469. மங்கையைப் பாக மாக வுடையவர் மன்னுங்
                                கோயில்
 
  எங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து
                               வாழ்வார்,
தங்கணா யகனுக் கன்பர் தாளலாற் சார்பொன்
                                றில்லார்,
3

     (இ-ள்.) வெளிப்படை. உமாதேவியாரை ஒருபாகத்தேயுடைய
சிவபெருமான் வெளிப்பட்டு வீற்றிருக்கும் கோயில்கள் எங்கெங்கும்
பூசைகள் வழுவாது நீடி நடைபெற்று வரும்படியாகவும்,
ஏழிசைப்பாடலும் ஆடலும் பொங்கிய சிறப்புக்களிலே மிகவும்
பொருந்தி நிகழும்படியாகவும், வழுவாது செய்து வழிபட்டு
வாழ்வாராகியும், தங்கள் நாயகரன்பர்களது திருவடிகளையே யன்றி
வேறு சார்பில்லாதவராகியும்,


     (வி-ரை) மங்கையைப் பாகமாக உடையவர் -
சிவபெருமான். மன்னும் கோயில் எங்கணும்
- நிலைபெற்று
வெளிப்பட்டு அருளும் கோயில்கள் எங்கெங்கேயும் “எத்தானத்தும்,
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர், கலிவலி
மிக்கோனைக் கால்விரலாற் செற்றகயிலாய நாதனையே காணலாமே“,
“இந்துசே கரனுறையு மலைகண் மற்று மேத்துவோ மிடர்கெடநின்
றேத்து வோமே“, “கள்ளார்ந்த கொன்றையா னின்றவாறுங், குளங்,
களங், கா வென வனைத்துங் கூறுவோமே“ என்று பலவகையாலும்
அப்பர் பெருமான் காட்டி யருளிய கோயில்களும், நின்றதிருத்
தாண்டகத்தில் “இருநிலனாய்த் தீயாகி“ முதலியனவாக இறைவன்
வடிவுகொண்டு நின்ற நிலைகளும் இறைவனை வணங்கிப்
பூசித்தற்குரியனவாம். திருமுருகாற்றுப்படையிலே “வேண்டுநர்
வேண்டியாங் கெய்தினர் வழிபட, ஆண்டாண் டுறைதலு மறிந்த
வாறே, ஆண்டாண் டாயினுமாக“ என உரைத்தபடியுங் காண்க.

     எங்கணும என்றதனால் “நுதல்விழி நாட்டத் திறையோன்
முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக“ என்றபடி
சிவபெருமானை முதலாகவைத்துப் பிற எல்லாத்தெய்வக்
கோட்டங்களும் உள்ளிட்டுரைத்துக் கொள்ளலுமாம். அவ்வவர்
நிலைக்குத்தக்கவாறு எல்லாத் தெய்வங்களுமாய் நின்று வருபவன்
சிவபெருமானே என்பது துணிபாதலின் இதனின் முழுமுதற் கடவுள்
வழிபாட்டுக்குப் போந்ததோர் இழுக்குமின்றென்க. அரசனாவான்
எல்லாக் கோயில்களையுங் காவல் புரியுங் கடமை பூண்டவன்
என்பது அறநூற்றுணிபாம். இதுபற்றி நமது முன்னோரரசில்
நிகழ்ந்தனவும், நம்நாட்டு இந்நாள் அரசியல் நிகழ்கின்றனவும் ஆகிய
அரசியல் முறைகளையும் இங்கு வைத்துக் காண்க.

     பூசை நீடி - நித்திய வழிபாடு தவறாமலும், காலங்கள்
தவறாமலும் நீடித்து நிகழ்ந்துவரச் செய்து. சிறப்பு - நைமித்திக
மென்பர் - திருவிழாக்கள். இவை
நித்தியத்தில் நேரக்கூடிய குறைகள்
தீர அவ்வப்போது செய்யப் பெறுவன. “சிறப்பொடு பூசனை“
திருக்குறள். 101-ம் பாட்டின் கீழ் உரைத்தவை காண்க.

     ஏழிசைப் பாட லாடல் - இவை நித்தியபூசையிற்
பொதுவகையானும், சிறப்பிலே மிகச் சிறப்பு வகையானும்
கொள்ளுதற்குரியன. ஏழிசையுடைய பாட்டுக்களும், பாட்டுடன் கூடிய
ஆடல்களும் என உம்மை விரிக்க. இவை நித்திய நைமித்திகமெனும்
இரண்டிற்கு முரியவாகலின் இரண்டிற்குமிடையில் வைத்தார். 101-ம்
பாட்டும் உரையும் காண்க. பாடலாடல் பூசைச் சிறப்பின்
அங்கங்களாம். ஏயர்கோனார் புராணம் - 271 - முதலியனவும்
காண்க.

     போற்றுதல் புரிந்து வாழ்வார் - சிவாலய முதலாகக்
கோயில்களைப் போற்றுதல் அரசர்க்குரிய கடனென்பதனைப் பின்னர்
நமிநந்தியார் புராணம் 19, 20 பாட்டுக்களில் விரித்து கூறியதும்
காண்க. போற்றுதல் - பாதுகாத்தல். புரிந்து - (போற்றுதலைச்)
செய்து என்க. இடைவிடாது சொல்லுதல் என்றலுமாம். வாழ்வார் -
அதனையே தமக்கு வாழ்வாகவும் கொண்டவர். தங்கணாய்கனுக்கு
அன்பர் தாள
அலால் சார்பு ஒன்று இல்லார் - தங்கணாயகர் -
தாம் வழிவழிச் சிவனடிமைத் திறத்திலே வந்தாராதலின் தமது
நாயகராகக் கொண்ட சிவபெருமான் என்க. தங்கள் - வழிவழி
உரிமை குறித்தது. “மீளா வடிமை உமக்கே யாளாய்ப் பிறரை
வேண்டாதே“ என்ற நம்பிகளது தேவாரங் காண்க. “மாதொருபாக
ரன்பின் வழிவரும்“ (467) என்றதுங் காண்க.

     சார்பு - இறைவனது சார்பிலே வழிவழி வந்த இவர்,
இவ்வுலகிலே வெளிப்படக் குலவும் சார்பாக அன்பர் தாள்களையே
பற்றி ஒழுகினார் எனவும், அந்தச் சார்பினைத் தவிர வேறு சார்பு
ஒன்றினையுஞ் சார்பாகக் கருதுவாரல்லர் எனவும் கூறியபடியாம்.
அன்பர் வேடத்தின் வழிபாட்டினையே தமக்குத் தமதுயிரினுஞ்
சிறந்ததாகக்கொண்ட வரலாறு இச்சரிதம் என்ற முற்குறிப்புமாம்.
அன்பர் தாள்களைத் தம்மினுந் தமக்கினிய சார்பாகக்கொண்டு
வாழ்பவர் என்க. “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்,
சார்தரா சார்தரு நோய்“ எனத் திருவள்ளுவநாயனார்
மெய்யுணர்தலுட் கூறிய உண்மையினையே மெய்ப்பொருளாகிய
இந்நாயனார் கடைப்பிடித்து ஒழுகினார் என்ற பொருத்தமுங் காண்க.

     பாகமாக வைத்தவர் - என்பதும் பாடம். 3