444. ஆளு நாயக ரன்ப ரானவ ரளவி லாருள மகிழவே
 
  நாளு நாளு நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையி
                                னன்மையா
னீளு மாநிதி யின்ப ரப்பு நெருங்கு செல்வ
                              நிலாவியெண்
டோளி னாரள கைக்கி ருத்திய தோழ னாரென
                                வாழுநாள்,
5

     (இ-ள்.) வெளிப்படை. எல்லா உயிர்களையும் தமக்கு
ஆளாகஉடைய இறைவனது அன்பராயினார்கள் அளவில்லாதவர்கள்
மனமகிழ்ந்து ஒவ்வோர் நாளும் பெருகிக் கூடிவந்த திருவமுது
செய்து இவருடைய அன்பினை அனுபவித்த தன்மையின் பயனாகிய
நன்மையினாலே, நீளும் பெருஞ் செல்வங்களின் பரப்பும், நெருங்கு
செல்வங்களும் நீடித்துப் பெருக்கெடுக்க, எண்டோளராகிய
சிவபெருமான் அளகாபுரியினை ஆளும்படி அமைத்த தமது
தோழனாராகிய குபேரனே இவர் என்று சொல்லும்படி நாயனார்
வாழ்ந்து வருகின்ற நாளிலே,

     (வி-ரை.) நாயகரன்பரானவர் - முன்னர், வேணியார்
அடியார் (441), ஐயர் அன்பர் (442), நாயகர் தொண்டர் (443), என்று
கூறியதுபோலவே இங்கும் கூறினார். அரனுக்கும் அடியார்க்கும
வேற்றுமை தொக நிற்பதும் அமைப்பாம். நாயகரும் அன்பரும் என்று
உம்மைத் தொகையாக்கி அன்பர்களுக்குள்ளே நின்று நாயகரும்
அமுது கொண்டருளியமை குறிப்பாம். இச்சரித நிகழ்ச்சியிலே
அடியாராகி நாயகரே அமுது கொள்ள வந்தமையும் குறித்தது.

     அளவிலார் - வகையாலும் தொகையாலும் மட்டுமன்றிப்,
பெருமையினாலும் அளவுட்படாதவர்கள். 5-ம் பாட்டும் உரையும்
காண்க.      

     தன்மையின் நன்மையால
- தன்மையினால் உளதாகிய
நன்மை காரணமாக.

     நீளுமா நிதியின் பரப்பு நீளும - மா - பரப்பு -
என்பன செல்வங்களின் வகை தொகைகளின் பெருமை குறீத்த அடைமொழிகள். இவை நிலம் முதலிய பலவுங் குறிப்பன. நெருங்கு
செல்வம்
- இது பொன் மணி முதலிய பிற செல்வமெல்லாம்
குறிக்கும். பரப்பும் - செல்வமும் - உம்மைத் தொகை.

     எண்தோளினார் - சிவபெருமான். “எண்டோள் வீசிநின்
றாடும் பிரான்“ - திருவங்கமாலை. அளகைக் கிருத்திய
தோழனார் - தோளினார் இருத்திய தோழனார் என்க. அளகை -
குபேரனது தலைநகர். இருத்திய - அளகையில் அரசு செலுத்தும்படி
வைத்த. தோழனார் - குபேரனைச் சிவபெருமான் றோழர் என்பது
வழக்கு. “மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்“ -
திருத்தாண்டகம், என - என்று சொல்லும்படி. 5