488. |
அரசிய லாயத் தார்க்கு மழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியி
னாலே
பரவிய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீ ரென்று
புரவலர் மன்று ளாடும் பூங்கழல் சிந்தை செய்தார்.
|
22 |
(இ-ள்.)
வெளிப்படை. தமக்குப் பின் அரசியல் நடத்து
முறைமையில் வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும்,
தம்மிடத்துக் காதலால் மனம் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார்
முதலியோர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுவாராகி
விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து வைத்த அன்பினையே
சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்
என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர்,
திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த
திருவடியைச் சிந்தித்திருந்தனர்.
(வி-ரை.)
முன் பாட்டிற் கண்டபடி திருவேடத்தையும்
வேடத்தாரையும் காத்து வந்த கொள்கையைக் கடைபோகச்
செலுத்துதலே தமது முதற் கடமையாக
எண்ணிச் சோர்கின்ற
ஆவியைத் தாங்கினார்.
திருவேடத்தின் பின், இரண்டாவதாகத்
தமது அரசுரிமைக்
கடமையை வைத்தெண்ணியவராய் அரசியலாயத்தாரைக்
கொண்டனர்; அதன் பின்னரே தம்பாற் காதலுடைய - உடல்
உறவுடைய - தேவிமார் முதலிய சுற்றத்தாரை வைத்தெண்ணினார்.
இதுபற்றியே, ஆவி சோர்கின்ற இச்சமயத்தில், முதலில் நாயனாரது
அருணோக்கத்திற் கிலக்காயினவன் தத்தன்
என்று முன் பாட்டிற்
கூறிய ஆசிரியர், இப்பாட்டிலே அரசியல் ஆயத்தாரை
அதனை
அடுத்தும், விரவிய காதலாரை அதற்கடுத்தும்
வைத்தோதினார்.
அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின் காரியம் அதற்குப்
பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும் வைக்கற்பாலன என்பது
ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும் காதலாரும்
கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய
வேடமே சிந்தித்த லொன்றேயாம் என்பதும் குறிக்க.
அரசியல் ஆயத்தார்
-அரசியலைச் செலுத்தும் தொகுதியவர்.
அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு
திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க. அழிவுறுங் காதலார்-
தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய
தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும்
தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார்
- மக்கள்
முதலிய சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி
முதலாயினார் என்று
முரைப்பாருமுண்டு.
விரவிய செய்கை
- நடந்த செய்தியையும், இனி நடைபெற
வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க.
விளம்புவார்
- எதிர்கால வினையாலணையும் பெயர்.
சொல்வாராகி. என்று என்பதனோடு முடிந்தது.
விதியினாலே
- இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய்
விளைந்தது. விதி - திருவேடத்தை அரனெனத் தொழுக என்று
ஆகமம் விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும்
அடங்க ஒரு சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும்
கூறியவாறு. நிகழ்ந்தது என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது.
நியதிப்படி என்றலுமாம். விதியினாலே பரவிய
என்று கூட்டி
விதிப்படி இதுவரை நான்போற்றி வந்த - என்றுரைத்தலுமாம். நான்-
எழுவாய் வருவிக்க. பரவிய - வேதங்களாலே
பரவப்பெற்ற.
திருநீற்றன்பு பாதுகாத்து
உய்ப்பீர் - திருநீறும் ஏனைத்
திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச்
சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே,
இந்த, முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க
உறுதிப் பொருள். இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் எனு
மிருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க.
இஃதொன்றினைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே
அனைவர்க்கும் திருவருளின்பம் தரும் என்பது நாயனாரது துணிபாம்.
வேடத்திற்றலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய
வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.
என்று
- என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும
நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர்
-
காத்தலின் வல்லவர் - அரசர். இங்கு இப்பெயராற் கூறியது
மேற்கூறிய பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற்
காத்துநின்றமை குறித்ததாம்.
மன்றுளாடும் பூங்கழல்
- சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும்
அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல்
என்றமையால் எடுத்தபாதம் என்க.
இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு
தினமும்
பூசித்து வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க.
முன்னர் தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய
பெருமா னன்பர்க் காவன வாகும் (470) என்றதும், வரும் பாட்டில்
அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி
என்பதும் காண்க. இவ்வாறே கழறிற்றறிவார் நாயனார்
சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத் திருச்சிலம்பொலி கேட்ட
சரிதமும் இங்கு நினைவு கூர்க
இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை
நினைத்தல் வேண்டும் சாங்காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன்
பின்னர் ஆகின்றான் என்பர். புலனைந்தும் பொறிகலங்கி
நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதாகிய
அப்போது, தனது மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும்,
தன்பிரிவு பற்றித் தன் முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற
துன்பங் காண்பதாலும், பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று.
இதுபற்றியே ஒருவன் இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை
முகத்திற்றேக்கி அழுதல் முதலியன செய்யாது தேவாரந் திருவாசக
முதலிய அருட்பாக்களை ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று
பெரியோர் கூறுவர்.
ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்
பெறுதல் நெடுங்காலம் இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்
கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டிய
தொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்
தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்
பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவு
வேந்தராய், இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும்
வேண்டாதவராய் உள்ள எமது பரமாசாரிய ஞான மூர்த்திகளாகிய
அப்பர் பெருமானும் இவ்வொருவரத்தினையே பலவிடத்தும்
இறைவன்பால் மன்றாடி வேண்டினார்.
துஞ்சும்போ
தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டு மாவடு துறையு ளானே, |
|
துஞ்சும்
போதுநின் னாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற வருளுமை யாறரே, |
|
சாமன்
றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே |
முதலிய
பற்பல தேவாரங்கள் காண்க. இங்கு நாயனாரும்
பன்னாட் பூசித்துத் தியானித்துப் பிரார்த்தித்ததன் பயனாகவே
இச்சமயத்து மன்றுளாடும் பூங்கழல் சிந்தை செய்யப் பெற்றதும்,
இறைவன் அவர்முன் றம்மைக் கண்டாவா றெதிரே நின்று
அருளியதும் கூடிற்று என்றதாம்.
செய்கை எல்லாம்
- என்பதும் பாடம். 22
|