479. “பேறெனக் கிதன்மே லுண்டோ? பிரானருள்
                            செய்த விந்த
 
  மாறிலா கமத்தை வாசித் தருள்செய வேண்டு“
                                மென்ன,
“நாறுபூங் கோதை மாது தவிரவே நானு நீயும்
வேறிடத் திருக்க வேண்டு“ மென்றவன் விளம்ப
                                வேந்தன்,
13

     (இ-ள்.) வெளிப்படை. “எனக்கு இதனின் மேலாம் பேறு
வேறுண்டோ? இறைவன் அருளிச்செய்த இந்த மாறில்லாத
ஆகமத்தை வாசித்து அருளிச் செய்யவேண்டும்“ என்று அரசர்
சொல்ல,“வாசனையுடைய பூமாலை யணிந்த தேவியாரும் இவ்விடத்து
நின்று நீங்கவே, நானும் நீயும் தனியாகிய இடத்தில் இருத்தல்
வேண்டும்“ என்று அவன் சொல்ல, அரசர்,
     
     (வி-ரை.) பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? - ஆகம
ஞான உபதேசத்தின் மிக்க பேறு இல்லை, எல்லா நலன்களிலும்
மிக்கதாகிய வீடுபேற்றைத் தருதலான் என்பதாம். இங்கு இவன்
செய்யும் செயல் பாதகமேயாயினும், அது நாயனார் கொண்ட
அன்பின் றிறத்தாலே அப்பயனையே விளைத்து, “அருட்கழனீ
ழல்சேரக் கொண்டவா றிடையறாமற் கும்பிடுங் கொள்கை“
(489)யினையே பயந்ததும் காண்க.

     மாறில் ஆகமம் - எதிரும் இணையும் இல்லாத ஆகமம்.
தமக்குள் ஒன்றற் கொண்டு மாறுபடாத வேதங்கள் தாமும்
இறைவனருளியன வேயாயினும் அவை உயிர்களின் பக்குவபேத
நோக்கிப் பல தெய்வங்களையும் பேசும். அவை வெளித்தோற்றத்தில்
மாறுபடுபவனவாகக் காணப்படினும் ஞானாசாரியார்களால் ஒப்புக்
காணத்தக்கன. ஆயின் ஆகமங்களோ அவ்வாறன்றி எவ்வாற்றானும்
தமக்குள் மாறுபடாதனவும், முழுமையும் உண்மையேயாகி உண்மை
நிலையிற் சிறிதும் மாறுபடாதனவுமாம்.

     வாசித்து அருள் செயவேண்டும். முன்னர் அவன் இயல்பக்
கொடுவந்தேன (478) என்றமையால் அவ்வாறே வாசித்துப் பொருள்
கூறி உபதேசித்தருள்புரிக என்றார்.

     மாது தவிரவே - மாதும் இங்கு நின்று நீங்கவே. எச்ச
உம்மை தொக்கது. சிறப்பும்மை தொக்கது என்றலுமாம். வேறு இடம்
- தனி இடம்.

     இனி, பேறெனக் கிதன்மே லுண்டோ - இப்போது நீ
எண்ணிய வஞ்சனையை முடித்துவிடப் போகின்றாயாதலின், இது
வரை நாயன்மாரை வழிபட்டு வந்தபேறு எனக்கு இனிமேல்
உளதாகுமோ? இல்லை எனவும்; நாறுபூங் கோதை மாது தவிர -
மாது கோதை தவிர
- அதாவது நாயனார் அருட்கழனீழல்
சேரப்போகின்றமையால் இவ்வுலக நிலையிலே பூமாலை சூடும்
தன்மை (சுமங்கலித்துவம்) தேவி தவிர்வாராக எனவும்; நானும் நீயும்
வேறிடத்திருக்க வேண்டும
- இச்செயலின் பின், நான்
சிவனடியார்பால் அபசாரப்பட்ட பெரும் பாவத்திற்காக எரிவாய்
நரகத்திற் புகவும், நீ இறைவ னருட்கழ னீழலாகிய பேரின்பத்திற்
புகவும் ஆக, இங்கு ஓரிடத்திலிருந்த நாமிருவேமும் இனி
வெவ்வேறான இடங்களில் இருக்க
வேண்டும் எனவும், இப்பாட்டு
முழுமையும் முற்குறிப்பு எனும் தொனிப்பொருளுடன் மிளிர்வது
காணத்தக்கது. வேறிடம் - வெவ்வேறிடம். “இருவரும் வேறு வைகி“
(367) என்றதுங் காண்க. 13