481.
|
கைத்தலத்
திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல்
வைத்துப்
|
|
|
புத்தக
மவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்
போதிற்
பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தவப் பரிசே
செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் பொருளெனத்
தொழுது
வென்றார்.
|
15 |
(இ-ள்.)
வெளிப்படை. கையில் வைத்திருந்த வஞ்சனையாகச்
செய்த புத்தகப் பையை மடிமேல் வைத்துப் புத்தகத்தை
அவிழ்ப்பவன் போல அவிழ்த்து. அவர் வணங்குஞ் சமயம் பார்த்து,
அதனுள்ளே கரந்து வைத்திருந்த படையை எடுத்து ஓங்கித் தான்
முன்னர் நினைத்துவந்த அவ்வண்ணமே செய்தானாக; உண்மைத்
தவவேடமே மெய்ப்பொருளாம் என்று தொழுது வென்றார் (அரசர்).
(வி-ரை.)
வஞ்சக் கவளிகை - வஞ்சனையாற்
புத்தகப்பை
போன்று செய்த கவளிகை - ஈறுகெட்டு முன்னர்ப் படைகரந்த
புத்தகக் கவளி (473) என வந்தது.
போன்று
- போன்றிருந்து - போலப்பாவனை செய்து
கொண்டிருந்து. புரிந்தவர் - புரிந்த அவர்
என்றது புரிந்தவர் என
நின்றது. புரிதல் - இடைவிடாது நினைத்தல்.
விரும்புதலுமாம்.
வேடமே சிந்தை செய்வார் - (468).
புரிதல்
- செய்தல் எனக் கொண்டு, மேலே சொல்லியவாறு
அரன்பணியும் அடியவர் பணியும் செய்தாரும், இவ்வஞ்சகனையும்
காலபேதம் முதலிய எதனையும் நோக்காது வேடமே கருதிப்
பணிந்து நூல் கேட்கத் துதித்தாரும் என்றலுமாம்.
பத்திரம்
- படை; வாங்கி - விரையில் ஓச்சி. எடுத்து
என்றலுமாம்.
தான் முன் நினைத்த
அப்பரிசே செய்ய -
சிவனடியார்களுக்கு வரும் ஏதங்களைத் தம் வாக்கினாலும்
சொல்லலாகாது என்பது ஆசிரியர் மரபு. இங்குப் பகைவன்
நாயனார்பாற் செய்த தீங்கினைச் சொல்லலும் மாபாவம் என்று
கொண்டு அவன் நினைத்தபடியே செய்தான் என்ற
ஆசிரியரின்
மனப்பபான்மையும் உறுதிப்பாடுங் காண்க. இவ்வாறன்றிக்
காலையைத் தம் வாக்காற் சொல்லலாகாது என்றது ஆசிரியர்
கொள்கை எனக் கூறுவாருமுண்டு. கொலையையும் போரையும்
வேட்டையையும் இயற்பகை. நாயனார், புகழ்ச்சோழ நாயனார்,
கண்ணப்ப நாயனார் புராணங்களிலும் பிற இடங்களிலும் ஆசிரியர்
விரிவாய்க் கூறுதல் காண்க. ஆதலின் அடியவர்க்கு வரும் ஏதத்தை
விரித்துக் கூறலாகாதென்பதே ஆசிரியரின் கொள்கை என்க.
முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்-றுவித்தான் என்ற ஏனாதி
நாயனார் புராணமும் (40) பிறவுங் காண்க.
மெய்த்தவ
வேடமே மெய்பொருள் - இது நாயனார்
கொண்டொழுகிய கொள்கையும், அப்போது எண்ணிய எண்ணமும்,
சொன்ன மொழியுமாம். உண்மைத் தவவேடம் என்று பேசப்பெற்ற
திருநீறு - சடைமுடி - முதலியவற்றைப் பூண்ட சிவத் திருவேடமே
மெய்ப்பொருளாம். மெய்த்தவ வேடம் - மெய்
சத்தாகிய
நித்தப்பொருள்; மெய்ப்பொருள் - மெய்யினை
- சத்தியத்தினை
அடைவிக்கும்பொருள். வேடமே பொருளாவது;
ஏனைய பொருளல்ல
என்பதாம்.
