432.
|
இயற்பகை
முனிவர வோல; மீண்டுநீ வருவா
யோலம்!
|
|
|
அயர்ப்பிலா
தானே யோல! மன்பனே யோல!
மேலாம்!
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே யோலம்!
என்றான்
மயக்கறு மறையோ லிட்டு மாலயன் றேட
நின்றான்
|
29
|
(இ-ள்.)
வெளிப்படை. மயக்கமறும் மறைகள் பன்முறையும்
தம்மை நோக்கி ஓலமிட்டுப் பிரம விட்டுணுக்கள் தேடுமாறு நின்ற
பெருமையுடையானாகிய அவ்விறைவன் இயற்பகை முனிவனே
ஓலம்!; இங்கே நீ வருவாய் ஓலம்!; எப்போதும் எமது சிந்தனை
மறவாதவனே ஓலம்!; அன்புடையவனே ஓலம்! ஓலம்!; பிறர் எவரும்
செய்தற்கரிய செய்கை செய்த தீரமுடையானே ஓலம்! என்று தான்
பன்முறையும் ஓலிமிட் டழைத்தான்.
(வி-ரை.)
ஓலம் - அச்சம் நேர்ந்தவிடத்து
(அபயம் -
அடைக்கலம் என்று) அதனைத் தீர்க்குமாறு உயர்ந்தாரை
விளிப்பதோர் விளியிடைச் சொல்.
இயற்பகை முனிவாகாமனை முனிந்து
என்றபடி உலகப்
பற்றுக்களையெலாம் அறவே முனிந்து ஒதுக்கியவராதலின் முனிவர்
என்றார். அவரது முனிவராந் தன்மையைப் புவன
மூன்றுக்குங்
காட்டிய தொழில் நிறைவெய்திய இடமாதலின் இங்கு (இச்செயலான்
இவர் முனிவராயினார் என முனிவா) என்று முடித்துக்
காட்டியபடியாம். இவ்வாறு முடித்ததன் காரணம் பின்னர்
ஒவ்வொன்றாய்க் கூறுகின்றதும் காண்க. முனிவர் - (408);
மாதவன் - (412); மறைமுனி - (419); நற்றவர் - (422); முனிவர்
(429); தவமுனி - (430) என முன்னர் முனித் தன்மை யாலே
குறிக்கப்பெற்ற இறைவன், தான் செய்யுந் தன்மைகளும் ஆக்கியிடு
மன்பர்க் கவன் - (திருக்களிற்றுப்படியார் - 69) என்றபடி தமது
தன்மையே தமது அன்பர்க்கும் ஆயினமை இங்குக் குறித்துக்
காட்டியவாறு. முனிவரால் முனிவர் எனப் போற்றப் பெற்றவர் பெரு
முனிவர் என்க.
ஈண்டு நீ வருவாய்
- நீ புகுமிடம் நீ இப்போது குறித்துச்
சொல்லும் நகரமன்று. நாம் இருக்கும் இந்த இடமே' என்பதாம்.
மீண்டு நீ வருவாய் - என்று கூறுதலும் ஒன்று. பிறரால் எளிதின்
மீளக்கூடாத இவ்வுலகத்திலிருந்து மீண்டு எமது நலமிகும்
உலகத்திற்கு மீண்டு வா' என்ற குறிப்புமாம். மீளவும்
- (431) என்ற
இடத்துக் காண்க.
அயர்ப்பிலாதானே
- எந்தக் காலத்தும் எவ்விடத்திலும்
சிவனையும் அவனடியாரையும் மறவாமல் நின்று, இல்லை என்னாத
விரதங் காத்தவனே! அயர்ப்பு - மறதி- சோர்வு.
