440. அம்பொ னீடிய வம்ப லத்தினி லாடு வாரடி
                                  சூடுவார்
 
  தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மை
                               தரித்துளார்
நம்பு வாய்மையி னீடு சூத்திர நற்கு லஞ்செய்
                                தவத்தினா
லிம்பர் ஞாலம் விளக்கி னாரிளை யான்கு டிப்பதி
                                 மாறனார்.
1

    (இ-ள்.) அம்பொன்....சூடுவார் - அழகிய பொன்னினால்
வேய்ந்து நீடிய அம்பலத்திலே ஆடுகின்ற கூத்தரது திருவடிகளை
எப்போதும் சிரத்திற் சூடிக்கொள்பவர்; தம்பிரான்...தரித்துளார் -
சிவபெருமானது அடிமைத்திறத்திலே உயர்ந்த சால்பினாலுளதாகிய
மேன்மை தம்மதாகத் தரித்து வாழ்பவர்; நம்பு
வாய்மையில்....மாறனார்
- நம்பிக்கைக்குரியதாகிய நீடிய சூத்திர
நற்குலஞ் செய்த தவங் காரணமாக அவதரித்து இவ்வுலகத்தை
விளக்கஞ் செய்தார்; இளையான்குடி என்னும் பதியிலே அவதரித்த
மாறன் என்ற பெயருடைய பெரியவர்.

     (வி-ரை.) அம்பொன் நீடிய அம்பலம் - பொன்னம்பலம்.

     பொன் நீடிய - அவ்வக்காலங்களிலே பற்பலராலும்
பொன்னால் வேயப்பெற்றமையாலே நீடிவரும். முதலில் தேவர்கள்
நடந் தரிசித்துப் பொன் வேய்ந்தனர். அதன் பின்னர் இரணியவருமச்
சக்கரவர்த்தி வேய்ந்தனர். “முழுதும் வானுலகத்துள தேவர்கள்,
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினா, லெழுதிவேய்ந்தசிற்
றம்பலக் கூத்தன்“ (திருக்குறுந்தொகை - கோயில் - 8) என்ற அப்பர்
பெருமான் தேவாரமும் காண்க. நீடிய என்றதன் பயனாய் அதன்
பின்னர் அநபாயச் சக்கரவர்த்தி முதலிய பலரும், இந்நாள்வரையும்
பொன்வேய்ந்து நீடிவருதல் கண்கூடு.

     ஆடுவார் அடி சூடுவார் - ஆடுவாரது திரு அடிமலர்களைத்
தமது முடியிலே சூட்டிக்கொள்பவர். சூடுவார் என்றதனால் அடிகளை
மலர்களாகவும், சூடுமிடம் முடியாகவும் வருவித்துரைக்க. “குஞ்சிப்
பூவாய்நின்ற சேவடியாய்“ - அப்பர் சுவாமிகள் - திருப்பழனம் - 10.

     உயர் சால்பின் மேன்மை தரித்துளார் - அன்பு - நாண் -
ஒப்புரவு கண்ணோட்டம் - வாய்மை என்ற ஐந்தானியன்று சிறந்த
சால்பு என்ற தன்மையானது அடிமைத் திறத்தினைச் சார்ந்ததனாலே
உயர்ந்து மேம்பட, அதனைத் தம்மிடத்துச் சாரும்படி தரித்துள்ளவர்.

     நம்பு வாய்மை - நம்புதற்குக் காரணமாகிய வாய்மை. மேலே
கூறியபடி சால்பினுக்கு உரிய ஐந்து குணங்களும் அதனைத் தாங்கும்
தூண்கள் என்பர். ஆயினும் ஏனைய நான்கும் வாய்மையைச் சாரவே
சிறப்புப் பெறுவன என்று குறிக்க “வாய்மையோ டைந்துசால் பூன்றிய
தூண்“ என ஒடு விகுதி கூட்டி உரைத்தார் திருவள்ளுவ நாயனார்.

