450. “நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
 
  இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாமின் னடிசி றகவுற
வமைக்கு மாறெங்ங னே?யணங் கே!“யென;
11

     (இ-ள்.) வெளிப்படை. “முன்னர் இங்கு நமக்கே உணவில்லை
என்பதுண்மையே யாயினும் இமயமலை பெற்ற குலக்கொடியாகிய
பார்வதியின் பாகர்க்கினியவர் தமக்கு நாம் இனிய உணவு தக்கபடி
அமைத்தல் வேண்டும்; அது செய்யும் வழி யாது? அணங்கே!“
என்று நாயனார் கூற,


     (வி-ரை.) நமக்கு முன்பு இங்கு உணவு இல்லை ஆயினும்
- இதனைத் தெரிந்தே தாம் கேட்பதனை மனைவியார் அறியும்படி
முன்னுரையாக இதனைச் சொல்லி நாயனார் தொடங்கியவாறு. தாம்
கேட்கும் வினாவுக்கு இஃதே யோர் விடையாகக் கூடுமாதலின் அது
தவிர்த்து வேறு விடையினை எதிர்பார்த்தவராய் இதனை எடுத்துக்
கூறினார் என்ற குறிப்புமாம்.

     இமக்குலக் கொடிபாகர்க்கு இனியவர் தமக்கு -
குலக்கொடி
- 418 - பாட்டுப் பார்க்க. இமம் - பனி. இங்குப்
பனியால் மூடப்பெற்றதாற் காரணப் பேர் பெற்ற இமயமலைக்காயிற்று.
ஆகுபெயர். கொடி - கொடிபோன்றார் - பார்வதியம்மையார்.
ஆகுபெயர். பாகர்க்கு இனியவர் தமக்கு - ஒரு பாகத்தே உடைய
சிவபெருமானுக்கு இனியராயின அடியார்க்கு. இனி இதனை இச்சரித
நிகழ்ச்சி குறித்துப், பாகர்க்கு இனியவர் தமக்கு என ஒரு பொருள்
குறித்துத் தனித்தனி வேற்றுமை யுருபு விரித்த இரண்டு தொடராகக்
கொண்டு, இறைவனையே குறிப்பதாக உரைத்தலுமாம். பாகரும்
இனியவரும் ஆகிய இவருக்கு என்க. “என்னிலும்மினி யானொரு
வன்னுளன்“, “தேனொத்தெனக் கினியான்“ என்பனவாதி
திருவாக்குக்கள் காண்க. இவ்வாறு வேற்றுமை உருபுகள் பன்முறைத்
தனித்தனி விரித்து வருவதும் வழக்கம். “உம்பரி னூரெரித்த,
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த, துப்பர்க்கு“ -
(திருத்தொண்டர் திருவந்தாதி 1), “செய்ய சடைக்கற்றை, நம்பர்க்
கும்பர்க் கமுதளித்து நஞ்சை யமுது செய்தவருக்கு“ - (மூர்க்கர் -
புரா - 2) முதலிய திருவாக்குக்கள் காண்க. இறைவனுக்கு
இனியாராகிய அடியவர்களே உயிர்களுக்கு இனியராவர். உயிர்களுக்கு
இனியராவார்களே இறைவனுக்கு இனியராவர்.

“இகத்தும் பரத்து மினியாரைக் காணேன்“
       - சிறுதொண்டநாயனார் புரா - 77

     தகவுற - அடியார் பூசைக்கு ஏற்ற தகைமை பொருந்தும்படி.

     அணங்கே - தெய்வப்பெண்ணே! வழி ஒன்றுந்தோன்றாது
நிற்கின்ற இச்சமயம் எனக்கு உதவினால் உன்னைத் தேவப்பெண்
என்று கருதுவேன் என்ற குறிப்பு. 11