499. ஞால முய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின்  
  ஓசீலமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பாடச்
                             செழுமறைகள்
லமிடவு முணர்வரியா “ரடியா ருடனாமுள“
                               தென்றால்,
ஆல மமுது செய்தபிரா னடியார் பெருமை
                             யறிந்தாரார்?
9

     (இ-ள்.) வெளிப்படை. உலகம் உய்ய, நாம் உய்ய, சைவ
நல்வழியினது சீலம் உய்யத் திருத்தொண்டத் தொகையை முன்னே
நம்பிகள் பாடச், செழிய மறைகள் ஓலமிட்டும் உணர்தற்கரியாராகிய
சிவபெருமான் “நாம் உள்ளது அடியார்களுடனே யாம்“ என்று
சொல்வாரானால், விடத்தை அமுதமாக்கிய இறைவனடியார்
பெருமையை யாவர் அறிந்தவர்கள்?

     (வி-ரை.) திருத்தொண்டத்தொகை நம்பி பாட என்று
மாற்றிக்கூட்டுக. தொகை பாடியதனாற் சைவ நன்னெறியின் சீலம்
உய்ந்தது; அது உய்யவே நாம் உய்ந்தோம்; நாம் உய்யவே ஞாலமும்
உய்ந்தது என்று காரியகாரணத் தொடர்பு படுத்துக.

     சைவ நல் நெறி - நல் - இடைப்பிறவரல். 467 பார்க்க.
நெறியின் சீலம் - அதன் நல்லொழுக்கம்; இங்கு அடியார்
பணியைக் குறித்தது. அதுவே இப்புராணத்தினுள்
எடுத்துக்காட்டப்பெறும் உயர் குறிக்கோளாம். உண்மை நுல்களின்
உட்குறிப்புமாம். “ஞாலந் தான்பர வப்படு கின்ற நான்மறை யங்க
மோதிய நாவன், சீலந் தான் பெரிதும் மிகவல்ல சிறுவன்வன்
றொண்டன்“ - சுந்தரர் - தக்கேசி - திருவொற்றியூர் - 10.

     சீலம் உய்ய - இவ்வொழுக்கம் உலகத்திலே நிலை பெற.
நிலைபெறுதல் திருத்தொண்டத் தொகையினால் உண்டாயது
என்பதாம். சீலம் நிலைபெறுதலாவது, “சென்ற காலத்தின் பழுதிலாத்
திறமு மினியெதிர் காலத்தின் சிறப்பும், இன்றெழுந்தருளப் பெற்றபே
றிதனா லெற்றைக்குந் திருவளுடையேம்“ (திருஞா - புரா - 659)
என்று குலச்சிறை நாயனார் ஆளுடைய பிள்ளையாரைத் துதித்தவாறு,
திருத்தொண்டத் தொகை பாடப்பெற்ற அதனால் எல்லாக் காலத்தும்
எல்லாவிடத்தும் உள்ள எல்லா அடியார்களும் துதிக்கப் பெற்றார்கள்.
அதனாலே அவர்களெல்லாருடைய திருவருளுக்கும் எவ்விடத்தும்
எஞ்ஞான்றும் இதனைத் துதித் தார்களெல்லாரும் இலக்காகி
உய்கின்றனர் என்பதாம்.


     நாம் உய்ய நாம்
- அத் திருத்தொண்டத் தொகையினை
அருளிய நம்பிகளைப் பரமாசாரிய மரபிலே வைத்துத்
தொழுதொழுகும் அடியார்களாகிய சைவ சித்தாந்த மரபினர்.
நம்பிகளது தொகைக்கு விரிநூலாகிய இப்புராணத்தைக்கேட்டு
அநுசந்திக்கும் நாம் என்றலுமாம். ஆசாரியரது உபதேசப் பயன்
முதற்கண்ணே அவரை ஆசாரியராகக் கொண்டொழுகும்
பரம்பரையினர்க்கே யாகும்; ஆதலின் சீலமுய்ய என்றதற்கடுத்து
நாம் உய்ய
என்றார்.

     ஞாலம் உய்ய - சைவ மரபொன்றே “தாமின் புறுவ துலகின்
புறக்கண்டு காமுறு வதாகலின் அதனை அடுத்து நம்மால் சைவ
சித்தாந்த மரபினாலே ஞாலமுய்ய என்றார். என்னை? “நான் பெற்ற
வின்பம் பெறுகவிவ் வையகம்“ (திருமூலர் திருமந்திரம்), “ஆழ்க
தீயதெல் லாமர னாமமே, சூழ்க வையக முந்துயர் தீர்கவே“
(ஆளுனுடைய பிள்ளையார் திருப்பாசுரம்), “மன்று ளாரடி யாரவர்
வான்புகழ், நின்ற தெங்கு நிலவி யுலகெலாம்“ (பெரியபுராணம்)
முதலிய பெருந் திருவாக்குக்கள் சைவ மரபினன்றி மற்றுக் காண்ட
லரிதாமென்க. “திருத்தொண்டத் தொகையா லுலகுவிளங்க“ (501)
என்றதும் காண்க.

“பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழா
   னேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின்மிழலைக்
  கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே“

- 11-ம் திருமுறை ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - 80

என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கும் இங்கு வைத்துக்
கருதத் தக்கது.

     முன்பாட - தேவாசிரியனில் எழுந்தருளிய திருக்கூட்டத்தின்
முன்னர். “தூரததே திருக்கூட்டம் பலமுறையாற் றொழுதன்பு,
சேரத்தாழ்ந்தெழுந்தருகு சென்றெய்தி நின்று“ (347),
“வன்றொண்டா பாடியவ ரெதிர் பணிந்தார்“ (348) என்பன காண்க.
செழுமறைகள் - செழு - நாதத்திற் செழித்த.

