431. செய்வதற் கரிய செய்க செய்தநற் றொண்டர்
                                   போக;
 
  மைதிகழ் கண்ட னெண்டோண் மறையவன்
                        மகிழ்ந்து நோக்கிப்
“பொய்தரு முள்ள மில்லான் பார்க்கிலன்
                          போனா“ னென்று
மெய்தரு சிந்தை யாரை மீளவு மழைக்க லுற்றான்.
28

     (இ-ள்.) வெளிப்படை. பிறர் எவராலுஞ் செய்தற்கரிய பெருஞ்
செய்கை செய்த நல்ல தொண்டராகிய இயற்பகையார் இவ்வாறு
மீண்டு போகத், திருநீலகண்டனும் எண்டோள்களையுடைய
மறையவனுமாகிய இறையவன் அவரை மகிழ்ச்சியுடன் பார்த்து,
“பொய்ம்மை பொருந்திய உள்ளமில்லாதவன்; திரும்பிப் பார்த்தல்
கூடச் செய்யாது போயினன்“ என்று அந்த மெய்ம்மையைத் தருகின்ற
மனத்தாராகிய நாயனாரை மீண்டும் அழைப்பாராயினர்.

     (வி-ரை.) அழைக்கலுற்ற வகை வரும் பாட்டிற் காண்க.

     செய்வதற்கரிய செய்கைசெய்த - “செயற்கரிய செய்வார்
பெரியர்“ - குறள். “செய்தற் கரிய செயல்பலவுஞ் செய்து, சிலர்,
எய்தற் கரியதனை யெய்தினார்“ - திக்களிற்றுப்படியார் 61. பற்று
விடுதல
- அடியார் வேண்டியவை யாவையேனும் மறாது கொடுத்தல்
- பற்றுக்களை எறிந்து விலக்குதல் -   திரும்பிப் பாராது போதல்
முதலிய ஒவ்வொன்றும் செய்தற்கரியனவேயாம். சாமுசித்தர் -
வைனயிகர் - எனப் பெரியார் இருவகையினர். இவர்களின்
தன்மைகளைப்பற்றி முன் 142 பாட்டின் கீழ் உரைத்தவை காண்க.
இங்கு இந்நாயனார் சாமுசித்தராதலின் இவர் செயல் சிவன்பால் நின்ற
செயலேயாயிற்று. எனவே, அது பிறர் எவராலும் செய்வதற்கரிய
செயலாயிற்று என்க. ஆதலின் நற்றொண்டர் என்றார்.

     மறையவன் - மைதிகழ் கண்டத்தையும் எண்டோள்களையும்
மறைத்து வந்தவன் என்ற குறிப்புமாம். இங்கு வேதியர் அழைத்ததை
மட்டும் நாயனார் கேட்டனரேயன்றி முன் கண்ட நிலையில்
வேதியரை இனிக் காணார்; மைதிகழ் கண்டமும் எண்டோளுமுடைய
மறையவனாகவே அடுத்த நிலை காணப்போகின்றார்; ஆதலின்
இங்கு இவ்வாறு குறித்தார்.

     மகிழ்ந்து நோக்கி - அருட்பார்வை செய்து; இதுவரைத்
திரோதானசத்தி பதிந்த நோக்கமே செய்தனர்; இங்கு அது
அருட்சத்தியாக மாறிய அருணோக்கம் செய்தார்.

     பொய்தரும் உள்ளம் இல்லான - பொய்ம்மை - ஆணவ
முதலி மலங்களின் செயல் உயிர்களைப் பொய்ம்மை செய்து
தீமையிற் புகுத்தும். அவ்வாறுள்ள செயலைத் தரும் உள்ளம்
இல்லையாயினவர் - பாசநீக்கம் பெற்றவர் என்றதாம். பார்க்கிலன்
போனான
- பார்க்கிலன் - முற்றெச்சம் .திரும்பிக்கூடப் பார்க்காமற்
போயினார். மனத்தில் முன்னைப் பற்றுக்கள் பதிந்த வாசனையும்
அறவே ஒழிந்தன என்பது குறிப்பு.

     மெய்தரு தரு சிந்தையார் - முன்னைப் பாசநீக்கம் பெற்று
வாசனாமலமும் ஒழிந்த பின் சிவப்பேறு பெற நின்றவர். மெய் -
சத்து. இறைவன் சத்தாவான். அசத்தினை யில்லையாக்கிச் சத்துப்
பொருள் தனது தன்மையைத் தரும் சிந்தையார் என்பது.

     மீளவும - முன்னர் அழைத்துப் பணி கொண்டமையே யன்றி
மீட்டும். உம்மை - இறந்தது தழுவிய எச்சவும்மை மீளவும் மீட்டும்
மீட்டும் என்றுரைத்தலுமாம். மீள மீள அடுக்கி அழைக்கும் வகை
வரும் பாட்டிற் காண்க. நகரம் நோக்கிப் போயின போக்கிலே
நின்றும் மீள்வதனோடு இவ்வுலகின்று தம்முடன் நலமிகு
சிவலோகத்திற்கு மீளவும் என்ற குறிப்மாம். 28