45. நங்க ணாதனா நந்தி தவஞ்செய்து  
  பொங்கு நீடரு ளெய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனன்மலர்
செங்கை யாளரை யாறுந் திகழ்வது.
35

     (இ-ள்.) நங்கள்..........பொற்பது - நமது குருநாதனாகிய
நந்திதேவர் தவம் செய்து வளர்ந்து நீடிய அருள் பெற்ற
பொற்பையுடையதாகிய; கங்கை வேணி........திகழ்வது - கங்கையாறு
சடையிலே மலரவும், சிவந்த கையிலே கனல் மலரவும் கொண்ட
இறைவருடைய திருவையாறு என்ற தலமும் இத்தென்றிசையிலே
விளங்குவதாம்.

     (வி-ரை.) நங்கள் நாதனாம் நந்தி - சிவபெருமானிடத்தில்
நேரே ஞானோபதேசம் பெற்ற திருநந்திதேவர் அதைச் சனற்குமாரர்
முதலிய மாமுனிவர்களுக்குக் குருபரம்பரையிலே உபதேசித்தருளினார்.
இவர்கள் திருக்கயிலாயத்தே உள்ளவர்கள். இந்த மரபிலிருந்து
பூவுலகிலே உபதேசம் பெற்றவர் சைவ சந்தான ஆசாரியர்களின்
முதல்வராகிய மெய்கண்ட சுவாமிகள். ஆதலின் நமது உண்மைத்
தெய்வச் சைவக் குரு மரபிற்குத் திருநந்திதேவரே முதற்குரு ஆவர்.
கயிலையிலே தவஞ்செய்து நிற்கும் முனிவர் கூட்டத்துக்குத்
தலைவராகி இச்சரிதம் சொல்லும் உபமன்னிய முனிவர்,
அக்கயிலையிலே சிவகணங்களுக்கெல்லாம் தலைமையாம் பணிபெற்ற
கோயில்நாயகனாகிய நந்திபெருமானை நங்கள் நாதனாம் என்று
குறிப்பதும் பொருந்துவதே. “நங்குரு மரபுக் கெல்லா முதற்குரு
நாதனாகி” என்ற காஞ்சிப் புராணமும் காண்க.

     தவஞ்செய்து பொங்குநீடருள் எய்திய பொற்பது -
இச்சரிதம் காந்தம் - வாயு சங்கிதை - சிவமகாபுராணம்
முதலியவற்றுட் காண்க. இத்தலத்தே சிலாத முனிவர் (சிலா + அதர்
- கல்லைத் தின்று தீர்ப்பவர்) வரங் கேட்டபடி மதலையாக மக்கள்
வயிற்றுட் படாமலே நந்திதேவர் அவதரித்து, மகா உருத்திரத்தை 8
கோடி உருச் செபித்துப் பூசித்துச், சூயசை என்ற தேவியை மணம்
செய்யப் பெற்றதுடன், சாரூபம் - கணநாயகம் முதலிய மெய்ப்
பேறுகளையும் பெற்றுத், துவிதியசம்பு என்று பேரும்பெற்று
விளங்குகின்றனர். முனிவர் தேவர்கள் பஞ்சாக்கர செபம் செய்து
பேறுபெற்றதால் இது செப்யேசம் என்ற காரணப் பேரும் பெற்றது.
அத்தவத்திற் கிடமாய் இப்போதும் மேலைப் பிராகாரத்திலே 7
வில்லமரங்களிருப்பதும், அவற்றைக் கடந்து போகக்கூடாதென்பதும்,
சத்த மின்றி மவுனமாய்ப் போவதும் ஆகிய வழக்கம் நிகழ்வதாம்.
ஆதலின் மேலும் மேலும் பொங்கி - பெருகி - என்றும்
நீடியிருக்கும் அருட்பேறு என்பார் பொங்கு - நீடு - அருள் என்றார்.
பொற்பது - ஐயாறு - என்று கூட்டிப்பொற்பினை - அழகை -
உடையதாகிய ஐயாறு என விரிக்க.

     ஐயாறு - ஐந்து ஆறுகள். வடமொழியில் பஞ்சாதம் என்பர்.
சுவாமிபாத கங்கை - தேவிகங்கை - இடபங்கை - காவிரி -
இவற்றுடன் நந்திதேவர் உவகை ஒரு நதியாக உருவெடுத்துச்
சேர்வதால் ஐந்தாறுகள் சேர்வது.

     கங்கைவேணி மலரக் கனன்மலர் செங்கையாளர் -
கங்கை சடையிலே மலரவும் கனல் கையிலே மலரவும் வைத்த
முதல்வர் என்க. மலர்தல் - விரிந்து விளங்குதல். நீரும் தீயும்
ஒன்றற்கொன்று விரோதமுள்ளன. நீர் பெருகில் தீ அவிதலும், தீப்
பெருகில் நீர் சுருங்கலும் ஆம். இவ்விரண்டையும் ஒருங்கே

தம்மிடத்தே மலர வைத்தது. தாமே ஆக்கலும் அழித்தலும் வல்ல
முழுமுதல் என்று காட்டியபடி. “ஒடுங்கி மலத்துளதாம்” என்றபடி
உயிர்களையும் உலகத்தையும் சங்காரகாலத்தே தம்மிடத்தே
ஒடுங்கவைத்தும், சிருட்டிக் காலத்தே தம்மிடத்திலிருந்து மீளத்
தோற்றுவித்தும் அருள்பவன். இவற்றுள் “சாற்றியிடும் அங்கியிலே
சங்காரம்” என்றபடி தீ சங்காரத்தையும், உலகந்தோன்றி நிற்கத்
துணைக் காரணமாகிய நீர் உலகப் பிறப்பு இருப்புக்களையும்
உணர்த்தும். இவையிரண்டையும் தம்மிடத்தே மலர்ந்து தங்கி நிற்க
வைத்து, அவ்வத் தொழில்கள் நிகழ்விக்க அவற்றை முறையே
ஒவ்வோர் சிறிய அளவிலே உலகில் அருளுவிப்பார் என்பார் ‘கங்கை
வேணிமலரக் கனல் செங்கை மலர்வது' என்றார். மேலும்
பரந்தெழுந்த புனற்கங்கை பனிபோலாகச் செறுத்தானை....” ‘நில்லாத
நீர்சடை மேல் நிற்பித்தானை' என்றபடி உலகை அழிவு செய்யவந்த
கங்கையைச் சடையில் தாங்கியும், உலகைச் சங்கரிக்கும் தீயைக்
கையிற் றாங்கியும் தாம் இவற்றால் அழிவுபெறாமல் நிற்பார்.
இவ்வகைகளாற் போந்த அவரது முழுமுதற்றன்மையும் உலகருக்காக
அருளாலே செய்யும் ஐந்தொழில்களும் உணர்வதே சிவ ஞானமாம்.
இதனையே திரு நந்திதேவர்க்கு உணர்த்தினாராதலின் ஆசிரியர்
இங்கே இத்திரு அடையாளங்களாற் பெருமானைக் குறிப்பிட்டு
உணர்த்தினார் என்பது.

     கனல் மலர் செங்கை - மலர்தல் - விளக்கி விரிதல்.

அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகா லழல்சிவந்த வாறோ? - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.
           - அற்புதத் திருவந்தாதி - 98

என்று காரைக்காலம்மையார் இதுகொண்டு இறைவனது
முழுமுதற்றன்மையை அழகாக விளக்கியவாறு காண்க.   35