46. தேச மெல்லாம் விளக்கிய தென்றிசை  
  ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்து மிடம்பல;
பேசி லத்திசை யொவ்வா பிறதிசை.
36

     (இ-ள்.) தேசமெல்லாம்.......இடம்பல - (மேற்
சொல்லியவையேயன்றித்) தென்றிசையிலே தேசங்களையெல்லாம்
விளக்கம் செய்த இறைவரது திருத்தோணிபுரத்துடன் சிவபூசைக்குப்
பொருந்திய பல இடங்களும் உள்ளன; (ஆதலின்) பேசில்.........திசை
- திசைகளின் தாரதம்மியங்களைப் பற்றிப் பேசுவோமானால்
அத்தென்றிசைக்குப் பிற திசைகள் ஒப்பாகமாட்டா.

     (வி-ரை.) பேசில் - மேலே 30-வது பாட்டில் கேட்ட “யாது?”
என்று பேசில் என வருவித்துக்கொள்க.

     தேசமெல்லாம் விளக்கிய
- தோணிபுரம் எனக் கூட்டுக. விளக்கிய - உண்மையறியாத தேசத்துக்கு உண்மையை விளங்கச்
செய்த. “........தேசமெல்லாம், குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும்
கவுணியர்தம் குல தீபத்தை...”என்று மாதவச் சிவஞான சுவாமிகள்
அருளியபடி திருஞான சம்பந்த சுவாமிகளினாலே
உலகத்தையெல்லாம் விளங்கத் தெருட்டுவது தோணிபுரமே என்பதும்
குறிப்புப்போலும். பிரளயத்திலே தோணியில் மிதந்து உலகம்
விளக்கியது முன்னமே உலகமறியுமன்றோ?

“திசையனைத்தின் பெருமை யெலாம் தென்றிசையே
வென்றேற”          - திருஞான - புரா - 24

என்ற பிள்ளையாரது அவதாரத்தினாலே தென்றிசை சிறந்ததாம்.
ஆகாயமாகிய தில்லை முதல் பிருதிவியாகிய ஆரூர் - காஞ்சி வரை
எல்லாச் சிவ தலங்களிலும்
இறைவன் வெளிப்பட்டு ஆன்மாக்களுக்கு
அருளும் முறையும், அவரை அடைந்து உயிர்கள் உய்யும்வகையும்
உணர்த்துவார் ஆசாரியர்களேயாவர். அவர்களிலே முதற்குரவராய்ச்
சைவ சித்தாந்த சந்தான பரம்பரையின் முதல்வராய்க்
கயிலையிலிருந்து போந்த நந்திதேவர் தலமாகிய திருவையாற்றையும்,
அடுத்தபடியிலே, சித்தாந்த உண்மைகளை நடத்திக்காட்டி உலகர்க்கு
வழிகாட்டிச் சைவத் தாபனம் செய்த சைவ சமய பரமாசாரிய
மூர்த்திகளில் முதலில் வைத்தெண்ணப்படும் திருஞான சம்பந்தப்
பெருமான் அவதரித்த சீகாழியையும் கூறினார்.

     தேசமெல்லாம் விளக்கிய என்பதைத் தென்றிசைக்குச் சேர்த்து
உரைத்தலும் ஒன்று. தென்றிசையில் தில்லை - ஆரூர் - காஞ்சி - ஐயாறு - தோணிபுரத்துடன் இடம் பலவும் உள்ளன என்று முன்
பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க.

     பூசனைக்குப் பொருந்தும் இடம்பல......ஆசாரியரால்
விளக்கப்பெற்ற உண்மைகளின் வழி நடந்து பூசை செய்வதற்கு
உரிய பல தலம் என்க. ஆதலின் இம்முறையிலே இவற்றை இறுதியில்
வைத்துப் பொதுவிற் பேசினார். பூசை செய்யும் இடம் எங்கும்
இறைவன் வெளிப்பட்டு வருவானாதலின், அவற்றைப் பிரித்துக்
கூறலாகாமையின், இடம்பல என்று சேர்த்துக் கூறியவாறு.

“யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியினுங் கந்துடை நிலையினும்
... ... ... ...
... ... ... ...
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக...”

என்ற திருமுருகாற்றுப்படைக் கருத்தும் நோக்குக.

     பொருந்தும் இடம்பல - இறைவன் வெளிப்பட வீற்றிருக்கும்
மூர்த்திகளும், புண்ணிய நதிகளும், மலைகள் முதலிய தலங்களும்,
பூவும் நீரும் முதலிய சாதனங்களுமாகிய இவை - பொருந்திய -
என்க.

     “புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்றமையும் காண்க. தட்பவெப்ப நிலை வேறுபாடுகளாலும், பூசைக்குரிய
சாதனங்களில்லாக் குறையினாலும் பிற திசைகள் பூசனைக்குப்
பொருந்தா இடங்கள் என்பது. பிறவியாற் பெறும் பேறு இறைவனைப்
பூசித்தலே யாதலின் அதற்குப் பொருந்தும் இடம் உள்ள திசையே
சிறந்தது என்பது முடிந்த கருத்தாம். “ஈறான கன்னி” - என
முன்னர்க் காட்டிய திருமந்திரமும் இங்குச் சிந்திக்கற்பாலது.

     தென்றிசையில் தோணிபுரத்துடன் இடம்பலவும் பொருந்தும் -
என்று கூட்டி உரைத்தலுமொன்று.

     மேலே கூறித் தொகுத்த ஐந்து தலங்களைச் சிறப்பாய்க் கூறிய
காரணங்கள் குறி முதலிய அறிய நிற்குமுறை - ஐந்தெழுத்து
நிற்குமுறை - ஐந்தொழிலைக் காட்டுமுறை முதலிய பலவகையாலும் கூறுவர். அவை யாவும் “உடன் பூசனைக்குப் பொருந்து மிடம்பல”
என்று ஆசிரியர் கூறி முடித்துக் காட்டியதனை உட்கொள்ளாமற்
கூறுவனவாம். ஆதலின் அவை உரையன் றென்க. 36