436. விண்ணிடை நின்ற வெள்ளை விடைய ரடியார்
                               தம்மை
 
  எண்ணிய வுலகு தன்னி லிப்படி நம்பா லன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுதி
                               லாதாய்!
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போது“
                               கென்று.
33

     (இ-ள்.) வெளிப்படை. ஆகாயத்திலே நின்ற வெள்ளை
விடையினை உடையாராகிய இறைவர் தமது அடியவராகிய
நாயனாரை நோக்கி “எண்ணிய உலகிலே இவ்வாறு நம்மிடம் நீ
செலுத்திய அன்பினைக் கண்டு மகிழ்ச்சி யடைந்தோம்.
குற்றமில்லாதவனே! நண்ணிய மனைவியுடனே நம்முடன்
போதுவாயாக!“ என்று அருளிச் செய்தது.


     (வி-ரை.) வெள்ளை விடையவர் - ஆகாயத்தில் பொன்றிகழ்
பொருப்பும் வெள்ளிக் குன்றுமாக வெளிப்பட்டுநின்ற இறைவர். இவர்
என்றும் விடைப்பாகரே யாவர்; ஆயின் பக்குவிகளுக்கே
வெளிப்படுவர்; அவ்வாறு வெளிப்பட்டு நின்ற கோலம் என்பார்
விண்ணிடை நின்ற என்றார். என்றுமுள்ள கோலமும் அதுவே
என்பார், வரும் பாட்டிற் பொருவிடைப்பாகர் என்றார். நின்ற
விடையவராகிய விடைப்பாகர் - என்று - விளித்து - புக்கார் -
எனக் கூட்டி முடிக்க.  

     எண்ணிய வுலகு - “புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம்
போக்குகின்றோமவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறு“
(திருவாசகம்) என்று திருமால் முதலிய தேவர்களும் எண்ணக்கிடந்த
இவ்வுலகம். இது சிவபூசை செய்து இறைவனை யடையும்
சாதனமாதலின் அச்சிறப்பு நோக்கி அறிவோர் யாவரும்
எண்ணக்கிடந்த என்றபடியாம். “காணப்பெற்றால், மனித்தப் பிறவியும்
வேண்டுவதே யிந்த மாநிலத்தே“, “கண்டின்புற, வின்னம்
பாலிக்கும்மோ விப் பிறவியே“ என்று அப்பர் பெருமான்
அருளியதும் காண்க. மேல் கீழ் நடு என் றெண்ணப்பட்ட
என்றுரைப்பாரு முண்டு.

     எண்ணிய - செய்யிய வாய்பாட்டு வினை யெச்சமாகக்
கொண்டு எண்ணும் பொருட்டு - உயிர்கள் பாராட்டியுய்யும்
பொருட்டு என்றலுமாம்.

     இப்படி - நீ செயற்கரும் செய்கை செய்த இந்தப்படி.

     அன்பு பண்ணிய பரிவு - அன்பினாலே பண்ணிய பரிந்த
செயல்.பரிவு - பரிந்த செயலுக்கு ஆகுபெயர். கண்டு . “காட்டுவான்“
- (407), “விளக்கம் காண“, “நெறி காட்டும் ஆற்றால்“ (369) என்ற
பாட்டுக்களின் உரை காண்க. இவ்வாறன்றி இறைவன் நாயனாரைச்
சோதித்தார் என்றும், அச்சோதனையில் நாயனார் முழுவெற்றி
பெற்றனர் என்றும், அது பற்றியே அவரை இயற்பகை முனிவா என்று
விளித்தார் என்றும் பலவாறு உரை கூறுவர். முற்றறி வுடைய
இறைவன் சோதித்தறிய வேண்டாமையின் இவை பொருளன் றென்க.

     பழுதிலாதாய் - எக்காலத்தும் குற்றம் என்பதில்லாதவனே.
முனிவர் எனப் பேருடையோர் பலர்க்கும் ஒவ்வொரு பழுதுண்டு;
ஒருவகையானும் பழுதில்லாதவனே.

     நண்ணிய மனைவி - இச்சரித நிகழ்ச்சிக்குக் காரணமாய்ப்
பொருந்திய மனைவி. “மன்னு காதலுன் மனைவி“யாய் (410)
நண்ணிய எனவும், “என்னியிர்க் கொருநாதர் நீருரைத்த தொன்மை
நான்செயு மத்தனையல்லா லுரிமை வேறுளதோவெனக்கு“ (412) என்று
தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் நண்ணிய எனவும், உன்னாற்
கொடுக்கப் பெற்று உன் சொல்வழி கடவாது என்பால் நண்ணிய
எனவும் பல வகையும் கூட்டி உரைக்க வைத்த அழகு காண்க.

     மனைவியோடு நம்முடன் போதுக - நீ வழிப்படுத்த
மனைவி முன்னேர நம்முடன் போயினள்; ஆதலின் அவளை உடன்
போதுக என்று சொல்லுதல் வேண்டா; நண்ணிய மனைவி
போதுவதோடு நம்முடன் நீயும் போதுக என்பது. நீயும் என
வருவிக்க. ஒடு - மூன்றாம் வேற்றுமை உருபு. இவ்வொன்றனையே
உருபாகக் கொண்டு மூன்றாம் வேற்றுமைக்கு ஒடு வேற்றுமை எனப்
பெயர் கூறுவர் தொல்காப்பியர். “வினை முதல் கருவி யனைமுதற்
றதுவே“ என இதற்குப் பெருள் கூறி, அதனை முடிக்க வரும்
பொருள் வேறுபாடுகளிலே
“அதனொ டியைந்த வொருவினைக்
கிளவி“ என்று வகுக்கும் வகையிலே வைத்து இங்குப் பொருள்
கொள்க. “செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி யெய்திய
தொழின்முத லியைபுடைத் ததன்பொருள்“ என்பர் ஆசிரியர்
அகத்தியனார். ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் என்புழிப்
போலக் கொள்க. “கொடியொடு துவக்குண்டான் என்புழிப்போல
வினைமுதற்பொருளுங் கொள்ளுவர். எங்ஙனமாயினும்
மனைவியாரிடத்துச் சிறப்புக் காண்க. ஒடுவின் நீட்டமே ஒடு என்னும்
உருபாம். மனைவியாரிடம் சார்த்திய சிறப்பாவது நாயனாரது
அடிமைத் திறத்தின் நிகழ்ச்சிக்கு உற்ற கருவியா யிருந்தமையானும்,
பத்திரகிரியாரும் சேந்தனாரும் தம்மை வழிப்படுத்திய
பட்டினத்தடிகளின் முன்னரே பேறு பெற்றமை போல, நாயனார்
பெறற்கு முன்னர்ப்பேறு பெற்றமையானும் அமையும். 

     போதுக - அகர வீறு கெட்டது.

     பரிவுநோக்கி - என்பதும் பாடம். 33