485. அவ்வழி யவர்க ளெல்லா மஞ்சியே யகல நீங்கச்
 
  செவ்விய நெறியிற் றத்தன் றிருநகர் கடந்து
                                 போந்து
கைவடி நெடுவா ளேந்தி யாளுறக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் றன்னை விட்டபின்
                         மீண்டு போந்தான்.
19

     (இ-ள்.) வெளிப்படை. (தத்தன் சொல்லிய) அதன் வழிபட்டு
அமைந்தவர்களாகிய அவர்கள் எல்லாம் பயந்து அகல
நீங்கினார்களாக, தத்தன் சிறந்த வழியிலே திருநகரத்தைக் கடந்து
போய்க், கையிலே கூர்மையுடைய நீண்ட வாளினை ஏந்திக் காவல்
செய்து, ஆட்கள் யாரும் அணுக முடியாத காட்டினை அடையவும்,
அவ்விடத்திலே வெவ்வினைக் கொடியவனாகிய அவனை விட்டு,
அதன்பின் மீண்டு வந்தான்.

     (வி-ரை.) அவ்வழி - தத்தன் “இறைவனதாணை“ என்று
சொல்லிய ஆணையின் வழி. அரசனாணையைக் குடிகள் இன்புடன்
ஏற்று அதற்குள் எவ்வளவு தூரம் அமைந்து நின்றொழுகினார்கள்
என்பது இதனால் விளங்கும்.

     அகல நீங்க - புடை சூழ்ந்தவர்கள் இது கேட்டவுன் முதலில்
விலகி நின்றார்கள், பின்னர் அங்கிருந்து நீங்கினார்கள். அஞ்சியே
- அரசாணைக்கு மாறாக அறியாமையினாலே அவனைக் கொல்ல
முற்பட்டோம் என்றும் அஞ்சினார்கள். அவர்கள் துணிந்து வந்து
“கொல்வோம் எனச் சூழ்ந்த“ அவ்வழியினின்றும் அகல
என்றுரைத்தலுமாம்.

     செவ்விய நெறியிற் றத்தன் - செம்மை நெறியிலே
நின்றவனாகிய தத்தன். திருநகர் செவ்விய நெறியிற் கடந்து என்று
கூட்டி நகரத்தை நல்ல வழியினாலே கடந்து என்றுரைப்பாருமுண்டு.
நகரத்தின் நெறிகள் என்றது தெருக்களை, இவற்றின் செம்மை
முன்னர் (474) உரைக்கப் பெற்றது. ஆதலின் மீண்டும் உரைத்தல்
அமைவின்றாம். அன்றியும் அத்திருநகரின் நெறிகள் யாவும் செம்மை
யுடையனவேயாம். இங்குச் சொல்லியபடி செந்நெறியிலே அமைந்து
நின்ற நகரத்தார் பிறரெல்லாரையும் கடந்து என்றலுமாம்.
இப்பொருட்கு நகர் - என்றது நகர மாந்தரை என்க.

     திருநகர் - அரசனது தலைநகராதலானும் இறைவனது
வீரட்டங்களில் ஒன்றாய திருத்தலமாதலானும் திருநகர்
எனப்பெற்றது. தன்னையடைந்தார்க் கெல்லாம் அருட்டிருவை
அளிக்கவல்ல நகர் என்க.

     வடிநெடுவாள் கை ஏந்தி என மாற்றிக்கொள்க. யாரேனும்
மிகச்சடுதியில் வந்து தடுக்கக் கூடுமாதலின் அப்போதும் விரைவில்
உதவும் பொருட்டு வாளினை உறைநீக்கிக் கையில் ஏந்திக்கொண்டு
காவல் புரிந்து. வடி - வடிவத்தாற் கூர்மையுடைய.

     ஆள் உறாக்கானம் - இவனை வழி தடுத்து விலக்கக்
கூடியவராகிய எந்த ஆளும் வரக்கூடாத தூரத்தேயுள்ள காடு. இது
நகர்ப்புறத்தே உள்ளது. இதனால் அவனைத் தத்தன் நகரங்கடந்தும்
பின்னரும் சிறிது தூரம் சென்று காடாரம்பமாகிய இடம்வரை
சேமமாகக் கொண்டுபோய் விட்டான் என்பதாம். கானம - சேதி
நாட்டினைக் கடந்த எல்லை என்பாருமுண்டு. அரசனது கிடக்கை
நிலையிலே அத்தனை தூரம் சென்று திரும்புதல் கூடாமையின் இது
பொருளன் றென்க.

     ஆளுறாக் கானம் - இவன் மனிதர் வழங்குதலில்லாது
விலங்குகளே வாழுங்காட்டிற்கே உரியவன் எனும் குறிப்பும் பொருள்
பெற நிற்பதும், கொடிய ஒருவனை ஆளில்லாக்காட்டில் விட
வேண்டும் என்று பழமொழியாகக் கூறுவதும் காண்க.

     வெவ்வினைக் கொடியோன் - வெவ்விய தீவினையே
உருவமாகிய கொடும் பாதகன். வேடமே சிந்தை செய்வாராகிய
நாயனார், இவனை “நமர்“ என்று கொண்டாராயினும், அது அவரது
கொள்கை நிலையினின்று அவர்காணும் மட்டில் நின்று, அவருக்கு
உய்திப்பயன் தருவதற் கேதுவாயிற்று. அன்றி, இவனது உண்மை
நிலையைக் குறித்ததன்று. இவனது நிலையினின்று பார்க்கின், இவன்
தீவினையாளனாகிய கொடியவனேயாகித் தீவாய் நரகத்திற் புகுதற்கே
உரியவனாம். ஆதலின் இங்கு இவனை இவ்வாறு கூறினார். (479)
உரை பார்க்க.

     தன்னை - அவன் தன்னை இவன் விட்டபின் என்றும், இவன்
தன்னை அவன் விட்டபின் என்றும் இருவழியும் உரைகக் நின்றது.
கொடியோன் தத்தனை விடுதலாவது - இறைவனதாணையால்
இக்கொடியோனையும் காவல் புரிந்து உடன் கொண்டு போய்விடும்
நிலையிற் கூடிய தத்தன் அக்கொடியவனது சேர்க்கையினின்றும் விடுபடுதல்.

     தன - அசையென்றொதுக்குவாருமுளர்.

     விட்டபின - உண்மையாகவே அவன் விடவேண்டியவன்
தான். “ஈசனுக்கன்பில்லா ரடியவர்க்கன் பில்லார்; எவ்வுயிர்க்கு
மன்பில்லார்; தமக்குமன் பில்லார்; பேசுவதென்? அறிவிலரப்
பிணங்களைநா மிணங்கிற் பிறப்பினிலு மிறப்பினிலும் பிணங்கிடுவர்;
விடுநீ;“ (சிவஞான சித்தியார் - 12 - சூத்திரம் - 2) என்ற சாத்திர
உண்மையை இங்கு வைத்துக் காண்க.

     மீண்டு - அரசனிடம் மீண்டும், அவனது தொடக்கினின்றும்
மீட்சியடைந்து என்ற குறிப்புமாம்.

     போந்தான - தத்தன் என்ற எழுவாய் வருவிக்க. 19