44. எம்பி ராட்டியிவ் வேழுல கீன்றவள்  
  தம்பி ரானைத் தனித்தவத் தாலெய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்
றும்பர் போற்றும் பதியு முடையது.
34

     (இ-ள்.) எம்பிராட்டி ... என்று - எமது பெருமாட்டியும்
இவ்வேழுலகங்களையும் பெற்றெடுத்த தாயும் ஆகிய
காமாட்சியம்மையார் தமது பெருமானாகிய இறைவனைத் தனித்தவஞ்
செய்து வெளிப்படக் கண்டு கம்பையாற்றின் கரையிலே பூசித்த
காஞ்சீபுரம் என்னும் பேருடைய; உம்பர் ... உடையது - தேவர்களும்
வந்து வணங்கும் தலத்தையும் அத்தென்றிசை உடையதாம்.

     (வி-ரை.) தென்றிசை - என்ற எழுவாய் வருவித்துரைக்க.

     எம்பிராட்டி - எமது தலைவி - பெருமாட்டி. ஏழுலகு
ஈன்றவளாகிய எம்பிராட்டி என்க.

     தனித்தவத்தால் எய்தி - ஒப்பற்ற தவஞ் செய்து அது
காரணமாக இறைவன் வெளிப்படக் கண்டு அடைந்து; தனித்துப்
போந்து தவம் செய்து என்றுமாம். இத்தவத்தின் வரலாறும், வழிபட்ட
வரலாறும் அதனால் உயிர்கள் அடையும் பேறும் திருக்குறிப்புத்
தொண்ட நாயனார் புராணம் 49 முதல் 71 வரை உள்ள
திருப்பாட்டுக்களினாலும், காஞ்சிப் புராணம் முதலியவற்றானும்
அறிக.

     கம்பை - ஆறு. இப்போது இது இங்குப் பூமியின்கீழ் ஓடும்.
பிராட்டி பெருமானை அவர் வெளிப்பட்ட பிருதிவியிலே தாபித்துப்
பூசித்துக்கொண்டு இருக்கும்போது இறைவன் அருளாலே ஆறு
பெருகிவர, அம்மைநடுங்கி இறைவனது திருமேனியை ஆற்றின்
வெள்ளத்திற் போகாதபடி தழுவிக்கொண்டாள் என்பது சரிதம்.
கம்பம் - நடுக்கம்; நடுக்கத்தை உண்டாக்கியதால் கம்பை
எனப்பெற்றதாம். “......வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி
ஓடித் தழுவ வெளிப்பட்ட, கள்ளக்கம்பனை...” என்ற
சுந்தரமூர்த்திகள் தேவாரமும் காண்க. பின்னரும்
“வெருக்கொண்டே” (திருக்குறிப்பு - 63) என்பது காண்க.

     வழிபடு காஞ்சி - வழிபடப்பெற்ற இடமாகிய காஞ்சி.
மேற்காட்டிய சுந்தரமூர்த்திகள் தேவாரப் பதிகத்திலே
பாட்டுத்தோறும் “வழிபடப்பெற்ற” என்ற குறிப்பும் காண்க. இத்
திருப்பதிகத்தின் உட்குறிப்பைக் காட்டுவதற்கு ஆசிரியர் இவ்வாறு
கூறினார் என்றலுமாம்.

"......மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி
மனைய றம்பெருக் குங்கரு ணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலி னீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்"
                  - திருக்குறிப்பு - 71

என்றபடி இது அம்பிகை விளக்கமாகிய தலம். திருவாரூர், இறைவன்
விளக்கமாகிய தலம் என்பது மேலே குறிக்கப்பெற்றது. பின்னும்
இவ்வுண்மையைப் பிருதிவித் தலமாகிய திருவொற்றியூரிலே சபதம்
தப்பிய காரணத்தால் சுந்தரமூர்த்திகள் இழந்த இரண்டு கண்களில்,
காஞ்சீபுரத்திலே இடதுகண்ணையும், திருவாரூரிலே வலது
கண்ணையும் இறைவன் அருளப்பெற்றார் என்ற சரித்திரத்தாலும்
அறிகின்றோம். “மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண்
கொடுத்தார்” “முலைச்சுவட்டுக் கோலந்தான், காட்டுதலும்”
(ஏயர்கோன் புரா - 287 - 288) என்று புராணம் குறிப்பதும்,
தேவாரத்திலே இச்சரிதத்தையே நம்பிகள் குறிப்பதும் காண்க.
எனவே, இவையிரண்டும் கூடி ஒன்றாகி முழுக்காட்சி
பெறும்தன்மையில் இவற்றது ஒற்றுமை வேற்றுமைகளைக்
கண்டுகொள்க. காஞ்சி - கா + அஞ்சி - பிரமனும் சரஸ்வதியும்
பூசித்தது என்று பொருள் கூறுவர்.

     வழிபட்டது - தம்பொருட்டன்றி உயிர்கள்மேல் வைத்த
கருணையினாலே அவைகளைச் சிவபூசையிலே வழிப்படுத்தி நன்மை
தருதற்பொருட்டே அம்மையார் செய்தனர்; “இவ்வேழுலகீன்றவள்”
ஆதலின் - எனக் குறித்தமை காண்க. இது பூசை முடிவில்
அம்மையார் கேட்டுப் பெற்ற வரங்களால் அறியப்படும்.

     தம்பிரான் - (மேலே 19-வது பாட்டிற் காண்க.) தம்மை
அம்மை தழுவத் தந்து முலைத்தழும்பும் கொண்டதற்கு, உயிர்கள்
போகம் பெற்று உய்ய வேண்டுமென்னும் கருணையே காரணமாம்.

"தில்லைச்சிற் றம்பலவன், பெண்பா லுகந்திலனேற்
                         பேதாயிருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ"
                          - திருச்சாழல் - 9

“துடிகொணே ரிடையாள் சுரிகுழன் மடந்தை
துணைமுலைக் கண்கடோய் சுவடு
பொடிகொள்வான் றழலிற் புள்ளிபோ லிரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே....“- அருட்பத்து - 5.

எனவரும் திருவாசகங்களும் காண்க. 34