தவவேடம்
- நீறு, கண்டிகை, சடைமுடி என்ற மூன்றையும்
அரசர் திருவேடமாகக் கொண்டு மூர்த்தி நாயனார்
அரசாண்டதுவும்
இங்கு நினைவு கூர்க. மாலறநேய மலிந்தவர் வேடமும்,
ஆலயந்தானு மானெனத் தொழுமே என்ற சிவஞான போதம் 12-ம்
சூத்திரத்தில் இத் திருவேடத்தி னியல்பும்
திருவேட வழிபாட்டின்
பயனும் விரித்துரைக்கப்பெற்றன. விரிவு ஆண்டுக் காண்க.
தூயவெண்
ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப்
பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொன்
மேய செவ்வாயும் |
உடைய
திருநாவுக்கரசு நாயனாரை அந்தமிலாத் திருவேடத்
தரசு என்றதும் இத்திருவேடங் கண்ட ஆளுடைய பிள்ளையார்
தொண்டர் திருவேட நேரே தோன்றியதென்று தொழு தனர்
என்றதும் காண்க.
இத் திருவேடங்கள் நித்தனாகிய இறைவனது திருமேனியிற்-
-றரிப்பவையாதலால் இவையும் நித்தப் பொருளாம்.திருநீறு மாசங்கார
காலத்தில் இறைவன் றிருமேனியிற் றறிப்பது இவற்றைக் கண்டபோது
இறைவனது இயலும், அவனது அழியாத் தன்மையும், உலகத்தின்
அழியுந் தன்மையும், பிறவும் தோன்றும், தோன்றவே அவன்பால்
அன்புகொண்டு உயிர் உறுதிப்பயன் பெறும்.
திருநெல்வாயிலரத்துறையிலே இறைவன் அருளிய முத்துச்
சிவிகையினைக் கண்ட ஆளுடைய பிள்ளையார் அதனிற் போந்த
திருநீற்றி னொளியினை வணங்கினார் என்பதும் காண்க. சோதி
முத்தின் சிவிகைசூழ் வந்துபார், மீது தாழ்ந்து வெண்
ணீற்றொளி
போற்றிநின்று - திருஞான - புராணம் 216.
மழையினால் உவர்மண் கரைந்து மேனி வெளுத்த வண்ணான்
தம்மெதிரே வரக்கண்டபோது அதனைத் திருநீற்றுவேடமாகக்
கொண்டு யானையினின்றும் இறங்கி அவனைச் சேரமான்
பெருமாணாயனார் வணங்கினார்; அவன் யாரென்றடியேனை
எண்ணியது? அடியேன் அடி வண்ணான் என்னச், சேரர் பிரான்
அடியேன் அடிச்சேரன்; திருநீற்று
வாரவேட நினைப்பித்தீர்
வருந்தா தேகும் என்றார். எனச் சரிதங் கூறுவதும் காண்க.
(சேரமான் பெருமாணாயனார் புராணம் - 17, 18, 19.)
ஆணையாமென நீறுகண் டடிச் சேர னென்னும், சேணு லாவுசீர்ச்
சேரனார் (திருக்குறிப்பு - புராணம் - 4) என்று இதனையே
ஆசிரியர் விதந்தெடுத்தோதுதலுங் காண்க.
மெய்ப்பொருள்
- உண்மைத் தன்மையை - அழியா
நிலைமையை -அடைவிப்பது.
ஞானத்
திரளாய் நின்ற பெருமா னல்ல வடியார்மே
லூனத் திரளை நீக்கு மதுவு முண்மைப் பொருள் போலும் |
-தக்கேசி
- 3. |
என்ற ஆளுடைய பிள்ளையாரது
திருவண்ணாமலைத் தேவாரமுங் காண்க.
இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும்
பரமேசுரனெனக் கண்டு வழிபடுக வென்றவிடத்து, (சிவஞானபோதம்
- 12 - ம் சூத்திரம் - மூன்றாமதிகரணம்) மெய்யுணர்வுடையார்க்கு
எவ்விடத்தும் பாகுபாடின்றிப் பரமேசுரனெனக் காணுதலே பொருத்த
முடைமையாலும், நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றுள்ளும்
அவ்வாறே அருளிச் செய்தலாலும், வேதத்திலே திருவுருத்திரத்தினுள்
பகுப்பில்லாது உயிர்ப்பொருள் உயிரில்லாப் பொருள்களை யெல்லாம்
தனித்தனி எடுத்து ஓதி வழிபாடு கூறுகின்றமையாலும் இங்கு
இவ்விடங்களில் மாத்திரையே பரமேசுரனெனக்
கண்டு வழிபடுக
என்று கூறியது எங்ஙனம் பொருந்துமெனும் ஆசங்கையை
எடுத்துக்கொண்டு, அதற்குச் சமாதானங் கூறும் வகையிலே
அவன்மற் றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே, அல்லாதவிடத்
தப்பிரகாசமாய் நிற்றலான் என ஏதுக் கூறியதும் காண்க. அதாவது
முதல்வன் எங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து
மாத்திரையே தயிரி னெய்போல விளங்கி நிலைபெற்று, ஏனை
இடங்களிற் பாலினெய்போல வெளிப்படாது நிற்கின்றானாதலா
லென்றதாம்.
