477. கண்டுசென் றணையும் போது கதுமென விழிந்து
                                  தேவி
 
  வண்டலர் மாலை யானை யெழுப்பிட வுணர்ந்து
                                மன்னன்
“அண்டர்நா யகனார் தொண்ட ரா“மெனக்
                         குவித்த செங்கை
கொண்டெழுந்தெதிரே சென்றுகொள்கையின்
                          வணங்கி நின்று,
11

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு கண்ட பின்னும் உள்ளே
சென்று பக்கத்திலே போகும்போது, அதனைக் கண்டு மாதேவி
விரைந்து எழுந்து, வண்டு அலர்தற்கிடமாகிய மாலையணிந்த
அரசரை எழுப்பினாராக, அரசர் உணர்ந்து, “தேவதேவனாகிய
சிவபெருமானது தொண்டராம் இங்கு வந்தவர்“ எனத் தலைமேற்
செங்கை கூப்பிக்கொண்டு பள்ளிவிட்டெழுந்து எதிரிலே சென்று
அடியார் வணக்கத்திலே நியதியாகத் தாம் கொண்ட
கொள்கையின்படி வணங்கி நின்று.


     (வி-ரை.) கண்டு சென்று அணையும் போதில் - கண்டு -
கண்டும். மன்னன் துயிலவும் மாடே மாதேவியிருப்பவும் கண்டும்.
இழிவு சிறப்பும்மை தொக்கது. சென்று - அணையும் - இவ்வாறு
காண்பான் எவனும் கண்டபோதே நின்று, விரைவில் மீளத்
திரும்புவானன்றி மேற்செல்லான்; இவனோ கண்டும் சென்றான் -
பக்கத்தே அணைவானுமாயினன் என ஒவ்வாத செயல்கள் இரண்டு
குறித்தன.

     கதுமென - ஒலிக்குறிப்பினால் விரைவு குறிப்பதோர் சொல்.

     எழுந்து - முன் “இருப்பக்கண்டான்“ என்றபடி, இருந்த தேவி
எழுந்தார். உணர்ந்து - துயிலுணர்ந்து; அதனோடு தொண்டராமென
உணர்ந்து என்றும் கூட்டுக.

     குவித்த செங்கை கொண்டெழுந்து - தொண்டராம் என
உணர்ச்சி வந்தவுடனே கைகள் கூப்பினர்.முன் பழக்க நியதியினாலே
எழுதலாகிய செயலுக்கு முன்னர்க் கைகூப்பிய செயல் நிகழ்ந்தது.
அங்ஙனம் கூப்பிய கையுடன் எழுந்தார். உணர்ந்து என முன்னர்க்
கூறியமையாலே துயில் நீங்கிச் சாக்கிராவத்தையிலே புக்கனர்
என்பதாயிற்று. உயிருணர்வு சாக்கிரத்தே வந்த பின்னர் நிகழ்ந்த
செயல்களிலே முன்னர் நிகழ்ந்தது கைகூப்புதல்; பின்னரே உடல்
எழுதலும் பிறவும் நிகழ்ந்தன. எழுந்தபின் தொழுதாராயின்
அம்மட்டில் தொழுதலைத் தாமதித்தாராவர் என்பதாம். ஆதலின்
உணர்வு பெற்றபின் சிறிதும் தாழாது கைகூப்பினார் என்க.
“கொழுநற் றொழு தெழுவாள்“ (குறள்) என்ற இடத்துப் பரிமேலழகர்
“தொழா நின்று துயிலெழுவாள்“ என வுரைத்துத்,
“தெய்வந்தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின்
தொழுதெழுவாள் என்றார். தொழாநின்று என்பது தொழுதெனத்
திரிந்து நின்றது“ என விசேட முங் கூறினார். “தொழுதெழுவார்
விளைவள நீறெழ“ (118)என்ற திருக்கோவையாருக்குப் பேராசிரியரும்
அவ்வாறே “தொழாநின்று துயிலெழுவாருடைய வினையினது
பெருக்கம் பொடியாக“ என்று உரைகூறித், “தொழுதெழுவா ரென்றது
துயிலெழுங் காலத்தல்லது முன்னுணர் வின்மையான் உணர்வுள்ள
காலத்து மறவாது நினைவார்“ என்று விசேடமுங் கூறினார்.
இவ்விருவருரையும் மறுத்துப் பிரயோக விவேகநூலார்
“தொழுதெழுவாள்“ என்றது எழுந்து தொழுவாள் என
முன்பின்னாகப் பொருள்படுமென்றார். இம்மூவரும் எழுதல
என்பதற்குத் துயிலெழுதல் என்றே பொருள் கொண்டனர். இங்கு
ஆசிரியர் எவ்வித ஐயப்பாட்டிற்கு மிடமின்றி உணர்ந்து என்றதனால்
துயில் எனும் அவத்தையிலிருந்து உயிர் மனம் முதலிய
உட்கரணங்களுடன் (சாக்கிராவத்தை) விழிப்பினுள் வருதலைக் கூறிப்,
பின்னர், அவ்வாறு உணர்ந்து துயில் நீங்கி, மனத்துடன்
இயக்கப்பெற்ற கை முதலிய புறக்காரணங்களோடு எழுதலினைக்
“குவித்த செங்கை கொண்டெழுந்து“ என்பதனால் விளங்கக்
கூறினார். கருவிகளோடு கூடாமையே துயில்; அவற்றோடு கூடுதலே
உணர்தல்.


     தொண்டராம - உண்மையிற் றொண்டரன்றென்பது குறிப்பு.

     குவித்த செங்கை கொண்டெழுந்து - கூப்பிய கைகளைக்
கண்டார்களே யன்றி அதன் முன்னே கைகூப்பிய தொழிலை எவரும்
கண்டாரில்லை என்பது குறிப்பு. இஃது கைகூப்புதலின் விரைவுபற்றிக்
கூறியதாம். ஆதலின் கைகுவித்துக் கொண்டு என்னாது, குவித்த
செங்கை
கொண்டு என்றார். “கருங்குழற்கற்றை மேற்குவி கைத்தளி
ருடையார்“ (திருஞா - புரா - 670) என்றதுங் காண்க.

     கொள்கையின் வணங்கி - கருத்தறிந் தேவல்செய்தும்,
அன்பர் தாளலாற் சார்பொன்றில்லா தொழுகியும் கைக்கொண்டுவந்து
தமது கொள்கையின்படி வணக்கஞ்செய்து. வணங்கி - ஐந்துறுப்பு
முதலியனவாய் விதிப்படி செய்யும் வணக்கங்கள்.

     நின்று - அடியவர்கள் முன்பு அமராது, நின்று பணிகேட்டு
முறைப்படி நின்று கொண்டு. நின்று என்ற வினையெச்சம்
வரும்பாட்டிற் கூற என்றதனுடன் முடிந்தது.

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. கண்டு -
சென்று - அணையும்போது - தேவி - எழுப்பிட - மன்னன்
உணர்ந்து- எழுந்து - சென்று - வணங்கி நின்று - “என்கொலோ“
என்று கூற - “நூல் - இயம்பக் - கொடுவந்தேன்“ - என்றான் -
என முடித்துக்கொள்க. வன்கணான - என்ற எழு வாய் தொக்கது.

     எழுந்து தேவி-கொண்டிழிந்து - என்பனவும் பாடங்கள்.11