435. “சொல்லுவ தறியேன்! வாழி! தோற்றிய தோற்றம்
                                 போற்றி!
 
  வல்லைவந் தருளி யென்னை வழித்தொண்டு
                       கொண்டாய் போற்றி!
எல்லையி லின்ப வெள்ள மெனக்கருள் செய்தாய்
                                 போற்றி!
தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி;
                                  யென்று
32

    (இ-ள்.) வெளிப்படை. “தேவரீரைத் துதித்துச் சொல்வதின்ன
தென்று அறியேன்; நீர் செய்த திருவருள் வாழக்கடவது; எனக்காகத்
தோற்றிய தோற்றம் போற்றப் பெறுவது; விரைவாக வந்துஅருள்
செய்து எளியேனை உமது வழியடியனாக ஆட்கொண்டீர் -
அச்செயல் போற்றப்பெறுவது; எல்லையில்லாத பேரின்ப வெள்ளத்தை
எனக்குத் தந்து அருளிச் செய்தீர் - அச்செயல் போற்றப் பெறுவது;
தில்லையம்பலத்திலே திருக்கூத்தாடுகின்ற தேவரீரது சேவடிகள்
போற்றப்பெறுவன“ என்று துதிக்க.


    (வி-ரை.) சொல்லுவது - சொல்லுதற்கு உரியதை. வகர
இடைநிலை பெற்ற, துவ்வீற்றுத் தொழிற்பெயர். இரண்டனுருபு
தொக்கது. “செய்வதறியாச் சிறுநாயேன்“ என்புழிப்போல. உரியதை
என ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. இறைவனது
பெருங்கருணைத்திறம் மிகச் சடுதியில் தமக்கு வெளிப்படக் கண்ட
மகிழ்ச்சிப் பெருக்கிலே இன்னது சொல்லற்குரியது என்றறியவராது.
ஆதலின் அறியேன் என்றார். “மூண்ட பெருமகிழ்ச்சியினால் முன்
செய்வ தறியாதே“ (அப்பூதி - புரா - 19) என்றது காண்க. இது மனம்
வாக்கு முதலிய கரணங்களின் உட்டொடர்பாகிய இயல்பு.
பதிமுதுநிலை வாக்கிறந்த தாதலின் சொல்லுவதறியேன் என்றார்
என்பதுமாம்.

     தோற்றிய தோற்றம் - முன்னும் இப்போதும்
ஐம்பொறிகளாலும் அநுபவிக்கும்படி காட்டிய எல்லாவகைத்
தோற்றங்களையும் குறித்தது.“உணர்வி னேர் பெற வருஞ்சிவ
போகத்தை யொழிவின்றி யுருவின்கண், அணையு மைம்பொறியளவினு
மெளிவர வருளினை யெனப்போற்றி“ (திருஞான - புரா - 161)
என்றது காண்க. தோற்றிய தோற்றம் - உனக்கு ஆளாகும்படி
வந்த இப்பிறவி எனக்கு ஊதியஞ் செய்ததனால் போற்றி என்றலுமாம்.
“வந்த பிறப்பை வணங்குவாம்“ (சண்டீசர் புரா - 60) காண்க.
 
    என்னை வழித் தொண்டு கொண்டாய் - என்னை -
தொண்டராகப் பற்றாத என்னையும். இழிவு சிறப்பும்மை தொக்கது.
“என்னையு மடியானாக்கி“ - கந்தபுராணம் வழித் தொண்டு
கொண்டாய் -வழிவழித் தொண்டர்க்குரிய அருளினைச் செய்து
ஆட்கொண்டாய். வல்லை - அருளின் விரைவு குறித்தது.
எல்லையில் இன்ப வெள்ளம் - இறைவன் றிருவருள்
அளவுபடாததோர் “பேரின்ப வெள்ளப் பெருக்காறு“ என்பர்.

     தில்லையம் பலத்துளாடும் சேவடி - சிதாகாசத் திருக்கூத்து;
ஐந்தொழிலிலே இறுதிக்கண்ணதாகிய அருட்டிறம் இங்குக்
காட்டினபடியால் ஐந்தொழில் நடனம் செய்யும் சேவடியைப்
போற்றினார். வானில் என்று ஞானாகாயத்தைக் கூறினபடியால்
அம்பலக் கூத்தைப் போற்றினார் என்றலுமாம். 32