அங்கொருநா
ளருளாலே யயர்த்துண்ணப் புகுகின்றா
ரெங்கள்பிரான் றனையெறியா தயர்த்தேன் யானென |
-
சாக்கியர் - புரா - 15
|
அன்பனே ஓலம் ஓலம் - தம்மிடத்தும் அடியாரிடத்தும்
அன்பு நிறைந்தவனே. அன்பு ஒன்றே எல்லாவற்றிகற்கும் காரணமான
சிறப்புடையதாதலின் ஏனைய இடத்து ஓலம் என்று ஒரு முறை
அறைகூவியவர் அன்பனே ஓலம் ஓலம் என இங்கு இருமுறை
அடுக்கிக் கூவினார். இறைவன் தம்மையே ஒப்புவிக்கும் பொருள்
அன்பு ஒன்றுதான். பத்திவலையிற் படுவோன் காண்க என்பது
திருவாசகம். பத்திரன்டிமை யென்றான் எனத் திருவிளையாடலில்
பாணபத்திரருக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டமையும் காண்க.
அன்பே சிவமாவ தாரு மறிகிலர் என்பது திருமந்திரம். அன்பிலே
கலந்துகொண்டு இரண்டற நிற்பவர் ஆதலின் அன்பனுக்கு இருமுறை
ஓலமிட்டனர் என்க.
செயற்கருஞ் செய்கை
செய்த தீரனே-
மேற்பாட்டிலுரைத்தவை காண்க. மேற்பாட்டில் ஆசிரியர் தம்
வாக்கினால் நாயனாரது அரிய செய்கையைப் பாராட்டினார். இங்கு
இறைவனும் அவ்வாறு பாராட்டியதனைத் தெரிவிக்கின்றார்.
மயக்கறும் மறை ஓலிட்டு
- மயக்கம் - மோகம்.
உயிர்களுக்கு உள்ள மயக்கம் போக்கி உண்மை உணர்த்துவது
வேதம். அறும் மறை ஏதுப்பெயர்கொண்ட பெயரெச்சம். அறுதற்குக்
காரணமாயின மறை. ஓலிட்டு - ஓலமிலிட்டு
என்பது ஒலிட்டு என
நின்றது. செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செயவென்னும்
வாய்பாட்டு எச்சாமகப் பொருள் தந்து நின்றது. ஓலிடவும், தேடவும்
நின்றான் என்று உம்மை விரித்துரைக்க. மறை ஓலிடுதலாவது எல்லா
வகையானும் சொல்லியும் இறைவன் தன்மை தன்னளவுட் படாமல்
இளைத்து நின்று விடுதல்.
இகலி நின்ற பிரமவிட்டுணுக்களினிடையே நான்கு
வேதங்களும் வெளிப்பட்டடு நீவிர் இருவரில் ஒருவரும் பரமல்லர்
என்பது பல சரிதங்களைச் சொல்லி முறையிடவும் என எச்சமாக்கி
உரைத்தலும் ஆம் நாதரூபமாகிய மறை நாதாந்தனாகிய இறைவனை
ஓலமிட்டு அமைதல் இயல்பாம்.
மறை
ஓலிட்டு - மறைச் சொற்களால் ஒலமிட்டு, மாலயன்
தேட என்று இவ்விரண்டினையும் ஒன்று கூட்டி யுரைப்பாருமுண்டு.
மறை
ஓலிடவும் நின்றான் நாயனாரைக் கூவி ஓலமிட்டான் என
இவரது பெருமை கூறியவாறு. மறைவழி நின்ற முனிவர் பெரியர்;
அவரிலும் அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும்,
அவ்வேதத்தால் வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய
இறைவன் பெரியன்; அவனும் ஓலமிட நின்றார் இந்நாயனார் என
இவரது உயர்வு குறித்தார். இது குறிக்கவே முன்னர் முனிவர்
என்றனர். ஐந்தவித்த முனிவனாகிய கௌதமனினும் அங்ஙனம்
அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு அறுத்த நாயனார் ஆற்றல்
மிகப் பெரிதென்க.
முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்;அயராமையே
முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே
செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.
ஈண்ட
- எனப் பாடங் கொள்ளின் விரைய என்றுரைக்க.
அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் அறுவகைப்பட
ஒலங்
கூறியது போலும். 29
|