471.
|
இன்னவா
றொழுகு நாளி லிகற்றிறம் புரிந்தோர்
மன்னன்
|
|
|
அன்னவர்
தம்மை வெல்லு மாசையா லமர்மேற்
கொண்டு
பொன்னணி யோடை யானை பொருபரி காலாள்
மற்றும்
பன்முறை யிழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப்
போனான்.
|
5 |
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு இவர் ஒழுகி வருகின்ற
காலத்திலே ஓர் அரசன் இவருடன் பகை கொண்டு இவரை வெல்லும்
ஆசையினாலே, போரில் எதிர்த்து வந்து தன்னுடைய
பொன்னாலியன்ற முகபடாம் அணிந்த யானை, போர்க்குதிரை,
காலாள் முதலிய பலவற்றையும் பலமுறை இழந்தவனாய்த் தோற்று
அவமானமடைந்து போயினான்
(வி-ரை.)
இகல் திறம் புரிந்து
- உண்மையில் இகலுக்கு
எவ்வித நேர்மையான காரணமுமின்றி இகலும் நிலையைத்தானே
வருவித்துக் கொண்டு. 468-ல் கூறியபடி நாயனார் மாற்றலரைப்
போரில் வெற்றி கொண்டது அறத்தின் காரணம் பற்றி எழுந்ததாம்.
இங்குக் குறித்த ஓர் மன்னன் இகல் திறம் புரிந்து
அவ்வாறின்றி,
வலிந்தசெயல் மேற்கொண்டமை குறித்தது. புரிந்து
- அறவழி
நில்லாது இகலும் திறத்தையே சிந்தித்தவனாய் நின்றான் என்பது
குறிப்பு. இதற்கு அறம் பற்றாத மண்ணாசையே காரணம் என்பார்
பின்னர் ஆசையால் என்றார். அறவழி நிற்கும்
செங்கோலரசரைப்
பிற அரசர் நேசப்பான்மை பூண்டொழுகுதல் அரசநீதி யியலாம்.
புல்லாதார்
முரணடக்கிப் பொருள்கவர்வா ரென்பதெவன்?
செல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை
வல்லாருந் தத்தமதேத் தரியபொருள் வரவிடுத்து
நல்லாரா யொப்புரவு நட்படைய நடக்கின்றான். |
என்ற (வாதவூரடிகளுக்
குபதேசித்த படலம் 8) திருவிளையாடற்
புரணாப் பாட்டிலே இவ்விரண்டு நிலைகளும் நன்கு விளங்குதல்
காண்க.
ஓர் மன்னன்
- பேர் தானும் சொல்லத் தகாதவன் என்று
குறிப்பார். இங்கு ஓர் மன்னன் என்ற இலேசினாற்
கூறினார்.
வடுகக் கருநாடர் காவன், மானப்படை மன்னன் வலிந்து நிலங்
கொள்வானாய் (11) என்ற மூர்த்தி நாயனார் புராணத்தும் அந்தக்
கொடுங்கோலரசனை இவ்வாறே குறித்ததும் காண்க. ஆசையால்
அமர் மேற் கொண்டு - அவனது ஆசையினைத் தவிர அமர்மேற்
கொள்ளுதற்கு அரச நீதியில் விதிக்கப்பெற்ற வேறு காரணமொன்று
மின்றென்பது. பல முறையும் தோற்றும் அறிவு வாராமையால்
அம்முயற்சியிலே கிட்டினானாதலின் ஆசை வெட்க மறியாது என்ற
பழமொழிப்படி பேராசையின் வசப்பட்டான் என்றலுமாம்.
அமர்மேற் கொண்டு
- இகலி போர் செய்து. யானை - பரி
- ஆள் - மற்றும் - நால்வகைச் சேனைகளையும்
குறித்தன.
இவைகளை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்
என்றதனாலே, போரில் வெற்றி கொள்வார் தோற்றுப்போன அரசனது
சேனைகளில், இறந்துபட்டனவும் புறங்காட்டி யோடியனவும் போக,
எஞ்சியவற்றைத் தம் வசமாக்கிப் பிடித்துக் கொள்ளும் மரபு பற்றி
நாயனார் கைக்கொண்டனர் என்ப.
பரிபவம்
- அவமானம் - பரிபவப்பட்டுவந்த படர்பெருஞ்
சுற்றத்தார் (420) என்ற பாட்டின் உரை பார்க்க. பொரு
பரி -
போர்க் குதிரைகள். பொன்னணியோடை யானை -
யானைகளை
அலங்கரித்துப் போரிற் செலுத்துதல் அந்நாள் வழக்கு. யானைப்படை
இந்நாளிற் காண்டலரிது. ஆயின் சேனைக்குரிய நால்வகையினும்
யானையையே சிறப்பாகக் கொண்டனர் வீரரிற் சிறந்த நமது
முன்னோர். யானையுடைய படைகாண்டல் முன்னினிதே என்றதுங்
காண்க. கந்தபுராணம், இராமாயணம் முதலிய பழஞ் சரிதங்களில்
நிகழ்ந்த போர்களிலும் யானைப்போரின் பெருமை காண்க. பலவகை
இயந்திரங்களுக்குள்ளே மறைந்து கொண்டு, இணையான
வலியிலார்மீதும், துணையில்லார் மீதும் குண்டுகள் பாய்ச்சியும்,
விடக்காற்று வீசியும் பேடிப்போராகிய அநாகரீகப்போர் செய்யும்
இந்நாள் ‘நாகரீக' மாக்கள் யானைப் போரின் வீரத்தை அறிய
வலியிலர் என்க. யானை, குதிரை, காலாள் என்று குறித்தவாற்றால்
தேரையும் உடன் கொள்க. மற்றும் - போருக்குரிய
பிற வசதி,
உணவு, பண்டம் முதலியன. இழந்து, தோற்று, பட்டு
- இவை
வெவ்வேறான பலசெயல்கள்;
போனான் என்ற வினைமுற்றுக்கொண்டு
முடிந்தன.
இவற்றுடன் அவனது போர்ச் செயல்வினையும் முற்றியதாம். அவன்
இனிச் செய்யத் தொடங்கியது மாயப்போராம். நால்வகைச்
சேனைப்போரில் நாயனார் வென்ற வகை இப்பாட்டாற் கூறினார்.
இனிவரும் மாயப்படைப் போரிலும் நாயனாரே வெல்கின்றார். ஆன
நீற்றுக்கவசம் அடையப் புகுமின்கள் என்ற திருவாசகப்படி,
வேணியும் நீறுமாகிய கவசமே துணையாகக் கொண்டு நாயனார்
மாயப்படை வாராமல் வெல்லும் செய்தி 481-ம் பாட்டிற் கூறுகின்றார்.
விரிவு ஆண்டுக் காண்க. எனவே இருவகைப் போரிலும் நாயனார்
வெல்ல வல்லவராயினார். இதனையே வெல்லுமா
மிகவல்ல
மெய்ப்பொருள் என்று முதனூல் அருளியது என்க. 5
|