487. சென்றடி வணங்கி நின்று “செய்தவ வேடங்
                                 கொண்டு
 
  வென்றவற் கிடையூ றின்றி விட்டன“ னென்று
                                    கூற,
“வின்றெனக் கையன் செய்த தியார்செய வல்வர்“
                                  ரென்று
நின்றவன் றன்னை நோக்கி நிறைபெருங் கருணை
                                கூர்ந்தார்.
21

     (இ-ள்.) வெளிப்படை. சென்று அரசரை அடிவணங்கி நின்று
கொண்டு, “செய்த தவவேடங் கொண்டதனாலே வென்றவனைக் காவல்
்செய்து, கட்டளைப் படி கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்)
சொல்ல, “இன்று எனக்கு ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர்
செய்யவல்லவர்?“ என்று (அவனுக்கு நன்றி கூறுமுகத்தால) நன்மொழி கூறி,
(வணங்கி) நின்றானாகிய அவனை நோக்கி, நிறைந்த பெருங்கருணை
கூர்ந்தார் (அரசர்).

     (வி-ரை.) அடிவணங்கி நின்று - சென்றவுடனே அரசர் முன்பு
முறைப்படி கீழ்வீழ்ந்து வணங்கிப் பின் எழுந்து நின்றுகொண்டு.

     செய்தவ வேடங் கொண்டு - செய் - வேடம் - (முத்தநாதனிடத்து)
இயல்பாய் மேற்கொள்ளப் பெறாது வஞ்சிக்கப் புனைந்து செய்துகொண்ட
வேடம் (473) (நாயனாரிடத்து) அன்புடையாரிடத்து வசீகரித்தலைச்
செய்கின்ற திருவேடம்.

     கொண்டு வென்றவன்
- வேடத்தினைத் துணை கொண்டு
வென்றவனாகத் தன்னை எண்ணிக்கொண்டவன். முத்தநாதன் - படை
கொண்டு இகலினால் வெல்ல மாட்டான், அற்றத்தில் வெல்வானாக எண்ணி
வந்தவன், முன் நினைந்த அப்பரிசே செய்தானாதலின் தான் கருதியபடி
வென்றவனாகவே தன்னை எண்ணிக் கொண்ட அவன். உண்மையில்
அவன் வென்றவனல்லன் என்றபடியை அரசர் பணிக்க அறிந்து
கொண்டவனாதலின் அதனை இங்குக் குறிப்பிட்டுக் கூறினான் தத்தன்.
பகைவனது வஞ்சகச்செயல், வேடத்தின் துணையானே முற்றிய பின்னும்
அவ்வேடத்தின் துணையானே அவன் உயிருடன் தப்பிப் போகவும் கூடியது
என்ற செய்தி இன்னும் தத்தனுடைய மனத்தில் ஊன்றி நின்றமையாலே
அதனையே சுட்டினான் என்றலுமாம்.

     இன்று - எனக்கு - ஐயன் - செய்தது யார் - செய வல்லார்? -
இதுபோழ்து அரசர் கூறிய இந்த நன்மொழியில் ஒவ்வொரு சொல்லும் மிகப்
பொருத்தமும் பொருளாழமும் உடைமை குறிக்க.

     இன்று எனக்கு - நான் வன்மையனாய் அரசியலில் வீற்றிருக்கும்
போது அச்சம் - தன்னலம் முதலிய பல காரணங்களால் யாவரும் என்
மொழிவழி நிற்பர்; நான் வலியிழந்து குருதி சோர வீழ்ந்து சிறிது போதில்
ஆவியும் சோர நின்ற இன்று இச்சமயத்தில் என மொழிவழி நிற்றல் அரிது;
ஐயன பகைவன் என்று வாளால் எறியலுற்ற உன் கருத்துக்கு மாறான
இப்பணியை இன்று சொற்கடவாது இயற்றலினால் நீ பெரியனாயினை; ஐயன்
- முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். பெருமையும் அருமையுங் குறித்தது;
தாதனாகிய தத்தனை ஐயன் - என்றது அவன் தம்பாற் செய்து நிறை
வேற்றின கடமையின் நன்மைக்காகவும், வேடம் போற்றிய முறையைக்
கடைபோகக் காத்த வுதவிக்காகவும் நன்றி பாராட்டிய அருமைப்பாடும்
குறித்தது; செய்தது - (சிலர் செய்வேன் என்று சொல்லுவர்; ஆயின்
செய்யார்;) நீ சொல்லியபடியே செய்து முடித்தனை; யார்செய வல்லார்?
என்ற வினா எதிர்மறை குறித்தது. நீயே செய்ய வல்லாய் என்ற
உடன்பாட்டினும், வேறு எவரும் செய்கலார் எனும் எதிர்மறைக்கூற்று
உறுதிப்பாடுடையது; யார் வல்லார்? என்ற வினா அதனினும் மிகவும் உறுதி
உணர்த்தும் வழக்கு.

     என்று - என்று தம் திருவாக்கினாலே அருண்மொழி கூறி; நோக்கி
- கண்ணினாலே அருட்பார்வை செய்து; நிறை பெருங் கருணை கூர்ந்தார்
- தந் திருவுள்ள நிறைந்த பெரிய தண்ணருளை அவனிடத்துச் செய்தார்.
இவைமுறையே மொழி, மெய், மனம் என்னும் மூன்று கரணங்களாலும்
தத்தனை நாயனார் ஆசீர்வதித்து அருளிய தன்மை குறித்தன. தத்தன்
பெற்றது பெரும் பேறன்றோ? 21