456. உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
 
  கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லாரிளை யான்குடி மாறனார்.
17

     (இ-ள்.) வெளிப்படை. தமது உள்ளத்தை அன்பானது தன்
வசப்படுத்திக்கொண்டு ஊக்கந்தந்து செலுத்தத் தாம் வாரிக்
கொணரும் முளைநெல்லைக் கொள்ளத் தக்கதொரு பெரிய
இறைகூடையைத் தலைமேற் கவித்துக் கொண்டு குறிவழியே சென்று
நீர்ப்பறவைகள் தூங்கும் அந்த வயலுக்குட் புகுமாறு வள்ளலாராகிய
இளையரின் குடிமாறனார்
போயினார்.

     (வி-ரை.) உள்ளம் அன்பு கொண்டு ஊக்க - அன்பைத்
துணைக்கொண்டு உள்ளம் (தன்னை - நாயனாரை) ஊக்க
என்றலுமாம். பேர் இடா - பெரிய இறைகூடை. கொள்ள - தாம்
வாரிக் கொணர்கின்ற முளை நெல்லைப் பெய்து கொணர.
முன்கவித்து -தலையின்மேல் முன்புறமாகக் கவித்துக்கொண்டு.

     1குறியின் வழி - முன்நடந்து பழகியதாகிய பழக்கத்தின்
குறிப்பின் வழியே. அக்குறிப்பே யன்றி வேறு எவ்விதக் குறிப்பும்
தமக்குத் துணையாகக் கொண்டு செல்லுதலின்றி என்க. கண்ணினால்
வழியும் குழியும் அறியமுடியாத இருள் என முன்னர்க் கூறியபடியால்
இங்கு நாயனார் தமது மனையிலிருந்து வயலுக்குச் சென்ற
செய்கைக்கு அவரது கால்கள் முதலிய புறக்கரணங்களும், மனம்
முதலிய உட்கரணங்களும் முன்னர்ச் சென்று சென்று பழகிய
குறிப்பே துணை செய்தது என்றதாம். இதனையே இங்குக் குறியின்
வழி
யென்றார். காலினாற் றடவிச் சென்று எனப் பின்னர்க்
கூறுதலுங் காண்க. குறி - குறிக்கப்படுவது; அடையாளம்.
செயப்படுபொருள் விகுதிதொக்க சொல். வயல்புக்கு முளைநெல் வாரி
வருதலே குறியாகக் கொண்டு அதன் வழியே போயினார்.

     குறியின் வழி - குறி - நீர்மை - நியதியெனக் கொண்டு
இறைவன் இவரது நிலை காட்ட நினைத்து எழுந்தருளி வந்து
செலுத்திய குறியின் வழியே வசப்பட்டவராய்ச் சென்று என்றலுமாம்.
“கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பேயன்றி“(1) “குழிவாயதனிற்
குறிநட்டு“ (5) என்ற தண்டியடிகணாயனார் புராண ஆட்சிகளையும்
இங்கு வைத்துணர்க.

     வள்ளலார் - நாயனாரது வள்ளற்றன்மை இவ்வரிய செயலாலே
முற்றும் விளக்கமாதலின் இங்கு இப்பெயராற் கூறினார். வள்ளல்
என்றதோ டமையாது ஆர் விகுதியும் தந்த அருமை காண்க.

     செய்வதென்? என்று - அணங்கே? எங்ஙனே? என; மாது -
என்று - ஆகும் என்றயர்வுற; மகிழ்ந்து - தொடங்குவார். கங்குல் -
போன்றதுலகெலாம் - யாமத்து - அன்பு - ஊக்க - இடா - கவித்து
- வயல்புகப் - போயினார்- வள்ளலார் - மாறனார் - என்று
இவ்வெட்டுப் பாட்டுக்களையும் தொடர்ந்து முடிவுபடுத்திக் கொள்க.

     கங்குல் தான் உருகுகின்றது போன்றதாகிய உலகெலாம்
யாவரும் நண்ணல் செய்யா நடுயாமத்திலே என 454, 455
பாட்டுக்களின் கருத்துக்களைத் தொடர்பு படுத்துக. “இருளிடத்
துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்“ (திருவாசகம்), “எண்ணில்
புன்மாக்க ளுறங்கிரு ணடுநல் யாமத்து“ (கருவூரார் திருவிசைப்பா)
முதலிய திருவாக்குக்களின் கருத்துக்களையும் இங்கு நினைவு கூர்க.17


     1தூக்கச் சரிப்பு என்பதொரு நோய் (Somnambulism).
அதனாற் பீடிக்கப்பட்ட ஒருவன் தூங்கிக்கொண்டே எழுந்து
முன்வைத்த ஒரு குறிப்பின் வழியே ஒழுங்காய்ச் சென்று மீண்டுவந்
துறங்குவன் என்பது மருத்துவ நூலார் கண்ட உண்மை. அஃதும்
முன்தூக்க நிலையில் தொடர்ந்து வைத்ததொரு குறியின் வழியே
நிகழ்வதாம். மனவலிமையின் தத்துவமுணர்ந்தாரே இங்குக்
கண்ணுக்கு உருத்தெரியாத நள்ளிருளிலே குறியின் வழியே நாயனார்
வயல்புக்க அரிய செயலின் தத்துவத்தை நன்கு உணரவல்லார்.