49. அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை  
  நந்த நாதனா நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாம லியம்புவாம்.
39

     (இ-ள்.) அந்த......வகையினால் - அந்தத்
திருத்தொண்டத்தொகை என்ற மெய்ப்பதிகத்திலே துதிக்கப்பெற்ற
அடியார்களை நமது நாதனாகிய நம்பியாண்டார் நம்பிகள்
மனமுவந்து நிறையத் துதித்தருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை
வகை நூலாகவும் வழிநூலாகவும் மேற்கொண்டு; வந்தவாறு - எமது
ஆற்றலிலே திருவருள் புகுந்து கைதந்தபடி; வழாமலியம்புவாம் -
தவிராமற் சொல்வோமாக.

     அடியார்களை - நம்பி - புகன்ற - வகையினால் இயம்புவாம்
என்க.

     (வி-ரை.) நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூரிலே
பொள்ளாப்பிள்ளையாரது திருவருள் பெற்று அதன் வழியே
திருமுறைகளைக் காண்பதற்கு உபகரித்த பெரியார். பதினோராம் திருமுறையிலே இவர் அருளிய நூல்களைக் காண்க.
திருஞானசம்பந்த சுவாமிகளைத் தமது பாசனாமூர்த்திகளாகக்
கொண்டு அவர் திருவடிகளிலே சிறந்த பத்திசெய்து பல
சித்திகளையும் பெற்றனர் என்பது இவரது பதினோரந் திருமுறைப்
பிரபந்தங்களால் உணரப் பெறும். பெரிய புராணமாகிய விரிநூலுக்கு
வகை நூல் உணர்த்தியவாறு. தொகை - வகை - விரி - என்று
நூல்கள் மூன்றாக வகுக்கப்பெறும். இங்குத் தொகை - வகை - விரி நூலாவன மேலே உரைத்தார். இனி, முதல் - வழி - சார்பு - என
மூவகை நூல்களாக வகுக்கும்போது இப்புராணம் சார்பு நூலாம்.
இதற்குத் திரு அந்தாதி வழிநூல் என இங்கு உணர்த்தியவாறுமாம்.

     பொள்ளாப் பிள்ளையார் என்பது பொல்லாப் பிள்ளையார்
என வழங்கும். பொள்ளுதல் - தச்சனாற் றொளைக்கப்படுதல்.
தொளைக்கப்படாமல் தானாய் உண்டானவர். இப்பிள்ளையாரிடத்துக்
கேட்டு நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியருளிச் செய்தார். நூல்
வந்த வழியும் மரபும் உணர்த்தியபடி.

     வந்தவாறும் - என்பதும் பாடம். 39