480. திருமக ளென்ன நின்ற தேவியார் தம்மை
                              நோக்கிப்
 
  புரிவுடன் விரைய வந்தப் புரத்திடைப் போக
                             வேவித்,
தருதவ வேடத் தானைத் தவிசின்மே லிருத்தித்
                                தாமும்
இருநிலத் திருந்து போற்றி “யினியருள் செய்யு“
                              மென்றார்.
14

     (இ-ள்.) வெளிப்படை. திருமகளே இவர் என்று
சொல்லத்தக்கவாறு அங்கு நின்ற தேவியாரைப் பார்த்து
அந்தப்புரத்தினிற் போகும்படி மனதார எண்ணி ஏவியபின், புனைந்த
தவவேடமுடைய அவனை ஆசனத்தின்மேல் இருக்கும்படி செய்து,
தாம் இருநிலத்திலே வீற்றிருந்துகொண்டு, துதித்து, “இனி
அருள்செய்ய வேண்டும்“என்றார். 

     (வி-ரை.) திருமகள் என்ன நின்ற தேவியார் -
பட்டத்துக்குரிய அரசமா தேவியாராதலின், அரசு - செல்வம் - வீரம்
- முதலியவை அதிட்டிக்கும் ஐசுவரியம் பலவும் உருப்பெற்று
இவரிடம் சேர்தலாலே திருமகளே இவர் என்று சொல்லத்தக்கவர்.
அந்தப்புரத்திடைப் போகப் புரிவுடன் விரைய ஏவி என மாற்றுக.
புரிவுடன - ஆகம நுல் உபதேசத்தின் உறுதிப் பயனைச் சிந்தித்து
என்க. விரைய - உபதேசம் தாழ்க்காதபடி விரைய ஏவினார்.
அந்தப்புரத்திடை விரையப்போக என்று கூட்டியுரைத்தலுமாம்.
இச்சரித நிகழ்ச்சியில், இனி, இவற்றினின்றும் விலகி
அந்தப்புரத்திடையே போய் நிற்கும் நிலை தேவியாரடைதலும்
குறிப்பு.

     தரு தவ வேடம் - இயல்பானன்றி வஞ்சனையாற் புனைந்து
தானே தந்து கொண்ட தவவேடம். நாயனார்க்கு அருட்கழனீழல்
சேர்ந்து இடையறாமற் கும்பிடும் கொள்கை தரும் தவ வேடம்
என்பது குறிப்பு.

     தவிசின் மேலிருத்தித் தாமும் இருநிலத் திருந்து - இஃது
ஆசாரியனிடத்து ஞானோபதேசம் பெறும்போது விதிப்படி இருக்கும்
நிலை. தாமும் இருந்து - அடியார் முன் நின்று பணிகேட்கு
மியல்புடைய தாமும், உபதேச மொழியினை இருந்து கேட்கும்
நிலைபற்றி, அவ்வாறு நில்லாமல் அமர்ந்திருப்பது. உம்மை -
எச்சவும்மை. போற்றி - உறுதிப்பயன் றரும் உபதேசம் பெறுமுன்
ஆசாரியரைத் துதித்தல் முறை.

     பரிவுடன - என்பதும் பாடம். 14