495. நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி
                             நலஞ்சிறந்த
 
  பதிக ளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல்
                           வழிச்செல்வார்
முதிரு மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு
                            திருக்கூட்டத்
தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந்
                         தொழப்பெற்றார்.
5

     (இ-ள்.) வெளிப்படை. கங்கையையும் பிறைச்சந்திரனையும்
சூடிய சடையினையுடைய சிவபெருமான் விரும்பி வெளிப்பட்
டருள்வதால் நன்மையிற் சிறந்த திருப்பதிகள் எங்கெங்கும்
கும்பிட்டுச் செல்லும் ஆசையினால் வழிச்செல்வாராய், (அவ்வாறு
கும்பிடுகின்ற முறையிலே) முதிர்ந்த அன்புடையார்களாகிய
பெருந்திருத்தொண்டர்களது திருக் கூட்டத்தின் எதிரே முன்னர்த்
துதித்துப், பின்பே இறைவரது திருப்பாதங்களைத் தொழும் பேறு
பெற்றார்.

     (வி-ரை.) நம்பர் - நம்பி அடைதற்குரியார். “நம்புவார்க்
கன்பர் போலு நாகவீச் சரவ னாரே“ என்ற திருநேரிசை காண்க.
இவர்பால் வைத்த நம்பிக்கை எஞ்ஞான்றும் எவ்விடத்தும்
யாவர்க்கும் பொய் போவதில்லை என்பது. “நாளுமற் றவர்க்கு நல்கு
நம்பர்தா மளக்கி னன்றி“ - எறிபத்தர் புராணம் - 56.

     விரும்பி நலஞ்சிறந்த பதிகள் விரும்பி - விரும்ப.
விரும்புதலால். விரும்பி வெளிப்பட வீற்றிருந்தருள்வதனால்.
நலஞ்சிறத்த
லாவது வெளிப்பட்டருளிய அன்றுமுத லின்றுவரை
அடைந்தார்க் கெல்லாம். அவ்வவர்க் கேற்றபடி சிறந்த நன்மை தந்து
விளங்குதல்.

     எங்கும் கும்பிட்டுப் படருங் காதல் வழிச் செல்வார் -
சிவத் தலங்கள் தோறும் சென்று வழிபடும் ஆசையினாற் புறப்பட்டுப்
போவார். சிவத் தலயாத்திரை செய்தலின் அவசியமும் பயனும்
குறித்தவாறு. இறைவன் விருப்பு வெறுப்பில்லாதவனாகவே ஒவ்வொரு
தலம் அவன் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாயிற்
றென்றதென்னையோ? எனின், பசுவின் உடம்பில் இரத்தத்துடன்
கலந்து எங்கும் பரவும் அமுதமாகிய பால் அதன்மடியிலே
சுரக்கின்றதுபோல, இறைவன், சில இடங்களிலே குறித்த காரணத்தின்
பொருட்டுக் குறித்தபடி வெளிவருவன் என்க. திருவானைக்காவிலே
வெண்ணாவலின் கீழ் வெளிப்பட்டு யானைக்கு அருளிய பின்
“செழுநீர்த் திரளாக“ இன்றும் வீற்றிருந்தருள்கின்றார் என்பது
போலக் கண்டு கொள்க. புள்ளிருக்கு வேளூர் என்னும்
வைத்தீசுவரன் கோயில் போன்ற அவ்வத்தலங்களில் அவ்வச்
சிறப்புத் தோன்ற அருள் புரிந்து விளங்குதலும் காண்க. ஒரு
தலத்திற் கும்பிடுதலே அமையும்; எங்குஞ் சென்று கும்பிடுதல்
எற்றுக்கு? எனின் மேற்சொல்லியவாறு ஒவ்வோர் தலங்கள்
ஒவ்வோர்வெளிப்பாட்டிற் சிறந்து விளங்குதலின் அவ்வப்பயன்
குறித்தார் அவ்வத்தலங்களைக் கும்பிடுதல் அமையும். பலதலமும்
படர்ந்து பரவுவோர் எல்லாப் பயனுமெய்துவர். அன்றியும்
தலவழிபாடு, இறைவன் இங்குள்ளான், அங்குள்ளான் என்று செல்லச்
செல்ல அவன் எங்குமுள்ளான் எனக் கண்டு வழிபடக் காரணமாம்.

