496. பொன்றா ழருவி மலைநாடுகடந்து கடல்சூழ்
                             புவியெங்குஞ்
 
  சென்றா ளுடையா ரடியவர்தந் திண்மை யொழுக்க
                            நடைசெலுத்தி,
வன்றாண் மேருச் சிலைவளைத்துப் புரங்கள்
                       செற்ற வைதிகத்தேர்
நின்றாரிருந்த திருவாரூர் பணிந்தார் நிகரொன்
                              றில்லாதார்.

6

     (இ-ள்.) பொன்தாழ்...செலுத்தி - பொன் கொழிக்கும் அருவி
களையுடைய மலைநாட்டினைக் கடந்து, கடல்சூழ்ந்த உலகில்
எங்கெங்கும் வழிச் சென்று, இறைவனடியார் திண்மை யொழுக்கநடை
நிலைபெறச் செலுத்தி; வன்தாள்...பணிந்தார் - வலிய
அடியினையுடைய மேருமலையை வில்லாக வளைத்துத் திரிபுரங்களை
அழித்த வைதிகத் தேரின்மீது நின்றாராகிய சிவபெருமான் வீற்றிருந்த
திருவாரூரைச் சென்று பணிந்தார்; நிகர் ஒன்று இல்லாதார் - யாரும்
எவ்வாற்றானும் தமக்கு ஒப்பில்லாத வராகிய விறன்மிண்ட நாயனார்.

     (வி-ரை.) பொன் தாழ் அருவி - மலைகளினின்றும் கீழ்
ஒடிவரும்போது அருவிகள் பொற்பொடிகளை நீரில் அடித்து
வருகின்றன என்க. அருவிகள் ஓடுமிடத்துக் கீழ் மணலிற் பொன்
தாழ்ந்து படிந்துள்ளது என்றலுமாம்.

     ஆள் உடையார் - யாவரையும் தமக்கு ஆளாக உடைய
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான். “தேவரையும் மாலயன்
முதற்றிருவின் மிக்கார், யாவரையும் வேறடிமை யாவுடைய
வெம்மான்“ (183) என்றதுங் காண்க. ஆளுடையார் அடியார்
உடையாரது அடியவர் என ஆறாம் வேற்றுமைத் தொகை என்க.
தம் திண்மை ஒழுக்கம்
- அவர் தமக்கே உரிய திண்ணிய
நல்லொழுக்கம் - அடிமைத்
திறம். இதனையே
“திருத்தொண்டினுறைப்பு“ - அப்பூதி - புரா - 13, “அடியுறைப்பு“ -
திருஞான
- புரா - 1083 எனக் கூறுவது காண்க.

     ஆளுடையாருடையவும் அடியவருடையவும் என உம்மைத்
தொகையாக்கியுரைப்பினுமமையும். இவ்விரண்டும் பற்றிய இச்சரித
நிகழ்ச்சியை மேல் வரும் இரண்டு பாட்டுக்களினும் கூறுதல் காண்க.
விதிப்படி இறைவனை வணங்குதலும், அடியாரைப் போற்றுதலும்
என்ற இவ்விரண்டுமே திண்மை யொழுக்கமாம். தாம் இதனின்
வழுவாதியற்றலுடன், பிறர் இதில் வழுவக் கண்டபோது வற்புறுத்தி,
விறலும் மிண்டுங் கொண்டு அவர்களைத் திருந்தச் செய்தலே இங்குத்
திண்மை ஒழுக்க நடைசெலுத்தி எனப் பெற்றது. செலுத்தி -
நடையிலே தம்மைச் செலுத்தியும், பிறரையும் நடையினிற்
செலுத்துவித்தும் என இருபொருளும் பெற நின்றது. இது சரிதக்
குறிப்பு. எவ்வாறு செலுத்தினார் என்றதற் குதாரணம் வரும்பாட்டிற்
குறித்தபடி. அடியாரை முன்னர்ப் பரவும் ஒழுக்கமுடையராதலின்
இதனை முதலிற் கூறினார்.

     வன்தாள் மேருச் சிலை - வன் - தாள்
- வலிய தாள்
என்பது அசலம். சலியாத் தன்மை குறித்தது. “நிலையிற்றிரியா“
திருத்தல் என்பது குறள். சிலை-மலை. வலியதாளுடைமை ஏனைய
எல்லா மலைகளுக்கும் பொதுவிலக்கணமாயினும் மேரு மலைக்குச்
சிறப்பிலக்கணமாம். “மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை,
கூறுமிவ்வானி னிலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனந் தண்மா
மலயத்தூ, டேறுஞ்சுழுனை யிவைசிவ பூமியே“ (9-ம் தந்திரம் 99),
“மேருவி னோடே விரிகதிர் மண்டலம்“ (8-ம் தந்திரம் - 344)
முதலிய திருமந்திரங்கள் காண்க. மேரு, தான் அசையா திருப்ப,
இதனைச் சுற்றி ஞாயிறு முதலிய மண்டலங்களும் பூமியும் சுழல்வன
என்றும், இதுவே பொன்மலை என்றும்,இதன் பெருமையைப் பலவாறு
சாத்திரங்களும் புராணங்களும் பேசும். யோக நூல்களும் இதன்
பெருமையை விதந்து பேசுவன. சிலை வளைத்து - இறைவன் திரிபுர
சங்கார காலத்து மேருமலையினையே வில்லாக வளைத்துப்
பிடித்தனர் என்பது வரலாறு. சிலைவளைத்தது மாத்திரமேயன்றி
அதனின்றும் அம்பு ஒன்றும் எய்யப் பெறாமலே புரமெரித்த காரியம்
நிகழ்ந்தது என்பார் வளைத்துச் செற்ற என்று குறித்தார்.
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல், உளைந்தன முப்புர
முந்தீபற, ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற“ என்பது திருவாசகம்.
சிலை - வன்றாளுடையதாய் அசலமாயினும், இறைவன் கையில்
வளைக்கப் பெற்றதென இறைவனது வரம்பில்லாற்றலுடைமை
விளக்கப் பெற்றது. சிலை - வில் என்று கொண்டு மேருவை
வில்லாக வளைத்து என்றலுமாம்.

