470. தேடிய மாடு நீடு செல்வமுந் தில்லை மன்றுள்
 
  ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகு மென்று
நாடிய மனத்தி னோடு நாயன்மா ரணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து
                                  வந்தார்.
4

     (இ-ள்.) வெளிப்படை. தமது அரசுரிமையிலே தேடியனவாகிய
பொருள்களும் நீடு செல்வங்களும் திருத்தில்லையிலே ஐந்தொழி
லருட்கூத்தியற்றும் பெருமானது அன்பர்க்கே யாவனவாகும் என்று
நாடிய மனத்துடனே, தம்மை யாட்கொள்ளும் நாயன்மார்களாகிய
அரனடியவர்கள் அணைந்தபோது கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவற அச்செல்வங்களை வேண்டுமாறு கொடுத்து வந்தார்.

     (வி-ரை.) தேடிய மாடு - அறச்சார்பிலே செலுத்திய
அரசியலில் தாம் தமது நாளிலே தேடி வைத்த நிதி. “மறத்தாறு
கடந்த செங்கோல் வழுதி! நின் பொருள்களெல்லாம் அறத்தாற்றி
னீட்டப்பட்ட“ என்பது திருவிளையாடற் புராணம்.

     நீடு செல்வம - தமக்கு முன் முந்தையரசர் வைத்துப் பெருகி
நீடிவந்துள்ள சேமநிதி முதலியன. தேடியதால் நீடிய என்றலுமாம்.
மாடு - பொன், மணி முதலியவையும், நீடு செல்வம் - நிலம்
முதலியவையும் என்றுரைப்பாரு முண்டு.

     தில்லை மன்றுள் ஆடிய பெருமான - தாம் தமது
ஆன்மார்த்த நாயகராகக் கொண்டு வழிபட்ட ஸ்ரீ நடேசப் பெருமான்.
“புரவலர் மன்றுளாடும் பூங்கழல் சிந்தை செய்தார்“ (488) என்றதுங்
காண்க. விரிவு ஆண்டுக் காண்க.

     அன்பர்க் காவனவாகும் - செல்வ முதலியவை யாவும்
அடியார்க் காவனவேயாம். அன்பர்க்காவனவே ஆகும் - ஆகாதன
பொருளல்லனவாம் என்றுரைத்ததுமாம்.

     நாடிய மனத்தினோடு - கொடுத்துவந்தார் என்று முடிக்க.
நாடிய மனம் - உண்மையிலே நாட்டங்கொண்டு அதில் நிலைத்த
மனம். நாயன்மார் - தம்மை ஆளுடைத் தலைவர்களாகிய
அடியார்கள். நாயனார் - சிவபெருமான் பெயர். அது அவனையே
போன்றவர்களாதலின் அவனடியார்களுக்காயிற்று. முன் உரைத்தவை
காண்க.

     கூடிய மகிழ்ச்சி - அவர்களது பெறற்கரிய சேர்க்கை தம்பாற்
கூடப்பெற்றதால் உளதாம் மகிழ்ச்சி. கூடிய - அளவிற் பெருகிக்
கூடிய என்றலுமாம். குறை
வற - கொடையிற் குறைபாடின்றி. தமது
பிறவியாகிய குறைவு அறும்படி என்றலுமாம். அடியார்கள்
“ஒன்றினாற் குறைவுடையோம் அல்லோம்“ என்ற நிறைவுடையராதலின் அவர்களது குறைவு அறும்படி என்றுரைப்பது
பொருந்தாதென்க.

     கொடுத்து வந்தார் - கொடுத்தலைத் தமது நியதியாக
மேற்கொண்டு ஒழுகி வந்தனர். கொடுத்து உவந்தார் - “ஈத்துவக்கு
மின்பம்“ என்றபடி, கொடுத்து, அவ்வாறு கொடுத்ததினாலே
மகிழ்வடைந்தார் என்றலுமாம்.

     இந்நான்கு பாட்டுக்களும் ஒருமுடிபுகொண்டன. நாட்டு -
ஊரின் - மன்னி - வரும் - மலாடர் கோமான் - பூண்டு செய்வார்
- மாற்றி மிக்கார் - செய்வார் - கோயில் - நீடி மல்கப் - புரிந்து
வாழ்வார் - இல்லார் - என்று - மனத்தினோடு - கொடுத்துவந்தார்,
எனத் தொடர்ந்து முடித்துக்கொள்க.

     செய்வார் - மிக்கார் - வாழ்வார் - இல்லார் என்பன
அவரது மனநிலையான கொள்கையின் இயல்பையும்,
கொடுத்துவந்தார்
என்பது அக்கொள்கையின்படி அவர் செய்துவந்த
திருத்தொண்டின் செயலையும் குறித்தன. வேத உள்ளுறை அரன்
பூசையும் அடியார் பூசையும் போற்றுதலே யாமென அதன் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்ட நாயனார் செய்த அவ்விரண்டிலே,அரன்
பூசை போற்றுதல் கோயில் எங்ஙணும் மல்கப் போற்றுதல்
புரிந்து
என்றதனாலும், அடியார் பூசை போற்றுதல் நாயன்மார்
அணைந்தபோது கொடுத்து வந்தார் என்றதனாலும் உரைக்கப்
பெற்றன. இவ்விரண்டினுள்ளும் அன்பர் பூசையிலே
திருவேடத்தினையே சிறக்கச் சிந்தனையில் வைத்து “நேய மலிந்தவர்
வேடமும் அரனெனத் தொழுமே“ என்ற விதிக்கிணங்கத் தொழுதனர்
என்பதும், அது இச்சரித விளைவாகிய உள்ளுறையாமென்பதும்
குறித்து ஏவல் செய்வார் - சிந்தை செய்வார் என முதலில்
விதந்து எடுத்துக் காட்டப்பெற்றதாம். சிந்தை செய்வார் என்றது
மனத்தாலும், போற்றுதல் புரிந்து வாழ்வார் என்பது வாக்கினாலும்,
ஏவல் செய்வார் - கொடுத்துவந்தார் என்பன காயத்தாலும்
நிகழ்ந்த குறிப்பும் காண்க.

     கொடுத்து வாழ்ந்தார் - என்பது பாடம்.  4