     அக்கருத்துப் பற்றியே இங்கு ஆசிரியர் நம்பு வாய்மையின்
என்று பிரித்து விதந்து எடுத்துக் கூறினார். வாய்மையின் நீடு சூத்திர
நற்குலம் - வாய்மைத் தன்மையிலே நீடி வருகின்ற சூத்திரன் என்ற
பெயரா லறியப் பெறும் நல்ல குலம். நல - நல்ல. நலம - சுத்தம்.
“சூத்ரா சுத்த குலோத்பவா;“ என்பது சிவாகமம். சூத்திரப் பெயர்
இங்கு உழுதொழிலாளரைக் குறித்தது. இதற்குத் தாசி மகன்
என்பவாதி பொருள்கொண்டு இஃதிங்கு இடைச்செருகலாய்ப் போந்த
தென்றும் இங்கு மேழியர் என்ற சொல் இருக்க வேண்டுமென்றும்
மற்றும் பலவாறு மலைவுறுவார் பலர். சூத்திரன் என்ற வருணப்
பெயர் அவ்வாறு இழிபொருளில் வந்தமை பெருவழக்கிற்
காணலாகாது. “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற
நலம்“ '(வாயிலார் புராணம் - 6) என்று ஆசிரியர் பின்னரும்
இக்குலப் பெருமையைச் சிறப்பித்தமை காண்க.
உழுதொழிலாளர்களைச் சூத்திரர் எனவும், நான்காம் வருணத்தவர்
எனவும் பேசுதல் ஆசிரியர் காலத்தில் வழக்காயிருந்தது.
அப்பெயரால் ஏதும் இழிபு குறித்திருப்பின் ஆசிரியர் அதனை
ஆண்டிரார்.இங்குச் சற்சூத்திரர் - அசற் சூத்திரர் - என
இருபிரிவுபடுத்திப் பேசுவாரு முண்டு. எங்ஙனமாயினும் இங்கு
ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே இப்பெயராற் போந்த குலம்
சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால் வரும்“ என்று அடுத்த
பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.

      இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண
குலத்தவர் எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும்
இந்நாயனார் சூத்திர நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை
ஒன்றும் காணப் பெறவில்லை. வேளாளரை வாய்மையின்
மன்மைபற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு.
     
      உழுதுண்போர்
- உழுவித்துண்போர் என்ற பாகுபாடு கருதி
இவ்வாறு வேறு வேறாக குறிக்கப்பெற்றதோ என்று
ஐயங்கொள்வாருமுண்டு. “பின்னவர் சதுர்த்தர் பெருக்களார்
வன்மையர் - மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வர் - உழவ
ரேரினர் வாணர் காராளர் - விளைஞர் மேழியா வேளாள
ரென்றிவை - தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே“ - (பிங்கல
கெண்டு - ஐந்தாவது ஆடவர்வகை - பெயர்ப்பிரிவு - 55). இப்பெயர்
பற்றி இந்நாளில் எழும் பல் வகைப் பூசல்களையும் இப்புராணத்தின்
எல்லைக்குட் கொண்டு புகுத்தி இடர்ப்படுதற்கு யாதோரியைபு
மின்றென்க.

     குலஞ்செய் தவத்தினால் - ஞாலம் விளக்கினார் -
குலஞ்செய்த தவப்பேறாக அதனில் வந்தவதரித்து இவ்வுலகை
வாழ்வித்தவர் என்க. 408 உரை காண்க. குலம் தவம் செய்து
அவரைத் தன்னிடத்துப் பெற்றதென்பதாம்.

     1இளையான்குடிப்பதி - இளையான்குடியின் தலைவராவார்
என்றலுமாம். பதி - முதல்வர் - தலைவர்.

     தவத்தினார் - என்பதும் பாடம். 1


     1இளையான்குடி - இது சோழநாட்டில் திருநள்ளாற்றுக்கு
மேற்கே 2நாழிகையளவில் உள்ளது என்றும், பத்தகுடி என்ற
இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 3/4 நாழிகையில் மட்சாலையில்
இதனை யடையலாம் என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் பழைய
சிவாலயமு மொன்றுண்டு.புராணத்து வரும் நாற்றங்கால் கோயிலுக்குத்
தெற்கில் உள்ளது. இதனை முளைவாரிக்குட்டை - முளைவாரி
நாற்றங்கால் என வழங்குகின்றனர். சோழமண்டல சதகமும் இப்பதி
சோழநாட்டிலுள்ளதாகப் பேசுகின்றது.