வாக்கு மனாதீதமாய் நின்ற பரம்பொருள்
உலகத்தார் தன்னை
அறியும்படி கருணைசெய்து தனது வேடமாகிய திருநீறு கண்டிகை
முதலிய தனது வடிவத்தைத் தன்னன்பர்க்குக் கொடுத்து
அவர்களிடமாக நின்று அங்கங்கே அறிவு விளக்குதலானும், அவர்
தம்மைச் சோகம்பாவனையால் உணரச் செய்தலானும், அவரை ஒரு
குறியின் கணிறுத்தித் தனது வியாபகத்துக்குள்ளாக இருத்துதலானும்,
குறியிறந்து நின்று தன்னை உள்ளவாறுணரும் அன்பாளராகிய
அவர்மாட்டுத்தயிரின் கண்ணதாகிய நெய் போல விளங்கித்
தோன்றும்; பாசக் கட்டுடையார்க்கு இவ்வியல் பில்லாமையான்
அவர்மட்டுப் பாலின் கண்ணதாகிய நெய்போல விளங்காது நிற்கும்
என்று உதாரணத்தினுள் எமது மாதவச் சிவஞான சுவாமிகள்
மாபாடியத்துள் விரித்துள்ளதும் காண்க. இங்கு நாயனார்
சீவன்முத்தராதலின் வேடத்தைச் சிவனென வழிபட்டனர். சீவன்
முத்தரது செயல்களைப், பிறர் எவ்வா றுணரவல்லார்?இங்கு நாயனார்
வேடத்தினையே வழிபட்டனர். அவ் வேடந் தாங்கிவந்தவனைப்
பொய்த் தவ வேடங் கொண்டு வந்தவனும், பன்முறையிழந்து
தோற்றுப் பரிபவப் பட்டுப்போன பகைவனுமான முத்தநாதனென்று
கொண்டாரல்லர். வேடத்தைக் காணாது வேடங் கொண்டானைக்
காணும் உலகர் இதன் தத்துவ முணரமாட்டார் என்க. கலிக்கம்ப
நாயனார் சரித உள்ளுறையும் இங்குக் காண்க.
தொழுது
- வேடத்தினை அரனெனத் தொழுது வழிபட்டு.
வென்றார்
- அவ்வேடந் தாங்கி வந்த முத்தநாதனது
வஞ்சகத்தினை வென்றார்.
அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்தும் (468), அன்பர்
வேடமே
சிந்தை செய்தும் (468), அவ் வேடத்தார்க்குக் குறைவறக்
கொடுத்துவந்தும் (470), ஒழுகிய தமது கொள்கை நிலையினின்றும்,
தாழாது தம்முயிர்க்கிறுதி வந்த இந்தச் சமயத்தினும்,
திண்மையுடையராய் நின்று வெற்றியடைந்தனர். பகைவனோ தனது
நிலையினை விட்டு இவரது கொள்கையினுட்பட்டுத் திருவேடந்
தாங்கி வந்தமையினாலே தோல்வியே பெற்றான். இச்சமயத்து
நாயனார் இவ்வாறு வேடத்தினையே மெய்ப்பொருள் என்று
கொள்ளாது வேடந்தாங்கியவனைத் தமது பகைவன் என்று
கொண்டிருப்பாராயின் அவர் கொள்கையினின்றும் வழுவித்
தோற்றவராவர் என்பதாம்.
இக்கருத்தினையே வெல்லுமா
மிகவல்ல மெய்ப்பொருள்
என்று முதனூல் மிக அழகாகப் பேசிற்று. படைகொடு போரிலே
வென்றார். வேடங்கொண்டு வஞ்சனையினும்
வென்றார்.முன்னையதில்
அடர்த்து வென்றார்; பின்னையதில் தொழுது வென்றார்
என்க.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந், தகுதி யான்
வென்றுவிடல் எனுந் திருக்குறளுக்
கிலக்கியமானதுங் காண்க.
இக்கொள்கையினை இன்னும் விரிவாக ஏனாதி நாயனார்
புராணத்தும் காண்க.15
|