     வைதிகத்தேர் - தேவங்களாகிய குதிரைகள் பூண்ட தேர்.
சிவனைத் தெய்வமாக வுடையது சைவம் என்பது போல
வேதங்களைக் குதிரையாக உடையது வைதிகம் எனத் தத்திதாந்த
பதமென்பது வடமொழி வழக்கு.“வானோ, ரெல்லாமொரு தேராயயன்
மறைபூட்டிநின் றுய்ப்ப“ - (பண் - நட்டபாடை - திருவீழிமிழலை-
6.) என்பது ஆளுடைய பிள்ளையார் தேவாரம். இழுத்துச் செல்லும்
ஊர்தியினாலே தேரின்பேர் வந்தது. குதிரை வண்டி - மாட்டுவண்டி
- புகைவண்டி என்ற வழக்குகள் காண்க. “முப்புரம் வெந்தவிய
வைதிகத்தே ரேறிய வேறு சேவகனே“ - திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா - கோயில்
- 10.

     தேர் நின்றார் இருந்த திருவாரூர் - வேதங்கள் சிவனையே
மேற்கொள்வன - வேறெவரையும் மேற்கொள்ளா ஆதலின்
வைதிகத்தேர் நின்றார். வேத சிரத்திலே நின்றவர். நிற்றல் -
நீங்காது நிலைத்து இருத்தல். “எங்குஞ்சிவனென நின்றாய் போற்றி“
- “எம்மடிக ணின்றவாறே“ என்ற திருத்தாண்டகத் திருவாக்குக்கள்
காண்க. வேதங்களில் நின்ற அவர் திருவாரூரில் இருந்தார் என்ற
நயமும் காண்க. வேதத்தில் நிற்பதினும் திருவாரூரில் இருப்பதில்
விருப்புடையார் என்பது குறிப்பு. “செற்றவர்தம் புரமெரித்த சிவனே
போற்றி திருமூலட்டானனே
போற்றி போற்றி“, “சிலையா லன்றெயி
லெரித்த சிவனே போற்றித் திருமூலட்டானனே போற்றி போற்றி“
முதலிய திவாரூர்த் திருத்தாண்டகங்களிற் புரமெரித்த ஞான்று வேத
இருதயத்தில் விளங்கிய சிவனையே திருவாரூர்த் திருமூலட்டானத்
தெழுந்தருளி யிருந்தாராக அப்பர் பெருமான் போற்றியிருத்தல்
காண்க. திரிபுரமெரித்த வரலாறு மாபுராணங்கள் கூறும்.

     “குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி காற்றின்
மும்மதில், வென்றவா றெங்ஙனே“ என்ற திருவாமாத்தூர் - (பண் -
சீகாமரம்) ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், “ஈரம்பு கண்டில
மேகம்பர் தங்கையில், ஓரம்பே முப்புர முந்தீபற, ஒன்றும் பெருமிகை
யுந்தீபற“, “தச்சு விடுத்தலுந் தாமடி யிட்டலும், அச்சு முறிந்ததென்
றுந்தீபற, அழிந்தன முப்புர முந்தீபற“ என்ற திருவாசகங்களும்
காண்க. “நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம், பாணந்தான்
மண்டின்ற பாணமே - தாணுவே, சீராரு மாரூர்ச் சிவனேநீ
யெப்படியோ, நேரார் புரமெரித்த நேர்“ என்று பின்னாட் புலவர்
பாராட்டியதும் காண்க. அச்சு முறிந்த தேராதலின் நின்றார் என்ற
சுவையும் காணத்தக்கது. இருந்த என்றதனால் தேரில் நிற்பதற்கு
முன்னமே ஆரூரில் எழுந்தருளியவர் என்பதும் குறிப்பு. இது
திருவாரூரில் பழமை காட்டும். “புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே“ என்ற திருத்தாண்டகமும்
சிந்திக்க.

     நிகர் ஒன்று இல்லாதார்
- சகல சாத்திரங்களின்
உள்ளுறையுண்மை அடியார் பணியேயாம் என்றதைக் காட்டும்
திருத்தொண்டத் தொகையை உலகுக்கு உபகரிக்க வந்தவர் ஆதலின்
நிகரில்லார் தனக்கு நிகரில்லாத - உவமனில்லாத இறைவனை
அடைந்தாராதலின் தமக்கு நிகர் ஒன்றில்லாதாராயினர் என்றலுமாம்.
ஒன்று - ஒன்றாலும் - முற்றும்மை தொக்கது. 6