458. வந்தபின் மனைவி யாரும் வாய்தலி னின்று                                  வாங்கிச்  
  சிந்தையில் விரும்பி நீரிற் சேற்றினை யலம்பி                                    யூற்றி
“வெந்தழ லடுப்பின் மாட்ட விறகில்லை“ யென்ன,                                  மேலோர்
அந்தமில் மனையி னீடு மலக்கினை யறுத்து                                 வீழ்ந்தார்.
19

     (இ-ள்.) வெளிப்படை. நாயனார் மீண்டும் மனைக்கு வந்தபின்,
மனைவியார் மனைவாய்தலினின்று அவர் கொணர்ந்த நென்முளை
நிறைந்த இறை கூடையை வாங்கிக்கொண்டு, மனத்திலே மிக்க
விருப்பமுடையராய், நென்முளையிற் படிந்திருந்த சேற்றை நீரினாலே
கழுவி ஊற்றியபின் தமது நாயகரிடம் “இந்நெல்லைப்
பக்குவப்படுத்தற்கு அடுப்பில் எரிக்க விறகில்லை“ என்று கூற,
மேன்மை யுடையோராகிய நாயனார், அந்த மற்ற மனையிலே நீடிய
கூரையை விறகின் பொருட்டு அறுத்துத் தள்ளினார்.

     (வி-ரை.) வாய்தலின் நின்று வாங்கி - நாயனார்
முளைவாரிக் கொணர்ந்த பின் தம்மாற் சிறிதும் தாமதம் நிகழலாகாது
என்று அந்நெல்லை எதிர்பார்த்த வண்ணம், அவர் போய்த் திரும்பும்
வரை மனைவியார் மனைவாய்தற் புறத்துக் காத்து நின்றிருந்தனர்
என்க.

     சிந்தையில் விரும்பி - அடியவரை அமுது செய்வித்தலில்
மனத்தில் மிக்கெழுந்த விருப்பத்துடன், அமுது படைக்கும்
சாதனமாகிய நெல் தமது கையிற்புக்கு நின்றமையால், இனிச் செய்ய
வேண்டுவன தமது செய்கையே யாதலின் அதனை மிக விரும்பிச்
செய்தனர் என்பது குறிப்பு.

     நீரிற் சேற்றினை அலம்பி - சேற்றினை நீரில் அலம்பி என
மாற்றுக. நென்முளைகள் சேற்றிலிருந்து வாரிக் கொணரப்
பெற்றபடியால் அவற்றிற் படிந்திருந்த சேற்றை என்க. நென்
முளைகளின் என வருவிக்க. அலம்பி - கழுவி. அலம்புதல் நீரின்
குணம். “அலம்பலம்பாவரு தண்புனல்“ (திருவாரூர்த் திருவிருத்தம்),
“அலம்பார் புனற்றில்லை“ (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 20)
முதலியன காண்க.

     அடுப்பில் தழல் மாட்ட
என மாற்றிக் கொள்க. மேலோர்-
முளைவாரிக் கொணர்ந்தபோது வள்ளலார் என்ற ஆசிரியர் இங்குக்
குடியிருக்கும் வீட்டுக் கூரையை அறுத்து வீழ்த்தியபோது மேலோர்
என்றமை யுன்னுக. தமக்கு இவ்வுலகத்துப் போகம் இல்லாது,
மேலாகிய வீட்டினைப் பெற என்றவர் என்பது குறிப்பு.

     அந்தமில் மனை - மனைக்குக் கூரையே இன்றியமையாத
அங்கமாம். கூரையே வீட்டுக்கு வீடாந்தன்மை யளிப்பது. அதுவே
வெயில்
- பனி - மழை முதலிய துன்பங்களினின்றும் விடுதி
தருவது. அதனானே வீடு வீிடாந்தன்மை பெறும். கூரையில்லாத
மனை குட்டிச்சுவர்களின் தொகுதியேயாம் என்பர்.

     இங்குக் கூரையை அறுத்து வீழ்த்தியபோது அந்த மனையினது
உலக நிலையில் வீடாந் தன்மைக்கு அந்தம் - இறுதி - நேர்ந்தது
என்பர். ஆயின் இங்கு ஆசிரியர் இதனானே அது அந்தமின்
மனையாயிற்று
என்றார். அஃதாவது அந்தமில்லாத - என்றென்றும்
அழியாப் புகழ்பெற்ற என்பதாம். இச்செயலே அதற்கு வேறெந்த
மனைக்கு மில்லாத அந்தமில்லாத தன்மை செய்வித்தது என்பதும்,
இந்த மனையே மேல் அழியா வீடாகிய நிலைபெறத் துணைநின்றது
என்பதும் குறிப்பு. அந்தம் - அழகு எனக்கொண்டு அழகில்லாத
மனை - செல்வமின்றிய மனை - பல இடங்களி
லும் கிலாமாயின
மனை என்றுரை கொள்வாருமுண்டு. நீடும - முன் பழங்காலம்
முதல் நீடி வந்த. அலக்கு - கூரையின் சட்டம் - மூங்கில் வரிச்சு
முதலியன.

     மூட்ட - என்பதும் பாடம். 19