437. திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர்
                          தமக்குந் தேற்ற
 
  மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந்
                                   தக்க
பெருகிய வருளி னீடு பேறளித் திமையோ
                                 ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது
                          வதனுட் புக்கார்.
34

     (இ-ள்.) வெளிப்படை. அருட்டிரு வளர்கின்ற சிறப்பு மிகுந்த
திருத்தொண்டருக்கும், தேற்றமுடைய தெய்வக்கற்பிற் சிறந்த
மனைவியார்க்கும் தக்கவாறு பெருகிய அருளில் நீடுகின்ற
முத்திப்பேற்றினை அளித்து, அதன் பின், இவ்வருளின் திறத்தினைத்
தேவர்கள் துதி செய்ய, அவ்விடப்பாகராகிய இறைவர்தாம் என்றும்
நிலைத்திருக்கின்ற தமது சிதாகாய நிறைவாகிய
பொன்னம்பலத்தினுள்ளே எழுந்தருளினார்.

     (வி-ரை.) திருவளர் சிறப்பு - நாயனாரின்மூலம் தொண்டின்
உண்மை நிலையினை உலகுக்கு இறைவன் காட்டியருனினானாதலால்
அருட்டிரு உலகிலே வளர்ச்சிபெற்றது என்க.

     தேற்றம் மருவிய - முன்னர்க் கலங்கிப் பின்னர்
மனந்தெளிந்து கற்பின் நிலை இது எனக் கடைப்பிடித்தவராதலின்
(411, 412) தேற்றம் மருவிய என்றார். தேற்றம் - தெளிந்த நிலை.
கற்புநிலையிற் றேறித் தெளிந்தவர் என்றலுமாம். தோற்றம் - சிறப்பு
என்ற பொருளும் பெற நின்றது. கற்பின் றேற்றமே நாயனார் பணித்த
பணியிலே அம்மையாரிசைந்தொழுகியதற்கும், மேற்சரித
நிகழ்ச்சிக்கும் காரணமாயிற்று, ஆதலின் இங்கு அதனை எடுத்துக்
காட்டி அதனால் அம்மையாரைச் சுட்டிக் கூறினார்.

     தக்க - அவர் பக்குவத்துக்குத் தகுதியாகிய.

     பெருகிய அருளின் நீடு பேறு - அருளிலே திளைத்து
நிலைத்து வாழும்வீடுபேறு.

     பொற்பொது - எங்கும் நிறைவாகிய உண்மையும் அறிவும்
ஆனந்தமுமாகிய நிலை

     புக்கார் - வெளிப்பட்ட நிலையிலிருந்து வியாபக நிலையினுட்
புகுந்தனர். 

     இமையோர் ஏத்த - எப்போதும் துதித்துப் பழகி
அருளியல்பினைச் செம்மையாய் அறிந்தாராதலின் அவர் ஏத்த
என்றார். “அமரரெல்லாம் பொருளார் கவிசொல்ல“ -
பொன்வண்ணத்தந்தாதி - 25.

     தோற்ற மருவிய - என்பதும் பாடம். 34