447. மற்ற வர்செய லின்ன தன்மைய தாக மாலய                             னானவக்  
  கொற்ற வேனமு மன்ன முந்தெரி யாத                   கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வது மின்றி நீடிய பேதை யாளுட                           னின்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு ஞால முய்ந்திட                           நண்ணினார்.
8

     (இ-ள்.) வெளிப்படை. மற்று அந்நாயனாரது செய்கைகள்
இத்தன்மையினவாகி நிற்க; விட்டுணுவும் பிரமனும் ஆகிய அந்த
வெற்றியுடைய பன்றியும் அன்னமும் அறியாத கொள்கையினரான
இறைவனார், இடபவாகனத்தை மேற்கொள்வது மில்லாமல், என்றும்
தம்முடன் நீடியுள்ள உமாதேவியார் உடனில்லாமல், ஒரு நல்ல
தவசியாரின் திருவேடத்தினையே மேற்கொண்டு இவ்வுலக
முய்யும்பொருட்டு எழுந்தருளி வந்தனர்.

     (வி-ரை.) மற்று - வினைமாற்றுப் பொருளில் வந்தது.
மேற்பாட்டில் நாயனாரது செயலைக் கூறிய ஆசிரியர் இங்கு
இறைவனது செயலைக்கூறத் தொடங்குகின்றார்.

     செயல - செய்கை. தன்மையது - மேற்பாட்டிற் குறித்த
கொள்கையை உட்கொண்ட தன்மையுடையது. மால்அயன்ஆன
அக்கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத - நிரனிறையாக்கி
மாலான ஏனமும் அயனான அன்னமும் எனக் கொள்க. ஏனமாயின
மாலும் அன்னமாயின அயனும் என மாற்றிக் கூட்டியுரைக்க.

     கொற்ற ஏனம - பன்றியாய்ப் பூமியை அகழ்ந்து
அடிதேடிச்சென்ற விட்டுணு நெடுந்தூரஞ் சென்றும்
அதனையறியமாட்டாதவராய் இளைத்துத் தமது மாட்டாமையை
உணர்ந்து மீண்டு வந்து இறைவனை வழிபட்டேத்தி உய்ந்தனர்;
ஆனாற் பிரமன் அவ்வாறன்றி முடிகண்டேனென்று பொய்ம்மொழிந்து
சாபம் பெற்றனர் என்ற சரிதம் காந்தமாபுராணத்துட் பேசப்பெற்றது.
ஆதலின் ஏனத்திற்குக் கொற்றமுடைய என்ற அடைகொடுத்துக்
கூறிய ஆசிரியர் அன்னத்தை வாளா கூறினார். மாட்டாமையை
உணர்வதே கொற்றமென்க. அ - பண்டறி சுட்டு தேற்றங்
குறித்ததுமாம்.

     தெரியாத கொள்கையர் - தெரியப்படாத
தன்மையினையுடையார். செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது.
கொள்கை - தன்மை. மற்று அவரது (நாயனார்) கொள்கை
மேற்பாட்டிலும், அவரைச் சுட்டி அறிவிக்கும் இவரது கொள்கை
இப்பாட்டிலும் கூறிய நயம் காண்க. நாயனாரது பெருமை
காட்டியவாறு.

     இனி, இரட்டுற மொழிதலால், ஏனம் - பாத்திரம்; அன்னம் -
சோறு; தெரியாத - கண்டறியாத; கொள்கையராயினார் -
தன்மையிலே என்று சரித நிகழ்ச்சிக் குறிப்புங் காண்க. (ஏனம் -
உண்கலம் - பாத்திரம். உலகு வழக்கு)

     பெற்றமும் பேதையாளும - உடன்கூடிய கோலம் பின்னர்
அருள்புரியும் வெளிப்பாட்டிற் காணத்தக்கதாதலின் இங்கு இன்றி -
இன்றி என்றார். அறக்கடவுளும் அருட்பிராட்டியும் இங்கு நாயனாரது
வறுமைநிலை காண உடன் வராததும் பொருந்துவதேயாம். “ஏலவார்
குழலா டன்னோ டிடபவா கனனாய்த் தோன்றி“ (464) என்பது
காண்க. 399 - 407 முதலிய திருப்பாட்டுக்களும் இதுபற்றிமுன்னர்
உரைத்தவையும் நினைவு கூர்க. நாயனார்க்கு விரைந்து
அருள்செய்யக் கருதித் தேவியையும் ஊர்தியையும் மறந்து
புறப்பட்டுவந்தனர் என்பாருமுண்டு. இது பொருந்தாமை தேற்றம்.
“கருதுவார் தங்களுக்கு, வானலா தருளு மில்லை வார்குழல்
மங்கையோடும், ஆனலா லூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே“
என்ற திருநேரிசையுங் காண்க.

     ஓர் நற்றவத்தவர் - ஓர் - ஒப்பற்ற. பிறர் ஓர்தற்குரிய
என்றலுமாம். நற்றவம் - வீடுபேறு குறித்த தவம். நலமென்னப்
பெற்றவற்றுளெல்லாந் தலையாய நலம் வீடுபேறாதலின் அதனைப்
பயக்குந் தவம் நற்றவ மெனப்பெற்றன. பகைவரைக்
கொல்லுதற்பொருட்டுந் தவஞ்செய்தலுண்மையின், அதனை
நீக்குதற்பொருட்டு நற்றவமென்றார். சைவத் தவவேடமே
நற்றவவேடம். மெய்த்தவம் என வருவதும் அது. சமணர்
முதலாயினோர் தவத்தைப் பொய்த்தவமென்பதுங் காண்க - இஃதோர்
பெரியாருரைக் குறிப்பு.

     ஞால முய்ந்திட - உயிர்களுக்கு அறிவிக்கவே (445)
இறைவன் இவ்வேடங்கொண்டு வந்தாராதலின் உய்ந்திட என்றார்.8