438. வானவர் பூவின் மாரி பொழியமா மறைக ளார்ப்ப
 
  ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ
                                  கத்தில்
ஊனமி றொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை
                                 பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும் வானிடை யின்பம்
                                 பெற்றார்.
35

     (இ-ள்.) வெளிப்படை. தேவர்கள் பூமழை பொழியவும், பெரிய
வேதங்கள் ஒலிக்கவும், ஞானமா முனிவர்கள் துதிக்கவும், நன்மை
மிகுந்த சிவலோகத்திலே ஊனமற்ற திருத்தொண்டராகிய இயற்பகை
நாயனார், (முன்னே சேர்ந்த மனைவி யாரோடு) இறைவனுடன்
நீங்காமல் இருக்கும் பெருமை பெற்றனர். இவர்களுடன் பகைத்துப்
போர் செய்து இறந்துபட்ட மற்றச் சுற்றத்தார்களும் வீரசுவர்க்கத்தின்
இன்பத்தைப் பெற்றார்கள்.

     (வி-ரை.) வின் மாரி - (398) பார்க்க.

     மறைகளார்ப்ப - வானவர் ஒரோர் காலம் தாம்கற்ற மறை
விதிகளைமறந்தும், அரன் பெருமைகளை மறந்தும் அபசாரப்படுவர்.
மறைகள் ஈசனருளியல்பினை எஞ்
ஞான்றும் ஒரு படித்தாகவே
துதிக்கும்; பிறர்க்கும் புகட்டும். எனவே, இது வானவர் பூமழைக்கு
மேற்பட்டதாதலின் அடுத்துக் கூறினார். ஞான முனிவர் மறை
முடிவில்விளங்கும் ஞானச் சுவானுபூதிமான்களாதலின் அடுத்துக்
கூறப்பெற்றனர். மறைகள் சொல்வாரின்றியே வேத வொலிகள்
மிகுந்தன என்க. இது பெருநன்மைகளும் பெரிய அருளிப்பாடுகளும்
நேர்ந்தபோது நிகழ்வது. “ஓதுமறை யோர்பிறி துரைத்திடினு மோவா,
வேதமொழி யாலொலி விளங்கியெழு மெங்கும்“ (31), “தரை
முதலான, எங்கணு மியற்றுபவரின்றியு மியம்பும், மங்கல முழக்கொலி
மலிந்த மறு கொல்லாம்“ (33) என்ற திருஞானசம்பந்த நாயனார்
அவதாரத்திற் போந்த நிகழ்சிகள் காண்க.

     ஊனமில் தொண்டர் - பசுபோத மில்லையாகப்பெற்ற
தொண்டினையுடைய நாயனார். ஊனம - பசுபோதம். ஊனக்கண்
பாசம்
- என்ற சிவஞானபோதங் காண்க.

     நலமிகு சிவலோகத்தில் - சிவானந்த போகமே வளர்கின்ற
அபரமுத்தித் தானமாகிய சுத்தபுவனத்திலே நலமே எனப் பிரிநிலை
ஏகாரம் விரித்துரைக்க. கும்பிடுதல் - ஓங்குணர்வி னுள்ளடங்கி
நிற்றல். உடனுறைதல - இரண்டற்று நிற்றல். பெருமை - பேரின்பம்.

     சுற்றத்தாரும் வானிடை யின்பம் பெற்றார் - வானிடை
யின்பம் - இது வீர சுவர்க்கம் என்பர். நாயனார் (தொண்டர்) பெற்ற
சிவலேகாத்தில் கும்பிட்டு உடனுறை பெருமை என்றது வேறு -
இவர்கள் (சுற்றத்தார்) பெற்ற வானிடையின்பம் வேறு. முன்னையது
“பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா
வின்ப மாகடலே“ - (திருவாசகம் - பிரார்த்தனைப் பத்து - 6) என்ற
படி யுள்ளநிலை. சுற்றத்தாரும - உம்மை இழிவு சிறப்பு. இறந்தது
தழுவியது என்று முரைப்பர். சுற்றத்தார்களும் வானிடையின்பம்
பெறக் காரணம் அவர்கள் தரும வழியினைப் பற்றி
யொழுகியமையாலும், நாயனாரிடத்தும் அம்மையாரிடத்தும்
தம்மிடத்தும் குலப்பழி சாராது காக்கப் பரிவுகொண் டணைந்தமையாலும், அந்தத் தருமச்  செயலிலே தமது உயிரையங்
கொடுக்கத் துணிந்தமையாலும், நாயனார் கையின் தூய வாளினாலே
தண்டிக்கப் பெற்றமையாலும் ஆயிற்று என்க. 35