரவை
துணைவ ராகிய சுந்தரமூர்த்திகள் முதலிய முனிவோர்களது இதய
கலம த்து விளங்குவது திருவாரூராதலின் அதுவும் முனிவர்
போற்றும் பெரும்பற்றப் புலியூர் போன்று சிவதன்மை பெற்ற
பிருதிவித்தலமாம். உலகீன்றவள் வழிபடுதலால் சத்தித்
தன்மைபெற்ற பிருதிவித் தலம் காஞ்சீபுரமாம். இதன் குறிப்பை
வரும்பாட்டிற் காண்க.
யாவையு
முள்ளலர் - என்பதும் பாடம். 33
|