446. இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பி ரானிளை
                               யான்குடி
 
  மன்னன் மாறன் மனஞ்சு ருங்குத லின்றி யுள்ளன
                                மாறியுந்
தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன
                            கொண்டுபின்
முன்னை மாறி றிருப்ப ணிக்கண் முதிர்ந்த
                     கொள்கைய ராயினார்.
7

     (இ-ள்.) வெளிப்படை. இப்படியாகத் தமது செல்வங்கள்
சுருங்கியபோதிலும், எமது பெருமானும், இளையான்குடியின்
தலைவரும் ஆகிய மாறனார் மனநிலை சிறிதும் சுருங்காமல் நின்று,
தம்மிடம் இருப்பனவற்றை மாற்றியும் தன்னை மாறிக்கொடுக்கத்
தக்கனவாகிய கடன்களை வாங்கியும், பின்னும், முன்னர்ச்
செய்துவந்த ஒப்பற்ற அடியார் பூசையாகிய திருப்பணியிலே மேலும்
முறுகிய நிலைமையை உடையவராயினார்.

     (வி-ரை.) இன்னவாறு - தில்லை மன்னினார் உன்னுதலும்
அதனால் வளஞ்சுருங்கியதும் ஒன்றினொன்று இடையீடு பெறாது
உடனிகழ்ந்தன. இறைவனது நினைப்பே உலகப் படைப்பு மறைப்பு
முதலிய செயலாதலின், அந்நினைப்பாகிய காரணத்திற்கும் அதன்
காரியமாகிய மறைவுக்கும் இடையில் காலதாமதம்முதலிய
வேறெதுவுமில்லை. ஆதலின் உன்னினார்- சுருங்கிற்று -
சுருங்கவும் என்று சுருங்கிய செயலை வேறு பிரித்துக் கூறாராயினர்.
மேலும் செல்வப்பெருக்கைப் பெருக்கிக் கூறுவாரன்றிச் சுருங்கியது
முதலிய செயல்களைத் தம் வாக்காற் பிரித்துக் கூறுதல் ஆசிரியர்
மரபுமன்று. சுருங்கிய செயல் முற்றாய் நிற்காது. பின்னர்ப் பெருகிய
செயலாய் முற்றியதாகிறது (465). ஆதலின் அதனை முற்றிய
செயலேயாக வினைமுற்றாற் கூறாது எஞ்சிய செயலாகச் சுருங்கவும்
என வினையெச்சமாக உரைத்துச் சென்றார் என்றலுமாம்.

     இளையான்குடி மன்னன் இளையான் குடிப்பதி - (440)
என்றதும் காண்க. மன்னன் என்றதனால் இவர் அவ்வூரில் ஒரு
சிற்றரசராகவோ குறுநிலமன்னராகவோ இருந்தனர் என்றும், மாறன்
- என்றது பாண்டிநாட்டு அரசின் வழக்குப் பெயரென்றும், பிறவும்
இங்கு ஆராய்ச்சி செய்வாருமுண்டு. மாறன் என்பது அந்நாள்
வேளாளர் கொண்டு வழங்கியதோர் பெயர்போலும். ‘வல்லங்கிழான்
மாறன்' என்பது வேளாளர்க்குரிய பெயராய்ப் பேராசிரியர்
தொல்காப்பியம் - மரபியல். “ஊரும் பெயரும்“ (74) என்ற சூத்திர
உரையில் உதாரணங் காட்டியதும் காண்க. வளஞ்சுருங்கிக் கடன்
வாங்கு நிலைமையிலே அவர்க்கு ஊர்த்தலைமை சிறப்பாகப்
பெறப்படாமை உணர்க. ஊரிற் பெரியார் எனக் கொள்ளுதல்
சிறப்புடைத்தென்பர். “கலையார் கலிக்காழியர் மன்னன்“, “புகலி
வேந்தன்“, “வளர்நா வலர்கோன் நம்பியா ரூரன்“ என்பனவாதி
திருவாக்குக்கள் காண்க. மன்னன் - முன்னர் வளம் பெருகிய
காலத்தன்றி வளஞ்சுருங்கிய காலத்து இங்கு மன்னன் என்றதன்
காரணம் மனஞ் சுருங்குதலின்றி என்றதனாற் கூறினார். “செல்வ
மென்பது சிந்தையி னிறைவே“ என்பது பெரியார் பாட்டு. ஆதலின்
மனஞ் சுருங்குதலில்லாத துணையானே எல்லாச் செல்வமுமுடையார்
ஆதலின் மன்னன் எனப் பெற்றதாம். எல்லா முடையாரும்
செய்யலாகாத அரிய செய்கையினை இவர் வளமில்லாக்
காலத்துச்செய்ய வல்லராதல் இந்த மனத்தை
உடைமையானேயாம்
என்பது பின்னர்க் காண்க. வல்லர் என மேற்பாட்டிற் கூறிய
குறிப்பும் காண்க.

