241. இடம ருங்குதனி நாயகி காண
     வேழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து
 
  நடந வின்றருள் சிலம்பொலி போற்று
     நான்ம றைப்பதியை நாளும்வ ணங்கக்
கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங்
     காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந்
தடம ருங்குவளர் மஞ்சிவரிஞ்சித்
     தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.
95

     (இ-ள்.) இடமருங்கு........காண - இடப்பாகத்தே உள்ள
சிவகாமசுந்தரி அம்மையார் காண; ஏழ்......உய்ய - ஏழுலக
உயிர்களும் உய்திபெற; எடுத்து......பதியை - எடுத்துக் கூத்தாடி
யருளும் திருச்சிலம்பொலி போற்றுகின்ற நான்மறைகளும் துதிக்கும்
இத்தலத்தை; நாளும்.......மேவி - நாமும் தினமும் வலங்கொண்டு
வணங்குவோம் என்ற கருத்துடன் கடலானது சூழ்ந்து வளைந்தது
போன்ற காட்சி மிக்கதாய்; மிகுசேட்செல......கிடங்கை - மிக
உயரப்போய் மேகந் தவழ்தற் கிடமாகிய திருமதிற் புறத்துள்ள
குளிர்ந்த அகழியை; எதிர் கண்டு மகிழ்ந்தார் - நம்பிகள் செல்லும்
வழியிலே எதிரிலே பார்த்து மகிழ்ச்சி யடைந்தார்.

     (வி-ரை.) நாயகி காண - புவனமுய்ய - உலக முய்வது
நாயகி காண்பதன் பயனாம் என்பது சாத்திரம். வரிசை 42-ம்
பாட்டினையும் உரையினையும் காண்க; ஏழ்பெரும் புவனமுய்ய -
ஏழாகிய உலகங்களிலுள்ள எழுவகைத் தோற்றத்தனவாகிய
உயிர்களும் உய்திபெற - என விரித்துப் பொருள் கொள்ளத்தக்கது.
புவனம் - ஆகுபெயர்.

     எடுத்து நடநவின்றருள் சிலம்பொலி - (குஞ்சித்த
சேவடியைத்) தூக்கிக் கூத்து ஆடுவதால் சிலம்பின் எழுகின்ற ஒலி.
திருவடியை - என, எடுத்து - என்பதற்குச் செயப்படுபொருள்
வருவித்துரைக்க. தூக்கிய பாதத்தில் அணிந்த சிலம்பு
நடஞ்செய்தலால் ஒலிக்கும் என்க. இது சிருட்டித் தொடக்கம்.
நாதத்தாற் சிருட்டி தொடங்குதலின் அது சிலம்பொலி எனப்பெறும்.
- நாதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயை தனக்குத்தாரகமாகிய
அத்தன்றாள்களாகிய ஞானக்கிரியா சத்திகளினடங்கிநின்று தன்
காரியமாகிய அதனைத் (நாதத்தைத்) தோற்றுவிக்கும். ஆதலின்
சுத்தமாயை சிலம்பும், நாதஞ் சிலம்பொலியுமாமென வழங்கப்பெறும்.
நல் வினை யொலி என்பதும் அது. “திருச்சிலம்போசை
யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற“
(திருவுந்தியார்.) “சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே“
(திருவாசகம்.) - இது ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள்
உரைக்குறிப்பு.

     சிலம்பொலி போற்றும் - அச்சிலம்பொலியை என்றும்
வணங்குகின்ற. ‘சிலம் பொலியுடன் போய்ப், புக்கழுந்தினர்' என்று
திருவாதவூரர் புராணம் காண்க.

     நான்மறைப்பதி - வேதங்களாலே துதிக்கப்பெறும் தலம்.
வேதம் விதித்த அறங்களை வளர்க்குந் தலம் என்றலுமாம். “வேதங்க
டொழுதேத்தும் விளங்குதில்லை“ என்ற திருவாசகமும், ‘கற்றாங்
கெரியோம்பி' என்ற தேவாரமும் காண்க.

     கடல்வலங் கொள்வதுபோற் புடைசூழுங் காட்சி - கடலே
தில்லையைச் சூழும் அகழியாக வந்ததோ என்ற காட்சி. அகழி -
மிகுந்த பரபரப்பும் ஆழமும் உடைமை குறித்தவாறு.

     நாளும் வணங்க - நித்தமும் வணங்கும்பொருட்டு வலமாகச்
சுற்றிவருவது போல. வணங்கி நாமும் உய்வோம் என்ற
கருத்துடையதுபோல. இது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. கடல்
தில்லைக்கு 10 நாழிகை யளவில் உள்ளது. ‘ஒவ்வோர் விசேடத்
திருநாட்களில் இறைவன் கடற்கரைத் தீர்த்தத்திற்கு
எழுந்தருளும்போது அவரையும் உடன்செல்லும் அடியவர்களையும்
வணங்கக் கிடைக்கும் பேறுமட்டும் போதாது; எப்போதும் (தினமும்)
வணங்கிக்கொண்டே கிடப்போம்' என்னும் கருத்துடன்
வலங்கொள்வதுபோல என்று குறிக்க நாளும் என்றார். ‘கழிசூழ்
தில்லையுள்' என்ற தேவாரமுங் காண்க. கொள்ளிடமும் - கழிகளும்
- கிழக்கு, தெற்கு, வடக்கு என்ற மூன்றுபுறமும் சூழ்ந்து இன்றும்
காணப்படும். மேற்கில் இருந்தது பிற்காலத்துத்
தூர்ந்துவிட்டதுபோலும். நாற்புறத் திருவாயில்களும் இதனை
வலியுறுத்தும் 95