“மூர்த்திதலந் தீர்த்த முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே“

என்பது தாயுமானார் வாக்கு. இத்தல யாத்திரையின் பயனையும்
இன்றிமையாச் சிறப்பையும் உலகிற் கறிவுறுத்தும் பொருட்டே நமது
பரமாசாரிய மூர்த்திகளாகிய ஆளுடைய பிள்ளையார் முதலியோர்
யாவரும் தலங்கள் தோறும் படர்ந்து வழிபட்டு உலகிற்கு
உபதேசித்துச் சென்றனர். அவர்கள் சென்று காட்டிய தலங்களே
இன்றைக்கும் பாடல்பெற்ற தலங்கள் எனச் சிறப்பா யறியப்பெற்றுத்
தம்மை அடைந்து விதிப்படி வழிபட்டோர்க்கு எல்லா
நன்மைகளையும் இன்றைக்கும் சிறக்க அளித்து விளங்குகின்றன.
“ஆலயந் தானும் அரனெனத் தொழுமே“ என்ற சிவஞான
போதப்படி உத்தமமான சிவஞானிகளும் சீவன்முத்தர்களுமான
பட்டினத்தடிகள் முதலாயினார்களும் தலயாத்திரையைக் கைக்கொண்
டொழுகி நின்றனர். வைணவ ஆசாரியர்களும் இக்கருத்தையே
தழுவி ஒழுகிநின்றமையும் காண்க. கிறித்தவர், முகமதியர் முதலிய
பிற சமயவாதிகளும் தத்தம் ஆசாரியன் மார்கள் சென்ற வழியே
அவ்வப்பயன் கருதித் தலயாத்திரை செய்யும் மரபும் குறிக்க. பல
ஊரும் செல்லும் யாத்திரை நற்பயன் தரும் என்ற உலகநிலை
யொழுக்கக் கொள்கையும் காண்க. எனவே சிலத்தல யாத்திரையின்
இன்றியமையாச் சிறப்பையும் பயனையும் பற்றி இற்றை நாள்
வினவுதல் அறியாமையேயாம். ஆயினும் இந்நாண் மக்கள் சிறந்த
ஊதியமான இச்சிவத்தலயாத்திரையினைக் கைவிட்டுப் பலபட
அலைந்து ஒழுகி வருகின்றமை இந்நாட்புது “நாகரிக“த்தின்
தீயபயன்களில் ஒன்றென்றே கருதுவோம். தலயாத்திரை
செய்வோரிற்பலரும் ஆரவாரத் தன்மையினராகிச் சென்று
வருகின்றனரேயன்றி உண்மை வழிபாட்டின் றிறனறியாது
செய்கின்றனர். தலயாத்திரை நெறியும் திருக்கோயில் வழிபாடும்
உள்ளபடி நடைபெறுமாயின் நமது திருக்கோயில்கள் பலவும்
இப்போது நாம் காணுமாறு கேட்பாரற்றகி லமான நிலைமையில் இரா
என்பது திண்ணம்! விறன்மிண்ட நாயனாரும் நமது பரம
சாரியங்களும் நடந்து காட்டிய நல்வழியினை அறிந்து இனியாவது
நம்மவர்கள் உள்ளபடி பின்பற்றி ஒழுகி நலஞ்சிறப் பார்களாக!

     முதிரு மன்பிற் பெருந்தொண்டர் - தொண்டு புரிந்து
வருதலாலே இறைவனிடத்து அன்பு மேன்மேல் முதிர்ந்து வரும்
என்பது. இடைவிடாது தைலதாரை
போல ஒழுகிவரும் அன்பு
என்றலுமாம். “இடையறா அன்புனக்கென், னூடகத்தே நின்றுருகத்
தந்தருளெம் முடையானே“ - திருவாசகம். பெருந்தொண்டர் -
தொண்டிற் சிறந்த பெரியார், “உண்மை நின்ற பெருகுநிலைக்
குறியாள ரறிவு தன்னை“ - திருச்செங்காட்டங்குடி
திருத்தாண்டகம்.


     முறைமை நீடு திருக்கூட்டம்
- திருத்தொண்டின்
முறைமையிலே நீடி வருகின்ற தொண்டர்களின் திருக்கூட்டம்.

“திரண்டபெருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ்
                                  சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோ
                                  லிசைந்த வன்றே“
                             - திருநா - புரா - 233.

“மண்மேல் மிக்கசீ ரடியார்“   - தடுத் - புரா - 188.

என்பன முதலாகப் பாராட்டப்பெற்ற திருக்கூட்டம்.

     முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்
பெற்றார்
- தொண்டர் கூட்டத்தைப் பணிதலை முதலாவதாகவும்,
இறைவனைப் பணிதலை அதற்கடுத்து இரண்டாவதாகவும்
கொண்டொழுகியவர் இந்நாயனார். தொழப் பெற்றார் என்றதனால்
இவ்வாறு வரம் பெற்றவர் என்பாரு முண்டு. தொண்டர்களே
முதலிற்றொழுதற்குரியார் என்பது. இவர்கள், தொண்டடிலே தாம்
ஈடுபட்டுப் பழகியவர்களாய்த், தம்மை அடைந்தாரையும் அவ்வாறு
ஈடுபடச் செய்து இறைவன்பாற் செலுத்துவிக்கும் கருணையும்
ஆற்றலும் உடையார். திருவாரூரைத் தரிசிக்க அணையும்போது
ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் ஆளுடைய
நம்பிகளும் தம்மை எதிர்கொண்டு வணங்கிய திருத்தொண்டர்
கூட்டத்தைப் பரவித்தொழுது திருப்பதிகம்பாடி, அதன்பின்னரே
இறைவனது திருமுன் சென்று வணங்கியமுறையும் பிறவும் இங்கு
வைத்துக் காண்க.

     முன் பரவும் அருள் பெற்றே - அங்ஙனம் பரவுதற்கும்
திருவருள் கூட்டவேண்டும் என்க. ஏகாரம் தேற்றம். முன் -
திருமுன்பு என்றலுமாம். 5