434. சென்றவர் முனியைக் காணார்; சேயிழை
                       தன்னைக் கண்டார்;

 
  பொன்றிகழ் குன்று வெள்ளிப் பொருப்பின்மேற்
                      பொலிந்த தென்னத்
தன்றுணை யுடனே வானிலே றலைவனை
                     விடைமேற் கண்டார்;
நின்றிலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தினின்
                    றெழுந்தார்; நேர்ந்தார்
.
31

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு சொல்லிச் சென்று
சேர்ந்தாராகிய நாயனார் சிவவேட முனிவரை அங்குக் கண்டிலர்;
ஆனால் அம்மையாரை மட்டுங்கண்டார்; விளங்கும் பொன்மலை
ஒன்று வெள்ளிக்குன்றின் மேலே அழகுற விளங்கியதென்னும்படி
தன்றுணைவியாகிய உமையம்மையாருடன் ஆகாயத்திலே தலைவனை
இடபவாகனத்தின் மேலே கண்டார்; கண்டதும் நின்றாரிலர்; நிலத்தில்
வீழ்ந்து அவரைத் தொழுதார்; பின்னர் எழுந்தார்; அதன் பின்
அவரைத் துதிக்க முற்பட்டாராகி,

     (வி-ரை.) சென்றவர் - வந்தெய்திய இயற்பகையார். முனி -
இறைவர்.

     பொன் திதழ் பொருப்பு - இறைவன். பொன் வண்ண
மேனியன் என்பதாம். பொருப்பு - இறைவனது பேருருவூக்கு
உவமை.

     வெள்ளிக் குன்று - குன்று போலப் பெரிய வெள்ளை விடை.
“வெள்ளிக் குன்றம் தன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண
மால்விடை“ - (பொன்வண்ணத் தந்தாதி - 1) “தூய நீறு பொன்
மேனியில் விளங்க“ (407 என) க்கூறிய வேதியர் வண்ணமே, இங்கு
விடைமேல் வந்த வண்ணமாதலின் பொன்றிகழ் - என்றார்.

      பொருப்பு
- பெருமலை; குன்று அளவிற் சிறிய
மலை.இறைவனுக்கும் விடைக்கும் தகமுறையே போந்த உவமைகள்.
பவளமே இறைவனது நிறம் என்பர். “வெள்ளி வெற்பின்மேன்
மரகதக்
கொடியுடன் விளங்குந்; தெள்ளு பேரொளிப் பவள
வெற்பென“ -(திருநாவு - புரா - 379) ஆயின் இங்குப் பொன்றிகழ்
பொருப்பு என்ற தென்னை யெனின், “பவளம் போல் மேனியிற் பால்
வெண்ணீறும்“ - (திருவிருத்தம் - கோயில்) “பவளமே திருவுடம்
பதனிற்றவளமே களபம்“ - திருவிசைப்பா - கருவூரர் - களந்தை -
5) என்ப ஆதலின் செந்நிறத்தின் மேல் விளங்கும் வெண்மை
அதனை ஒருவகைப் பொன்மை யாக்கும் என்பது நிறங்களின்
தொகுதிப் பண்பாம். செம்பொன - என்னும் வழக்கும் காண்க.
நாயனாரை வசீகரித்தது அவரது பொன்மேனியில் விளங்கிய தூயநீறே
(407) ஆதலின் அதனையே இங்குக் குறித்தார்.


     தன்றுணை
- சத்த ருடரிற் சத்தி யருளுண்டாஞ், சத்தி
யருடரிற் சத்தனருளுண்டாம்“ (திருமந்திரம் - முதற்றந்திரம் - 220);
“உடையா ளுன்ற னடுவிருக்கும் உடையா னடுவு ணீயிருத்தி“
(திருவாசகம்) முதலிய திருவாக்குக்கள் காண்க. இறைவனோ
டென்றும் பிரியாது எத்திறமீச னிற்ப மவளு நிற்பள் என்றபடி
துணையாய் நிற்கும் சிற்சத்தியாகிய உமாதேவியார் என்க. வானில்
ஞானாகாயம். நாயனார்க்கும் அம்மையார்க்கும் புலனாவது. (200)
பார்க்க.

     தலைவன் - உலகறியக்காட்டி உய்வித்தலும், ஆளாகக்
கொள்ளு தலும் தலைவன் செயல் ஆதலின் இங்கு இப்பெயராற்
கூறினார். எல்லார்க்கும் மேலாகிய - தனக்கு மேற்
பிறரொருவரில்லாத - தலைவன்.

     துணை - விடை - இவை அருட்கோலத்தின் வெளிப்படுவன.
(371 - 399) உரை காண்க.    
   
     காணார் - கண்டார் - கண்டார். வீழ்ந்தார் - எழுந்தார்.
நாயனாரிடத்து அங்கு விரைவின் ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்த
ஒவ்வோர் முற்றிய வினையையும் ஒவ்வோர் வினைமுற்றாற் கூறிப்
போந்த அழகு காண்க. பகைவரைக் கண்டு ஒறுக்க நாயனார்
விரைந்து வந்தனர்; சுற்றுமுற்றும் பார்க்கப் பகைவரைக் காணார்;
வேதியரையுங் காணார்; ஆயின் அம்மையாரை மட்டிற்
றனிக்கண்டார்; இதன் வகையறியமாட்டாராய் மேலே பார்க்கத்
தலைவனைக் கண்டார். தாம் நினைத்து வந்த எண்ணம் முற்றும்
மாறின. ஆயின் தலைவனைக் கண்ட மகிழ்ச்சிப் பெருக்கினாலே
தாங்கி நிற்கமாட்டாராய் நிலத்தில் வீழ்ந்தார்; பின்னர் எழுந்தார் என
அவரது தொடர்பாகிய மனநிகழ்ச்சிகளை இச்செயல்களின் வைத்துக்
கண்டு கொள்ளுமாறு யாத்த அழகு குறிக்க.

     நேர்ந்தார் - நேர்தல் - முற்படுதல்; முற்றெச்சம். நேர்ந்தாராகி
- என்ன (435) என்றதனுடன் முடிந்தது. வினை முற்றாகக்
கொள்ளினு மமையும். இப்பாட்டிற்கு எழுவாய் வருவிக்க. 31