     ஓலமிடவு முணர்வரியார் - “மயக்கறு மறையோலிட்டு
மாலயன் றேட நின்றான்“ (432)உரை பார்க்க. பலவாறு சொல்லியும்,
அன்மைச் சொல்லினாற்றுதித்தும், முடிவு காணாது இளைத்துச் சாந்தி
வாசகத்துடன் நின்று விடுவது மறை யென்ப.

     “அடியார் உடன் நாம் உளது என்றால் - நாம் உள்ளது
அடியார்களுடனேயாம். விறன்மிண்டர் உரைத்தபடி நாம் இருப்பது
அவர்களுக்குப் புறம்பேயன்று, உடனே யாம், என இறைவன்
கூறியருளியபடி. இது இறைவன் அடியாருடனே கலந்து நிற்கும்
அத்துவிதத் தன்மை குறித்தது. ஆயின் இறைவன் எங்கும் கலந்து
நிற்றலின் இந்நிலை அடியார்களுக்குமட்டுமே யன்றி எல்லார்க்கு
மொக்குமே? யெனின் ஒவ்வாது; அடியார்களுடன் வெளிப்பட
உடனாய்நிற்பன் என்க. அவருரை தனதுரையேயாக உரைப்பன்;
அவர் செயல் தன் செயலேயாகச் செய்வன்; அவர் கரணங்களைத்
தனது சிவகரணங்களே யாக்குவன். “தான் செய்யுந் தன்மைகளும்
ஆக்கியிடு மன்பர்க்கவன்“ என்பது சாத்திரம். இவ்வாறு
கலந்துள்ளமையாலே அடியாருடன் உள்ளதன்றித், “தில்லைவா
ழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்“ என முதல் எடுத்துக்
கொடுத்ததனாலும் இறைவன் அடியாருடன் உளராயினர். தில்லைவாழ்
அந்தணர்களின் இறைவன் ஒருவராதலையும், அடியேன் என்றதையும்
குறிக்க.

     வன்றொண்டன் புறகென்றுரைப்ப, புனைந்தார்க்கும்
புறகென்றுரைப்பப் பெற்றார்; (அதற்கு) நம்பி தொகைபாட, அரியார்
அடியாருடனாம் உளதென்றால் பெருமை அறிந்தாரார்? என 497,
498, 499 பாட்டுக்களை முடித்துக் கண்டு கொள்க.

     இவ்வாறன்றித், தொகை முன்பாட (விறன்மிண்டர்) “அடியார்
உடனாம்“ என்றது உளதாயிற்று. அதாவது தொகைபாடு முன் புறகு
என்ற அவரே, அது
பாடியபின் உடன் என்று கூறினார். முன்னர்ப்
புறகு என்னவும், பின்னர் உடன் என்னவும் அவரே வல்லர் என்று
பொருள் கூறுவாருமுண்டு. இறைவனார் முதலடியாராய்
அடியாருடனிருக்கும் சீர்மையைப் பெற்றுள்ளது (இத்-தொகை)
என்றால் என்றுரைப்பாருமுண்டு. ஞாலமுய்ய என்பது வேதநெறி
என்றும், நாமுய்ய என்பது ஆகமநெறியாகிய பத்திநெறி என்றும்,
இவ்விரண்டின் சீலங்களை உலகுக் குணர்த்துவது சைவநெறி என்றும்,
வேதநெறியால் வாக்கும், சைவநெறியால் காயமும், பத்திநெறியால்
மனமும் நெறிப்பட்டொழுகும் முறை காட்டுவது
திருத்தொண்டத்தொகை என்றும் இங்கு விசேடங் கூறுவாருமுண்டு.

     என்றால் - என்று காண்போமானால், ஆலமமுது
செய்தபிரான் அடியார் பெறுமை
- மரணத்தைத் தரும்
விடத்தினையே மரணம் போக்கும் அமுதமாகச் செய்தவன்
“ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்“ என்றது திருக்கோவையார்.
அமுது செய்த - உண்ட என்றலுமாம். ஆலத்தை அமுதமாகச்
செய்ததுபோல், புறகு என்ற தீயமொழியினைக் கொண்டே
திருத்தொண்டத்தொகையினையும், அடியார் உடனாம் உளது என்ற
அருண்மொழியினையும் ஆக்கிய அருளாளன் என்பது குறிக்க இங்கு
இச்சிறப்பாற் கூறினார்.

     பிரான்அடியார் பெருமை
- விறன்மிண்டரது பெருமை.
ஆலத்தை அமுதமாக்கிய தமது பிரானைப்போலவே, புறகு என்ற
நம்பிகளைப் பேரடியாராகவும் தேசமுய்யத் திருத்தொண்டத்தொகை
முன்பணித்த ஆசாரியராகவும் ஆக்கிய பெருமையுடையார் என்பது
குறிப்பு. அடியார் என்று பொதுப்படக் கூறியதனால் இது போன்ற
எல்லா அடியார்களது பெருமையுமாம் என்பதும் குறிப்பு.

     பிரான்அடியார்
- இங்குத் தேவாசிரியனிலே இருந்து
புறகென்ற விறன்மிண்டர் பெருமை என்றும், அங்கு அம்மொழி
கேட்டுப் பிழை யுடன்பட்டார் போன்று உடனாம் உளது எனவும்,
தனித்தனி வேறு அடியேன் எனவும், கூறிய பிரானும் அடியாரும்
(நம்பிகளும்) ஆகிய இவர் பெருமை என்றும் இருதிறமும் குறிக்க
வைத்த அழகும் காண்க. யார் என்ற வினா ஒருவருமிலர் என்ற
எதிர்மறை விடை குறித்தது.

     உடனா முளமென்றால்
- என்பது பாடம். 9