48. மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்  
  புற்றி டத்தெம் புராண ரருளினாற்
சொற்ற மெய்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கந்தொழப் பெற்றதால்.
38

     (இ-ள்.) மற்று இதற்குப் பதிகம் - இங்கு இவ் விரிநூலுக்குப்
பதிகமாக; வன்றொண்டர்.......நற்பதிகம் - அவ் வன்றொண்டரே
புற்றிடங்கொண்ட பெருமானது திருவருள் பெற்றுச் சொல்லியருளிய
மெய்வாக்கிய திருத்தொண்டத் தொகை என்ற பேர்பெற்ற
நற்றிருப்பதிகமே; தொழப்பெற்றதால் - தொழுது
     

     (வி-ரை.) பதிகம் - நூற்பொருளைச் சுருக்கி நூன்முகத்திலே
சொல்லும் பகுதி. இத்திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம்
இதன்கீழ் அமைக்கப் பெறுகின்றது.

     புற்றிடத்தெம் புராணர் - திருவாரூரிலே எழுந்தருளிய
புற்றிடங் கொண்டார்; வன்மீகநாதர். புராணர் - மிகப் பழமை
வாய்ந்தவர். இவரது பழமையை அப்பர் சுவாமிகள் “முன்னோ
பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே“ என்று
இதற்கென அருளிய ஒரு தனித் திருத்தாண்டகப் பதிகத்தால்
அருளிச்செய்தனர். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்
பழம்பொருள்" என்ற திருவாசகமும் காண்க. அருளினாற் சொற்ற
வரலாறு தடுத்தாட்கொண்ட புராணத்திலே காண்க. திருவாரூர்ப்
பெருமான் "தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்“ என்று
அடி எடுத்துக் கொடுத்துப் பாடி முடிக்கப்பெற்றதாம். பிருதிவித்
தலமாகிய திருவாரூரிலே இறைவனிடத்திலிருந்து இவ்வாறு கிளம்பித்
தொடங்கிய நாதத் தொகுதியாகிய தொகை, அது தொடங்கிக்
காட்டிய “தில்லை “யிலே இறைவனிடத்திலிருந்து கிளம்பிய
“உலகெலாம்“ என்ற நாதத் தொகுதியாகி இப்புராணத்தில் விரிந்து
முடிவுபெறும் அழகையும் தகுதியையும் காண்க.

     மெய் - சத்திய வாக்கு - ஆப்த வசனம். “அன்ன மெய்த்திரு
வாக்கெனும் அமுதம்“ திருஞான - புரா - 1088 பாட்டிற் காண்க.
மெய்வாக்காவது - அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்
பயன்களைப் பயந்தேவிடும் மொழி. இதுவே நிறைமொழி - அவரது
ஆணை. வரும் பாட்டிலும் “மெய்ப்பதிகம்“ என்றமையும் காண்க.

     தொழப்பெற்றது - தொழுது எடுத்துக் கொள்ளப்பெற்றது.
அந்த மெய்வாக்காகிய பொருளையே நான்தொழுது எனது
வாக்காகிய இப்புராணத்துக்குப் பதிகமாக அமைத்துக் கொண்டேன்
என்றபடி.

     முன்னோர் பொருளை மேற்கொள்ளும்போது அதனைத்
தொழுது நன்றி பாராட்டிய பின்னர் மேற்கொள்ளுதல் மரபு.

“சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார், மீதுதாழ்ந்து“                        (திருஞான - புரா - 216)

என்பது காண்க.

     நற்பதிகமே - இதற்குப் பதிகமாகத் - தொழப்பெற்றது - என்று
கூட்டுக.

     பெற்றதாம் - என்பதும் பாடம்.  38