483. வேதனை யெய்தி வீழ்ந்த வேந்தரால்
                            விலக்கப்பட்ட
 
  தாதனாந் தத்தன் றானுந் தலையினால் வணங்கித்
                                  தாங்கி
“யாதுநான் செய்கே?“ னென்ன, “வெம்பிரா
                           னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணங் கொண்டுபோய்
                         விடுநீ“ யென்றார்.
17

     (இ-ள்.) வெளிப்படை. வேதனைப்பட்டு வீழ்ந்த அரசர்
கட்டளையினாலே இவ்வாறு தனது செய்கையினின்றும் தடுத்து
விலக்கப்பட்ட அடிமையாகிய தத்தனும்.
அரசரது ஏவலைத்
தலையால் வணங்கி ஏற்று அதன்படி அமைந்து நின்றவனாய், வீழ்ந்த
அரசரைத் தாங்கி அணைத்துக்கொண்டு, “யாது நான் செய்தல்
வேண்டும்“ எனப் பணிவுடன் கேட்க “எம்பிரானுடைய அடியாராகிய
இவர் திரும்பிச் செல்லும் வழியில் எவரும் மேற்சென்று வழி
தடுக்காத வகையிலே காவல்புரிந்து இவரைக் கொண்டுபோய் நீ
விடுவாயாக“ என்று சொன்னார்.

     (வி-ரை.) வேதனை - சங்கடம். செங்குருதி மிகுதியும்
சோர்வதனாலும், முத்தநாதன் செய்கையினாலும் நேரிட்ட துன்பமும்
சோர்வும்.

     விலக்கப்பட்ட தாதன் - நமர் என வாயினாற் சொல்லியும்,
நீண்ட கையினாற் றடுத்தும் விலக்கப்பெற்ற அடியான். தான்
துணிந்தபடி முத்தநாதனை வாளினாலெறியும் செய்கையிலிருந்து
விலக்கப்பட்ட. தாதன் - அடிமை. இது தாசன் என வழங்கும்!
ஆண்டான் கட்டளைப்படி நடப்பது தவிர அடிமைக்கு வேறு
செயலில்லை என்பது குறிப்பு.

     தலையினால் வணங்கி - அவரது கட்டளையைத் தலையார
வணங்கி ஏற்றுக் கொண்டு. தலையால் வணங்குதல் உடன்பட்டு
நிற்கும் அடையாளமாம். ஆங்கிலத்திலும் I bow to your decision
என்று கூறும் வழக்கும் காண்க.

     தாங்கி - வீழ்ந்த அரசரைக் கையினாலே அமைத்துச்
சிரத்தைத் தாங்கி. அவர் இட்ட கட்டளையைச் சிரமேற் றாங்கி
என்றுரைப்பாருமுண்டு.

     யாது நான் செய்கேன - நான் இதுவே செய்யத்தக்கது என்று
துணிந்து முற்பட்ட செயலைத் தேவரீர் விலக்கிவிட்டீர்; ஆதலின்
இனிச் செயத்தக்கது யாது? அருள் செய்க என்று கேட்டபடியாம்.

     எம்பிரானடியார் - இறைவனடியாராகிய இவர். சுட்டுத்
தொக்குநின்றது. முன்நின்ற இவரே யன்றி, இனி எந்த
அடியவரேயாயினும், அவர் கருத்துப்படி போதற்குற்ற தடைவிலக்கி
வழிவிடுக என்று இனிவருங் காலத்திற்கும் ஏற்குமாறு உபதேசித்துக்
கட்டளையிட்ட குறிப்புமாம். “பரவிய திருநீற் றன்பு
பாதுகாத்துய்ப்பீர்“ (488) என்று அரசர் ஆயத்தார்க்கும் -
காதலார்க்கும்
வெளிப்படையாக இவ்வாறு உபதேசித்தமை பின்னர்க்
காண்க. ஆதலின் தாதனாகிய தத்தனுக்கும் அதுவே
கட்டளையாயிற்று.

     போக - அவர் கருத்துப்படியே போக. மீது - இவரது
செலவில் குறுக்கிட்டு இடையூறாக இவர்மீது. இடைவிலக்கா
வண்ணம்
- வழிமறித்துத் துன்பஞ் செய்யாதபடி.

     கொண்டுபோய - இப்பணியை பிறர்பால் விடாது நீயே கூடச்
சென்று காவல்புரிந்து கொண்டுபோய் என்க. தனித் தடையாகிய
அணுக்கண் வாயில் காப்போனாய், அரசரது நம்பிக்கைக்
குரியவனாய், அறிவும் வீரமும் உடையானாய் உள்ளானாதலின் நீயே
கொண்டுபோய்விடு என்றார். நீ - நீயே. பிரிநிலை ஏகாரம் தொக்கது.
விடு - காவலாய் விட்டு வருக. விட்டனன் (487), என்பனவுங்
காண்க. விட்டபின (485) என்பதன்கீழ் விசேட உரை பார்க்க. 17