474.
|
மாதவ
வேடங் கொண்ட வன்கணான் மாடந்
தோறும்
|
|
|
கோதைசூ
ழளக பாரக் குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகிற்
போகிச்
சேதியர் பெருமான் கோயிற் றிருமணி வாயில்
சேர்ந்தான்.
|
8 |
(இ-ள்.)
மாதவ....வன்கணான் - பெரிய தவவேடந் தாங்கிய
அவ் வன்னெஞ் சுடையவன்; மாடம்...போகி - மாடங்கள் எங்கேயும்
மாலை சுற்றிய கூந்தலையும் குழையினையும் உடைய கொடிகள்ஆட,
அவற்றின் மேலே ஒளிவிளங்கும் வெண்கொடிகள்
அசைகின்றதற்கிடமாகிய விளக்கம் பொருந்திய, நீண்ட வீதியிலே
சென்று; சேதியர்....சேர்ந்தான் - சேதிநாட் டரசர்பெருமானாராகிய
மெய்ப்பொருணாயனாரது அரண்மனையின் அழகிய திருவாயிலை
யடைந்தான்.
(வி-ரை.)
வன்கணான் - தவவேடத்தினுள்
மறைந்து
வஞ்சிக்க எண்ணியது வன்கண்மையாம். செப்பரு நிலைமை
(472)
என்றதுங் காண்க. திருக்கோவலூரிற் சேர்வான் - புகுந்தனன் -
முத்தநாதன் - புகுந்த - அவ்வன்கண்ணான் - மறுகிற் போகிக்
கோயில் வாயில் சோந்தான் - எனத் தொடர்புபடுத்திக் கொள்க.
மாடந்தோறும்........மறுகு
- ஒவ்வொரு மாடங்களிலும்
அளகபாரக் கொடியும் அவற்றின் மீதே சோதி வெண்கொடிகளும்
ஆடுகின்றன; அவ்வகை மாடங்களே நிறைந்த
மறுகு என்க. அரசரது
அரண்மனைக்குப் போகும் மறுகாதலானும், அவ்வரசரது
தலைநகராதலானும் எங்கும் மாடங்கள் நிறைந்திருந்தன. இது
அவற்றின் செல்வங்குறித்தது.
அளகபாரக் கொடி
என்றதனால் பெண்களின்
ஆடல்பாடலாதி இன்பமும், குழைக்கொடி என்றதனாற் பொன்மணி
முதலிய செல்வமுங் குறிக்கப்பெற்றன.
சோதி வெண்கொடி
- திருவிழா முதலிய தெய்வச் சிறப்புக்
குறிக்கப்பெற்றன. இங்கு முத்தநாதன் வந்தது இரவாகும். இரவிலும்
விளங்குவது வெண்மை யாதலானும், வெண்மை திருநீற்றின்
சோதியாதலானும் சோதி வெண் கொடி என்றார்.
வெண் சோதிக்
கொடி என்று மாற்றுக. அளகபாரக் குழைக் கொடி
என்றது
ஆடற்பெண்கள். பெண் கொடியும் - வெண்கொடியும் என இரண்டும்
கொடிகளாம்.
பெண்கொடிகள் மாடங்களிலுள்ள ஆடரங்குகளிலாடுவர்.
வெண்கொடிகள் மாடங்களின் மீது ஆடுவன. காந்தாரம்
இசைபரப்பிக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித், தேந்தாமென்
றரங்கேரிச் சேயிழையார் நாடமாடும் திருவையாறே முதலிய
திருவாக்குக்கள் காண்க. இவ்விரு கொடிகளுள்ளே மாடங்களில்
ஆடரங்கிலே ஆடும் கொடிகளின் ஓருறுப்புக் (குழல்) கறுப்பாம்.
இவை மனத்தினுட் கறுப்பு வைத்துப் புகுந்த முத்தநாதனது களவை
அறிந்து அவனை அந்த மாடங்கள்கறுப்புக் கொடிகள் காட்டி
வெளியேறுக என்பனபோல அசைந்தன என்பதும், இக்கறுப்புக்
கொடிகளின்மீது ஆடும் சோதி வெண் கொடிகள்
உனது
உட்கறுப்பின் மேலே விளங்கும் வெண்ணீறும் சடைமுடியுமாகிய
திருவேடமே வெற்றிபெறும். வெற்றி எம்முடையதே. இதினும் நீ
தோற்பாய் என்று அறிவிப்பன போலக் கறுப்புக் கொடிகளைக்
கீழ்ப்படுத்தி, மீது சோதியுடன் வெண்கொடி
ஆடின் என்பதும்
குறிப்புக்களாகத் தன்மை நவிற்சி யணியிலே வைத்து ஆசிரியர்
விரித்துக்காட்டிய அழகு கண்டு களிக்க. கறுப்புக்கொடி,
உள்வருவோரை வரவேற்காது வெறுத்து வெளிப்போகச் சொல்லும்
குறியாக இந்நாளிலும் வழங்கும் வழக்குங் காண்க. இனி, கறுப்பும்
வெண்மையுமாயின கொடிகளைத் தன் மனக் கறுப்பும்
வெண்ணீறும்போலவே கண்ணாடியிற்போல முத்தநாதன் எங்குந் தன்
வண்ணமே கண்டான். அவ்வாறு காண்பவன் தன் மனத்துட்
பொதிந்து வஞ்சனையினாலே அகத்தினழகு முகத்திற் றெரியும்
என்றபடி முகம் பொலிவிழந்து சென்றானாகவும், மாடங்கள்
அவ்வாறில்லாது தன்னை வெற்றிகொண்டன போன்று சுடர்விட்டு
அழகுடன் விளங்கக் கண்டுகொண்டு சென்றான் என்பதுமொரு
குறிப்பாம். இதனை எட்டாவது பாட்டாக வைத்தோதிய குறிப்பும்
காண்க.
சேதியர் பெருமான் - சேதிநாட்டவரின் தலைவராகிய
நாயனார்.
கோயில் - அரண்மனை. திருமணிவாயில் திரு - அருட்டிரு. மணி -
அழகு.மணித் திருவாயில் என்க. மணி கட்டிய வாயில் என்றலுமாம். (112) 8
|