| 492. 
             | 
          வாரி 
            சொரியுங் கதிர்முத்தும் வயல்மென் கரும்பிற் 
                                           படுமுத்தும் | 
            | 
         
         
          |   | 
          வேரல் 
            விளையுங் குளிர்முத்தும் வேழ மருப்பி  
                                      னொளிர்முத்தும் 
            மூர லெனச்சொல் வெண்முத்த நகையார் தெரிந்து  
                                      முறைகோக்குஞ் 
            சேரர் திருநாட் டூர்களின்முன் சிறந்தமூதூர்  
                                        செங்குன்றூர், 
             | 
          2 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. கடலில் மிகவும் சொரிய விளைகின்ற  
      ஒளி வீசும் முத்துக்களையும், வயலின் விளைகின்ற கரும்பிலே  
      படுகின்ற முத்துக்களையும், மூங்கில்களில் விளைகின்ற  
      குளிர்ச்சியுடைய முத்துக் களையும், யானைக்கோடுகளிற் பிறக்கும்  
      விளக்கமுடைய முத்துக்களையும் இம்முத்துக்களே இவர்களது  
      பல்வரிசைகள் என்று சொல்லத்தக்க வெண்முத்துப் போன்ற  
      நகையினையுடைய பெண்கள் வகைதெரிந்து முறைப்படக் கோக்கின்ற  
      சிறப்புடைய, சேரர்களது திருநாட்டிலே உள்ள பல ஊர்களிலும்  
      முன்வைத்து எண்ணும்படி சிறந்த பழமையான ஊராகித்  
      திருச்செங்குன்றூர்,  
       
           (வி-ரை.) 
      முன்பாட்டிற் சொல்லிய கடல், நிலன், வரை  
      வளங்களிலே சிறந்த வளத்தினை அவ்வந்நிலங்களில்  
      முறைப்படவைத்து வளப்படுத்திக் காட்டுகிறபடி காண்க. முத்துக்கள்  
      பற்பல இடங்களிற் பிறக்கு மென்பது நூற்றுணிபு. முன்குறித்த இம்  
      மூன்றிடங்களினும் வரும் ஏனைய வளங்கள் நிற்க, முத்து 
       
      என்பதொருவளனே இங்கு இம் மூன்றிடங்களினும் விளையவும்,  
      அவை ஊர்களின் வந்து உடன் பெருகிமல்கவும் 
      உள்ள சிறப்புக்  
      கூறுகின்றது காண்க. திரைசெய் கடலின் 
      வளனுக்கு இங்கு வாரி  
      சொரியும் கதிர்முத்தும் என்றும், திருந்து நிலனின் 
      செழுவளனுக்கு  
      வயல்மென் கரும்பிற் படுமுத்தும் என்றும், வரையின் 
      வளனுக்கு  
      வேரல் விளையுங் குளிர்முத்தும் வேழமருப்பின் 
      ஒளிர்முத்தும்  
      என்றும் முறையே வகுத்துக் காட்டினார். 
       
           முத்து என்றதொரு வளனைக் காட்டவே இதுபோலவே 
       
      பிறவும் காண்க எனக் கூறியதாயிற்று. மலை நாடாதலின் அச்சிறப்பு  
      நோக்கி அதற்கு வேரன் முத்தும் வேழ முத்தும் என இரட்டிப்பு  
      வளன் கூறினார். வேரல் - மூங்கில். வேழம் 
      - யானை.  
      இவ்விரண்டும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள். இவற்றின் வரும்  
      முத்துக்கள் அப்பொருள்களிற் படும் வளன்களாம். 
       
           வாரி சொரியும் கதிர் 
      முத்தும் - சொரியும் - மிகுதி  
      காட்டிற்று. திருமறைக்காடு முதலிய முத்துக் குளிக்கும்  
      கடற்றுறைகளில் அவ்வப்பருவ காலங்களில் இவை மிகுதியாய்ச்  
      சொரியும் காட்சி காணத்தக்கது. “உப்பளத்தின், முன்றிறோறுஞ்  
      சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டு“ 
      (திருநா - புரா -  
      264) முதலியவை காண்க. 
       
