457. காலி னாற்றட விச்சென்று கைகளாற்  
  சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.
18

     (இ-ள்.) வெளிப்படை. கால்களினாலே வழியைத் தடவி
அறிந்துபோய், வயலினுள்ளே மழைநீரின் வழியே மிதந்து ஒரு
வழிச்சார்ந்த நெல் வெண்முளைகளைக் கைகளினாலே சேர்த்து வாரி
எடுத்து இறைகூடை நிறையக் கொண்டு; கூடையை மேலே தூக்கி
யெடுத்துத் தலையிற் சுமந்து கொண்டவராய் மிக விரைவிலே
மனைக்கு மீண்டு வந்தனர்.

     (வி-ரை.) காலினாற்றடவிச் சென்று - முன்னர்க் குறியின்
வழி வயல்புக்க நாயனார் வயலினுள்ளே வரப்புக்களின்மீது செல்லும்
வழியைக் காலினாற்றடவி அறிந்து சென்றனர் என்றலுமாம்.அங்ஙனம்
தொடர்ந்து செல்லாதபோது நழுவி வயலினுட் சேற்றில்
விழக்காரணமாதலின் தடவிக் (கொண்டே) சென்று என்றார்.

     சாலிவெண்முளை நீர்வழிச் சார்ந்தன - அன்று பகலில்
வித்திய நெல்லாதலின் ஊறி முளைக்கத் தொடங்கின. கிளம்பும்
போது முளை வெண்ணிறமுடையனவாம். வித்தியபின் 30
நாழிகையளவில் நெல் முளைக்கத் தொடங்கும் என்பது உழவு
நூற்றுணிபு. நீர்வழிச் சார்ந்தன் - நாற்றுக்காகப் பகலில்
வித்தியதாயினும் அதன் பின் பெருகுவானம் பிறங்க மழை
பொழிந்தமையால் மிதந்து காற்றினால் ஒரு புறம்
வரப்புக்களினோரம் ஒதுக்கப்பட்டுச் சார்ந்தவைகளை. இரண்டனுருபு
விரிக்க.

     கோலி - பலவற்றையும் ஒன்று சேர்த்து; வாரி சேர்த்தவற்றைக்
கைகளால் வாரி எடுத்து; கொண்டு - இடாவிற் கொண்டு. கோலி -
வாரி - கொண்டு - எடுத்து - சுமந்து என்ற வினையெச்சங்கள்
தனித்தனி ஒவ்வோர் செயல்களைக் குறித்தன. இத்தனிச் செயல்களை
ஒவ்வோர் சொற்களால் அடுக்கி விரைந்து கூறிச் சென்றமை குறிக்க.
ஒல்லை மீண்டனர் விரைவில் மனைக்குத் திரும்பினர்.

     குறியின் வழி வயல்புகப் போயின வேகத்தை விடத்
திரும்பும்போது அடியார் பசித்திருப்பார் என்ற கவலையினால்
சிறிதும் தாமதமின்றி மிக விரைவினின் மீண்டார் என்பார் ஒல்லை
என்றார். அடியார் பசியை ஆற்றுவதில் நாயனார் வைத்த உறைப்பும்,
அதன்பொருட்டு அவரும் மனைவியாரும் செய்த அருஞ்செயல்களும்
மிகவிரைந்து சென்றன என்பது குறிக்க இப்பகுதியை மிகச் சிறிய
அளவு கொண்ட கலிவிருத்தங்களால் அமைத்து ஒரே தொடர்பாகச்
செலுத்தி ஆசிரியர் விரைந்து கூறி முடித்த யாப்பின் அமைதியும்,
அழகும், நயமும் கண்டு களிக்க.
(இறைவன்) ஞாலம் உய்ந்திட
நண்ணினார் (447) என்றதன் பின் அமைந்த இப்பத்துத்
திருப்பாட்டுக்களும் “பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்“
(திருவெம்பாவை - 3) என்ற திருவாக்கின்படி அன்பரது
பத்திலக்கணங்களுக்கும் குறியீடாவன போலும். 18