     மனஞ் சுருங்குதலில்லாமை - செல்வமில்லாமை கருதி
அடியார் பூசையைச் சுருக்க எண்ணாது, உள்ள காலத்துச் செய்தது
போலவே, செய்தல் வேண்டுமென்று மனத்தில் ஆர்வமிக
வுடையராய்ச் செயல் புரிதல். பூசலார் நாயனார் சரிதங் காண்க.

     உள்ளன மாறியும் - உள்ளவற்றை விற்றுப் பூசைக்கான
பொருள்களைப் பண்டமாற்று வகையாலே பெற்றும். மாறி -
பண்டமாற்றுக் குறித்தது. இது நெருங்கு செல்வ மென (444)
முன்னர்க் கூறிய செல்வ வகையைப் பற்றியது.

     இறுக்க உள்ள கடன்கள என்றது இவ்வாறு
பண்டமாற்றுவகையில் நேரே பூசைப் பொருள்களாக மாறுதலன்றி
நிலம் முதலிய (444) மற்றைச் செல்வத்தின்மீது கடன்கள் பெற்று
அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டு பூசைப் பண்டங்களை
விலைக்குப் பெறும்வகை குறித்தது. மாறி இறுக்கத் தக்கனவாய்
உள்ள கடன்கள் எனமாற்றி உரைக்க. இவை குறிப்பிட்ட வகையாலே
திருப்பிக் கொடுக்க உடன்பட்டு நிலம் முதலியவற்றின்மீது
வாங்கப்பெறும் ஒற்றி முதலிய கடன்களாம். தன்னை மாறி இறுக்க
- கடன் இறுத்தலாவது கடன்பட்ட பொருளை மீளத் தருதல். மாறி
இறுக்கத்தக்கன
என்றது ஒற்றிவைத்த பொருளை ஒற்றி என்ற
தன்மையை மாற்றி அதன் உரிமை நீக்கி விலைப்பட்டது எனும்
தன்மையையடையும்படி மாற்றியும் அது கொண்டு கடனைத்
திருப்பிக்கொடுத்தல். தன்னை - பொருள் கொடுத்து மீட்கும்
உரிமை தன்னை. (Right of redemption - Right to redeem)

     மாறி - மாறியும் எண்ணும்மை தொக்கது. தன்னை மாறி -
அந்நாளில் அடிமைவிற்கும் வழக்குண்மையின், தன்னையும் விற்று
என்று உரை கூறுவாருமுண்டு. அடிமையாகத் தம்மை விற்றுப்
பொருள்கொள்வதும் கடனாதலின் அது மேலும் கடனாவதன்றிக்
கடனிறுத்தலாகாது; அடிமையாகத் தம்மை விற்றாற் பின்பு,
சுதந்தரமின்மையின் முன்னைத் திருப்பணி செய்தலு மியலாது;
அன்றியும் இங்கு நாயனார்க்கு விளை நிலமும் வீடும் எஞ்சியிருக்கக்
காண்கின்றோ மாதலின் அவற்றை விற்றலின் முன் தம்மை விற்றல்
கூடாதாம். அவ்வுரையின் பொருத்தம் ஆராய்க.

     பின் - கடன்கொண்ட பின்னும். சிறப்பும்மை தொக்கது. பின்
தன்னை மாறி
எனக் கூட்டிக் கடன்கொண்டபின் என்றுரைப்பாரு
முண்டு.

     முன்னை - முன்செய்த. மாறில் திருப்பணி - ஒப்பற்ற
அடியார் பூசை இங்கு இறைவன் பணியோடொப்பத் திருப்பணி எனப்
பெற்றது குறிக்க.

     முதிர்ந்த கொள்கையர் - உறைப்புடைய நிலையினர். இவரது
கொள்கையும் அதுபற்றி நிகழும் செயலும், வறுமை காரணமாகத்
தளர்ச்சியடையாது முதிர்ச்சியடைந்தது என்க. செய்கை குறையினும்
கோட்பாடு மிக்க உறைப்புற்றது என்பார் கொள்கையர் என்றார்.
மிகச் சிறிய வருத்த முதலியவும் வந்தவுடனே தாம் செய்யும்
இறைபணி அடியார் பணிகளிற் பிறழ்ந்துவிடும் இந்நாட் பேதை
உலகர்க்கு அறிவுறுத்திய வகை காண்க. இதனை அறிவிக்கவே
இறைவன் நினைந்தனன் என்றதும் காண்க.

     முதிர்ந்த செய்கையர் - என்பதும் பாடம். 7