           வயல் மென் கரும்பிற் 
      படும் முத்து - திருந்து நிலனின்  
      செழுவளன் என்றதற்கேற்ப, அவ்வாறு திருந்திய வயல்களில்  
      விளைவித்த கரும்பு திருந்த விளைந்து மனிதர் கைப்படும் முத்து.  
      படுதல் - விளைதல், கைப்படுதல் என இருபொருளுங்கொள்ள  
      நின்றது. வயலின் விளைகின்ற கரும்புக ளத்தனையிலும்  
      காண்பரிதாகிக் குறித்த சிலவற்றில் மட்டும் விளைவதாம்.  
      அவைதானும் மனிதர் கைப்படுதல் மிக அரிதாம். ஆதலிற் படும் 
       
      என்றார். 
       
           வேரல் விளையும் குளிர் முத்தும் வேழமருப்பின் ஒளிர் 
       
      முத்தும் - ஒரோர் காலத்தன்றி இவை மனிதர் கையில் அங்கங்குக்  
      கிடைப்பரிதாய் மலைகளில் உதிர்க்கப்பட்டு மழை வெள்ளத்தின் வழி,  
      ஆறுகளில் அடித்துக்கொண்டுவரப் பெறும் நாட்டு வளன்கள். கதிர் 
       
      முத்து, படு முத்து, குளிர் முத்து, ஒளிர் 
      முத்து என்ற நால்வகை  
      அடைமொழிகளின் வேறுபாடு அவ்வம் முத்துக்களுக்குரிய  
      சிறப்பியல்புகள் குறித்து நின்றது. கடன் முத்தம் சலசம் எனப்படும்.  
      நீரிற் பிறப்பதால் நீரோட்டம் என்ற கதிர்ப் பரப்பு உடையது. இவை  
      இப்பி சங்குகளிற் பிறப்பன. கரும்பிற்படும் முத்தம் இறுகிக்  
      கடினமானது. “கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங்  
      கழுமலமே“ (மேகராகக் குறிஞ்சி - 6) என்ற ஆளுடைய பிள்ளையார் 
      தேவாரமுங் காண்க. மூங்கின் முத்துக் குளிர்ந்த கிரணங்களும்,  
      யானை முத்துத் தொகுதியாய்க் கூடிய ஒளியும் உடையன என்பர்.  
      இவற்றின் விரிவுகள் திருவிளையாடற் புராணம் மாணிக்கம் விற்ற  
      படலத்துள்ளும் பின்னும் இவைகட்குரிய கலைஞான நூல்களுள்ளும்  
      கண்டு கொள்க. 
       
           முன்பாட்டினும் இப்பாட்டினும் கடலினின்றும் நாடு சென்று, 
       
      அங்கு நின்று மலையேறிச் செல்லும் பொருள் வைப்பு முறையும்  
      காண்க. உயிர்களை, அவை வீழ்ந்து நின்ற கடலாழத்தினின்றும் ஏற்றி  
      மலையுச்சியிற் சேர்த்தி வைக்கும் நாடு என்பது உட்குறிப்புப்  
      போலும். இது பற்றியே வரும்பாட்டில் “உலகேறும் பெறுமை 
      யுடையதுதான்“என்றதும் காண்க. “திருத்தொண்டத் தொகையாலுலகு  
      விளங்க வரும், பேறு தனக்குக் காரணராம்“ (501) என முடித்துக்  
      காட்டியபடி, இந்நாயனார் உலகிற்குதவிய பேறு இந்நாட்டின்  
      நன்மைக்குப் பொருத்தமுடைத்து எனப் பொருந்தக் காட்டிய  
      குறிப்பும் காண்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் கூறும்  
      வைப்பு முறையை (திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும்  
      பிற இடங்களிலும் காண்க.) மாற்றி நெய்தலை முதலாக வைத்துக்  
      கூறியதற்கும் இதுவே கருத்துப் போலும். அன்றியும், இந்நாடு  
      மழுலீசியதாற், கடலினின்றும் போந்துபெற்ற நாடாதலின்  
      அப்பிறப்பிடத்தின் சிறப்பும் பண்பும் தோன்ற நெய்தலை முதலிற்  
      கூறினார் என்றலுமாம். சிருட்டி முறையிலும் நீரினின்றே  
      நிலனுண்டாவதா மென்பர். 
       
