452. “செல்ல னீங்கப் பகல்வித் தியசெந்நென்
 
  மல்ல னீர்முளை வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலு மாகு; மற்
றல்ல தொன்றறி யே“ னென் றயர்வுற;
13

     (இ-ள்.) வெளிப்படை. செல்லல் நீங்குமாறு “இன்று பகலில்
வயலிலே விதைத்த செழிய நீர் முளை நெல்லைத் தேவரீர்
வாரிக்கொண்டு வந்து கொடுப்பீர்களானால், அடியேன் வல்ல
வகையாலே அமுது சமைத்தலும் ஆகும்; இதனைத் தவிர்த்து
வேறொரு வழியும் அறியேன்“ என்றுகூறி வருந்தினாராக;


     (வி-ரை.) செல்லல் நீங்க - செல்லல் - துன்பம்.
அடியார்க் கமுதளிக்க நெல் இல்லை என்று தாங்கள்படும் துன்பம்.
இந்நெல் பயிராய் விளைந்து, பின்னராவது நீங்குமாறு. செல்லல் -
செல்லுதல் - போதல் எனக் கொண்டு நாம் இந்தப் பிறவியிற்
போகும் செயல் நீங்குமாறு. அஃதாவது இன்று அடியார்க்களித்தலால்
பிறவியறுமாறு என்று குறிப்பிற் கூறலுமொன்று. செல்லல் நீங்க வித்தி
என்றும், செல்லல் நீங்க வாரிக்கொடுவந்தால் என்றும், செல்லல்
நீங்க ஆக்கலுமாகும் என்றும் கூட்டி முடித்தலுமாம்.

     பகல்வித்திய செந்நெல் - அன்று பகல்தான் நாற்றுக்குத்
தெளித்த செந்நெல். மாரிக் காலமாதலின் அன்று பகலில்
மழைபெய்து நின்றதும் வயலைச் சேறிட்டு நாற்றுக்காக நெல்
தெளித்துவந்தனர்; அதுவும் செந்நெல் என்றபடி. செந்நெல்லே அரன்
பூசைக்கும் அடியார் பூசைக்கும் சிறப்பா யுரியதாம்.
அரிவாட்டாயநாயனார் புராணத்துட் காண்க. கார்நெல் சிறப்பன்று.
குணத்தினுங் குறைபாடுடையதாம். வித்திய - நாற்றுக்காகச்
செறிவாய்த் தெளித்த.

     மல்லல் நீர்முளை - செழித்த நீரினால் நெல் ஊறிப் பருத்து
முளைக்கத் தொடங்கியிருக்குமாதலின் முளை என்றார். முளைக்கும்
பதத்திலுள்ள செந்நெல் என்க.

     வல்லவாறு அமுதாக்கலும் ஆம் - ஊறி முளைக்குந்
தருணத்தில் உள்ள நெல் அமுதுக்குச் சிறக்க அமைவதன்று;
ஆயினும் நானறிந்த வகையாலே அதனைப் பண்படுத்தி
அமுதாக்குவேன் என்பது. வல்லவாறு - முன் பழகிய கைத்தேர்ச்சி
குறித்தது. “கைம்மை வினையினால் வேறு வேறு கறியமுதாக்கி“ (461)
என்பதும் காண்க.


     மற்றல்லதொன்றறியேன் - முன்னர் மற்றொன்றுங்
காண்கிலேன் என மேற்பாட்டிற் றொடங்கிய மனைவியார்
அதனையே அனுவதித்து மேற்கேள்விக் கிடமின்றி முடித்துக்
காட்டியவாறு. அயர்வுற - வருந்த - அடியார்க் கமுதளிப்பதில்
இவ்வாறு நேரிட்ட குறைபாடுடைய தமது நிலை குறித்து
வருந்தினார். 13