           தீதிலாத் திருத்தொண்டத் 
      தொகை (35) என்ற  
      இடத்துப்பார்க்க. வளன் பலவற்றுள்ளும் முத்துக்களை எடுத்துக்  
      கூறிச் சிறப்புரைத்ததும் அக்குறிப்பினைப் பற்றியதேயாம். என்னை?  
      முத்து - விடுபடுவது என்ற பொருள் தருதலானும், 
      முத்தியும்  
      அக்காரணம்பற்றியே அப்பெயர் பெறுதலானும், இங்கு இந்நாடு  
      நெய்தலேயாக - மருதமேயாக - குறிஞ்சியேயாக - எங்கணும்  
      உயிர்களுக்கு வீடுபேற்றினையே காட்டும் முத்திப்பொருள் தருவதாம்  
      எனப் பொருத்திக் கூறியபடி. திருமணம் காண வந்தார்க்கெல்லாம்  
      முத்திப் பேறளித்த எமது ஆளுடைய பிள்ளையாருக்குத் 
      திருமண  
      அணிகலன் முற்றும் முத்துக்களாற் செய்து குறியிட்டுக் காட்டிய  
      ஆசிரியர் திறமுங் காண்க. (திருஞான - புரா 1211 முதல் 1215 வரை  
      திருப்பாட்டுக்கள்). அச்சிறப்பினை இங்கு வைத்து இதன் உள்ளுறை  
      சிறப்பையும் அணிநலனையுங் கண்டு களிக்க. உயிர்களின்  
      நால்வகைத் தோற்றமும், அவை பெறும் நால்வகைப்பேறும் குறிக்க  
      நால்வகை முத்துக் கூறினார் என்றலுமாம்,முல்லையும் உடன்  
      கொள்ளப்படுமென்று முன்னர்க்குறித்தற் கேற்பக் குறிஞ்சி (வரை)க்கு  
      இரண்டு முத்துக்கள் கூறிய பொருத்தமுங்காண்க. 
       
           மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார் - 
      இம்முத்துக்கள்  
      இவர்களின் மூரலேயாம் என்று உவமிக்கப் பெறுகின்ற  
      பல்வரிசையினையுடைய பெண்கள். மூரல் - புன்முறுவல். பற்கள்  
      முத்துப்போல்வன என்றுவமிப்பது வழக்கு. முத்துக்கள் பல்போல்வன  
      என சிறப்புக்காண்க. நகை - ஆகுபெயராய்ப் 
      பல்வரிசையை  
      உணர்திற்று. 
       
           அறிவில்லாத பொருள்கள் ஆகிய கடல், கரும்பு, மூங்கில், 
       
      யானைக் கோடு இவை தாமும் அந்நாட்டில் முத்துடையனவாயின்,  
      அறிவும் உயிரும் உள்ள பெண்களும் முத்துடையவர்களேயாம்  
      என்றார். அம்முத்துக்கள் எவையும் எமது மூரலுக்கு ஒப்பாகா என  
      அவைகளைக் கண்டு அவர் நகைக்கின்றனர் என்ற நயமுங் காண்க. 
       
           தெரிந்து முறைகோக்கும் 
      - ஒளி - வடிவு - கனம் - கதிர்  
      என்பனவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளைத் தெரிந்து எம்முறையில்  
      முறைப்படுத்திக் கோத்தால் அழகும், அதிக மதிப்பும் பெறுமோ  
      அம்முறையிற் கோக்கின்ற, இப்பாட்டாலே அந்நாட்டுக் கருப்பொருள்  
      உரிப்பொருள்களின்சிறப்பும், நீர்வளம், நிலவளம், பொருள்வளம்,  
      மக்கட்சிறப்பு, தொழில் முதலிய பலவும் அழகுபெற ஆசிரியர்  
      முறைகோத்து அமைத்தது கண்டு களிக்க. 2
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |